குடும்பத்தாரோட பேசும்போதுகூட ஒரு தரத்துக்கு ரெண்டுதரமாக யோசிச்சுதாங்க பேசணும். பேச்சில் கடுமையையும் உஷ்ணத்தையும் காட்டறது பெருமை இல்லீங்க. பெற்றோர் உடல்நலத்ல அக்கறை எடுத்துக்கோங்க. எப்பவும் நிதானத்தைக் கைவிட்டுடாதீங்க. இல்லாவிட்டால், அலுவலகத்ல உயர் அதிகாரி, சக ஊழியர்களோட பெரிய மனத்தாங்கல் ஏற்பட்டு விடுமுங்க. பணிந்துபோறதால அவமானமில்லீங்க; ஆதாயம்தான். ஏற்கெனவே வயிற்று உபத்திரவம் இருக்கறவங்களுக்கு உணவில் கட்டுப்பாடு நிச்சயம் வேணுமுங்க. பயணங்கள் அனுகூலமாகவே அமையுமுங்க; ஆனா அப்போ ஏற்படற புதிய அறிமுகங்கள்கிட்ட எச்சரிக்கையா இருங்க. கொடுக்கல்-வாங்கலில் சட்ட சிக்கல் ஏற்படுமுங்க; யாரேனும் சாட்சி முன்னிலையிலேயே இதில் ஈடுபடுங்க. இந்தத் தேதிப் பெண்கள் பேச்சில் இனிமை வேணுமுங்க. ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம் சொல்லுங்க; கேளுங்க. மனம் அமைதியாகும்.
நீங்க என்னவோ யார் வம்புக்கும் போகாம சும்மாதான் இருப்பீங்க; ஆனா பாருங்க பிரச்னை உங்களைத் தேடிவரும். நீங்க சொல்லாத, ஆனா சொன்னதாக நினைச்சுக்கற விஷயத்தாலோ அல்லது நல்ல அர்த்தத்ல சொன்ன விஷயத்தைத் தவறாகப் புரிஞ்சுக்கறதாலேயோ, சிக்கல்கள் வந்து சேருமுங்க. மனதை ஒருநிலைப்படுத்தணுமுங்க. எதிலும் நிதானமாக இருக்கணுமுங்க. நஷ்டத்துக்காக வருத்தப்படாம, செயல்கள் முடியாததால ஆத்திரப்படாம, ‘சரி, இப்போதைக்கு இல்லை’ன்னு மனசை சாந்தப்படுத்திக்கோங்க. ஏற்கெனவே ரத்தக் குறைபாடு இருக்கறவங்க கட்டாயம் மருத்துவப் பரிசோதனை செய்துக்கணுமுங்க. நீங்களாக மருத்துவம் பார்த்துக்காம மருத்துவர் யோசனைப்படி நடந்துக்கோங்க. உத்யோகத்ல இடமாற்றம் மனவருத்தம் தரும்; பொறுத்துகிட்டுப் போயிடறது நல்லதுங்க. இந்தத் தேதிப் பெண்கள் பேச்சைக் குறைக்கணுமுங்க. அனுமன் சாலீஸா சொல்லிகிட்டு வாங்க; அவதிகள் அடங்கும்.
குடும்பத்ல சுப விசேஷங்களும் அதனால கூடுதல் செலவுகளும் ஏற்படுமுங்க. கடன் படவும் நேரிடலாம். அதுக்காகக் கவலைப்படாதீங்க; அதனால எதிர்காலப் பலன்கள் உண்டுங்க. தைரியமாக ஈடுபடற எல்லா முயற்சிகளும் வெற்றியைத் தருமுங்க. அயல்நாட்டுத் தொடர்பு இருக்கறவங்களுக்கு ஆதாயமான காலமுங்க. அதேசமயம், கொஞ்சம் இறுமாப்போட எடுத்தேன், கவிழ்த்தேன்னு காரியத்ல இறங்கிடாதீங்க. புதிய உத்யோகம், புதுத் தொழில்னு முயற்சி செய்யறவங்களுக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிட்டுமுங்க. கூட்டுத் தொழில்ல இருக்கறவங்க, யாருக்கும் உத்தரவாதம் எதையும் தரவேண்டாங்க. கணவன்-மனைவி பரஸ்பரம் உடல்நலத்ல அக்கறை எடுத்துக்கோங்க. கொழுப்பு சத்து அதிகரிக்கும்; ரத்தப் பரிசோதனை பண்ணிடுங்க. மூட்டுவலித் தொந்தரவும் வரும். இந்தத் தேதிப் பெண்கள் சுபவிசேஷங்களால உறவையும் நட்பையும் புதுப்பிச்சுப்பீங்க. துர்க்கை அஷ்டோத்திரம் சொல்லுங்க; கஷ்டங்கள் கலைந்தோடும்.
உங்க வாக்குக்கு மதிப்பு கூடுமுங்க. திடீர் அதிர்ஷ்டத்தால பழைய கடன்களைப் பைசல் செய்வீங்க. அதேசமயம் யாருக்கும் எதற்காகவும் உத்தரவாதம் தராதீங்க; ஜாமீன் கையெழுத்து போடாதீங்க; எந்தப் பணப் பறிமாற்றத்துக்கும் சாட்சியாக நிக்காதீங்க. உணவுப் பழக்கத்திலேயும் தடுமாற்றம் வேண்டாங்க. ‘வயிற்றைக் கேட்டுகிட்டுதான் வாய் சாப்பிடணும்’ங்கற பழமொழியை நினைவில் வெச்சுக்கோங்க. மருத்துவர் ஆலோசனையைத் தட்டாம கேளுங்க. உத்யோகம், வியாபாரம், தொழில்ல மேலதிகாரிகள் மற்றும் பிரபலங்களோட தொடர்பால நீங்களே ஆச்சரியப்படறா மாதிரி முன்னேற்றம் ஏற்படுமுங்க. பொறாமைக் கண்கள் மட்டும் உங்களைச் சுத்தி சுத்தி வரும்; எச்சரிக்கையாக இருங்க. புது வாகனத்துக்கு மாறுவதும் நல்லதுதாங்க. இந்தத் தேதிப் பெண்களுக்கு ஆபரணங்கள் சேருமுங்க. சிவ தரிசனம் பண்ணி கோளறு பதிகம் பாடுங்க; கோளாறெல்லாம் கொண்டாட்டமாகும்.
அடுத்தடுத்து நல்ல செய்திகளாக வருமுங்க. எந்த காரணத்துக்காகவாவது வீட்டைவிட்டுப் பிரிஞ்சவங்க, வீடு திரும்புவாங்க. அதேபோல பிரிந்த நண்பர்களுடன் ‘மறத்தலும் மன்னித்தலு’மாக மறுபடியும் சேருவீங்க. தள்ளிப்போன பயணங்கள் ஈடேறுமுங்க. புதிய, உயர்ந்த உத்யோக அமைப்பு கூடிவரும். தொழில் மாற்றம், விரிவாக்கம்னