பொங்கல் பண்டிகை - 15.1.11
சூரியபகவானின் கருணையால் விளைந்த காய், கனிகளை அவருக்கே படைத்து நன்றி தெரிவிக்கும் புனித நாள் இது. கிராமங்களில் சர்க்கரைப் பொங்கலோடு ஒரு கைப்பிடி கதிர்நெல்லும் வைத்து வழிபடுவது வழக்கம். பொதுவாக வீட்டின் முன் பொங்கல் வைத்து குலவையிட்டு மகிழ்வர். இன்று பெண்டிர் அதிகாலையில் எழுந்து, வாசல் தெளித்து, அழகுற கோலமிட்டு நடுவில் பூசணிப்பூ வைத்து மகிழ்வர். பொங்கல் பானையில் மஞ்சள், குங்குமம் இட்டு பசுமஞ் சளை அதன் கழுத்தில் கட்டி, அடுப்பில் ஏற்றி அவரவர் குல தெய்வத்தை பிரார்த்தித்து பொங்கல் வைப்பர். இன்று முதல் உத்தராயணம் தொடங்குகிறது. இந்த ஆண்டு பொங்கலிட நல்ல நேரம் காலை 10&11 மணி வரை.
போதாயன அமாவாசை - 3.1.11
மகாபாரதப் போருக்கு நல்லநாள் குறித்துத்தர சகாதேவனை அணுகினான் துரியோதனன். எதிரியே ஆனாலும், தன் தொழில் தர்மநெறி தவறாத சகாதேவன், அமாவாசையன்று பூஜை செய்தால் போரில் வெற்றியடையலாம் என்று பதிலளித்தான். இதை அறிந்த கண்ணன் அமாவாசைக்கு முதல் நாளே பித்ருகடனை நிறைவேற்ற ஆரம்பித்தான். அவனைப் பார்த்து பிற அனைவரும் தர்ப்பணம் செய்ய, துரியோதனனும் அன்று அமாவாசை தினம்தான் என நினைத்து போருக்கான பூஜையை மேற் கொண்டான்.
ஆனால், மறுநாள் தானே அமாவாசை, இன்று எதற்கு கண்ணன் தர்ப்பணம் செய்கிறார் என குழம்பிய சூரியனும், சந்திரனும் ஒன்று சேர்ந்து கண்ணனின் முன் வந்து காரணம் கேட்டார்கள். ‘சூரியனும் சந்திரனும் சேர்வதுதானே அமாவாசை? நீங்கள் இருவரும்தான் இங்கே சேர்ந்து வந்துள்ளீர்களே!’ என்று சாமர்த்தியமாக பதில் சொன்னான் கண்ணன். பாண்டவர்களைக் காக்க, துரியோதனாதியரை அழிக்க கண்ணன் கபட நாடகம் ஆடிய இந்த நாளே போதாயன அமாவாசை தினமாகியது.
கனுப்பொங்கல் - 16.1.11
முந்தினநாள் பொங்கல் பானையில் கட்டியிருந்த மஞ்சளைக் கழுவி வீட்டில் வயதான சுமங்கலிப் பெண்களிடம் தந்து தங்கள் நெற்றியில் தீற்றிக் கொள்வது சில குடும்பத்துப் பெண்களின் வழக்கம். அதன் பின்னரே கனுப்பிடி வைப்பர். மொட்டை மாடியை சுத்தம் செய்து, கோலமிட்டு, மஞ்சள் இலையில் மீது வண்ண வண்ண நிறங்களில் சாதத்தைப் பிசைந்து ‘காக்காய்பிடி வைத்தேன், கனுபிடி வைத்தேன் காக்கைக் கூட்டம் போல் எங்கள் குடும்பமும் ஒற்றுமையாய் வாழ வேண்டும்’ என உளமாற வேண்டியபடியே 5, 7, 9, 11 என்ற எண்ணிக்கையில் பிடி வைப்பர்.
இலையின் நுனியில் வெற்றிலை பாக்கு பழம் கரும்புத் துண்டும் இடம்பெறும். இது சகோதரர் நலனுக்காக செய்யப்படும் பண்டிகை. அன்று சகோதரர்கள் தங்களால் இயன்ற பரிசை சகோதரிகளுக்கு அளிப்பர். இன்று வீட்டில் வகை வகையான சித்ரான்னங்கள் செய்து, இறைவனுக்கு நிவேதித்து, உண்டு மகிழ்வர். பொதுவாகவே நம் முன்னோர்கள் காக்கை ரூபத்தில் நம் வீட்டைச் சுற்றிச் சுற்றிப் பறந்தபடி நம் நலனைக் காக்கிறார்கள் என்ற நம்பிக்கை நிலவுவதால், இந்த வழிபாட்டின் மூலம் அவர்களுடைய ஆசியும் நம் கு டும்ப ஒற்றுமைக்குக் கிட்டும் என்பார்கள்.
அனுமன் ஜெயந்தி - 3.1.11
அஞ்சனா தேவிக்கும் வாயு பகவானுக்கும் ஈசன் அருளால் பிறந்தவர் மாருதி. ராமபிரானால் சொல்லின் செல்வன் என அழைக்கப்பட்டவர். சூரியனை சிவப்புநிறக் கனியென விழுங்கப் போனார் அனுமன். அன்று சூரியனை, ராகு மறைத்து கிரகணம் சம்பவிக்க வேண்டிய தினம். அதற்கு அனுமன் இடையூறு விளைவிப்பானோ என்று அஞ்சிய இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் அவனைத் தாக்கினான். அதனால் முகவாய் வீங்கியதால் அனுமன் ஆனான். அனு என்றால் முகவாய் என பொருள்.
பின் வாயு பகவான் வேண்டிக் கொண்டதன் பேரில் அனைத்து தேவர்களும் பற்பல சித்திகளை அனுமனுக்கு அளித்தனர். ராமாயண காவியமே அனுமனால் பெருமை பெற்றது. இன்றும் சுந்தரகாண்டம் படிக்கும் இல்லங்களில் எல்லாம் அனுமனின் சாந்நித்யம் நிலவுகிறது. இவரை பூஜிக்க சனி பீடை விலகுவதோடு வாழ்வில் வளங்கள் பல சேரும்.
மாட்டுப்பொங்கல் - 16.1.11
விவசாயத்திற்கு உதவும் எருதுகளுக்கும், பால் பொழியும் பசுக்களுக்கும் நன்றி கூறும் திருநாள் இது. இன்று காலைவேளையில் வில்வ இலை, வெட்டிவேர், சிவப்பு பூசணிப்பூ, முதல் நாள் பூஜை செய்த மலர்கள் போன்றவை ஊறிய நீரால் மாடுகளைக் குளிப்பாட்டுவர். தொழுவத்தை சுத்தம் செய்து கோலமிடுவர். பின் கோபூஜை செய்து பழங்கள், சர்க்கரைப்பொங்கல் போன்றவற்றை மாடுகள் உண்ணத் தருவர். மாடுகளை வலம் வந்து வணங்குவர்.
மாலையில், மாடு களின் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, வண்ண வண்ண பூக்கள், காகிதங்களால் ஆன மாலையை அவற்றுக்கு சூட்டி அலங்காரம் செய்து, வீதியில் ஊர்வலமாக அழைத்துச் செல்வர். பின் கொட்டிலுக்குத் திரும்பும்போது சூறைத் தேங்காய் உடைத்து ஆரத்தி எடுத்து கொட்டிலுக்குள் அடைப்பர். அந்த நேரத்தில் மாடுகள் சாணம் போட்டாலோ, கோமயம் விட்டாலோ மிகவும் அதிர்ஷ்ட சம்பவமாக நம்பப்படுகிறது. பின் மாடுகளின் கழுத்தில் உள்ள மலர்மாலையை வீட்டின் நிலைப்படியில் கட்டுவர்.
தைப்பூசம் - 19.1.11
மகர ராசியில் சூரிய பகவானும் கடக ராசியின் நடு நட்சத்திரமான பூசமும் ஒன்றை ஒன்று பார்க்கும் நாளே தைப்பூசமாகக் கொண்டாடப்படுகிறது. இன்று பல தலங்களில் தெப்பத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படும். வடலூரில் ராமலிங்க சுவாமிகள் உருவாக்கிய சத்தியஞானசபையில் அருட்பெ ருஞ்ஜோதி தரிசனம் கிட்டும். அதை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வர். இதேநாளில் சமயபுரம் மாரியம்மன் வடகாவேரிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அற்புத தரிசனம் தருவாள்.
போகிப் பண்டிகை - 14.1.11
மழையைத் தந்து பயிர் பச்சைகளைக் காத்த தேவேந்திரனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, இந்திரவிழாவாக போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. சிலப்பதிகார காவியமும் காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரவிழா நடந்ததைக் குறிப்பிடுகிறது. சொர்க்கபோகங்களை அனுபவிக்கும் இந்திரன் போகி எனப்பட் டான். போகியை வரவேற்க வீட்டிலுள்ள வேண்டாதவற்றை எரிப்பது வழக்கம். இது தட்சிணாயனத்தின் கடைசிநாள். மார்கழி மாதம் பாவை நோன்பிருந்த ஆண்டாளை முத்துப் பல்லக்கில் ஏற்றிவரச் செய்து திருவரங்கன் தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொண்ட புனித நாளும் இதுவே.
கூடாரவல்லி - 11.1.11
தினம் ஒரு பாசுரம் பாடி கோவிந்தனை துதித்தாள் கோதை. திருப்பாவை என்ற அந்த பாசுரத் தொகுதியில் ‘கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’ எனத் தொடங்கும் பாடல், 27வது பாசுரம். இந்த பாசுரத்தில் ‘மூட நெய் பெய்து முழங்கை வழி வார’ என்கிறாள் ஆண்டாள். அதாவது கோவிந்தனுக்கு நிவேதனம் செய்யப்படும் சர்க்கரைப் பொங்கலை கையிலெடுத்து வாயில் போடும்போது உள்ளங்கையிலிருந்து முழங்கை வழியாக நெய் வழிய வேண்டுமாம்!
கண்ணனுக்கு வெண்ணெய், நெய் எல்லாம்தான் மிகவும் பிடித்தமானதாயிற்றே! அதன்படி, ஆலயங்களில் நிவேதிக்கப்படும் திருக்கண்ணமுதில் (சர்க்கரைப் பொங்கலில்), தாராளமாக மணம் கமழும் நெய் ஒழுகும். ஆண்டாள் பாடியபடி பக்தர்கள் கூடியிருந்து குளிர்ந்து அந்த தெய்வ பிரசாதத்தை உண்டு மகிழ்வர். இந்த நாள் கூடாரவல்லி என்று போற்றப்படுகிறது.
குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதுப்பொருள்சேரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைகற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக் கும். அமோகமான நாள்.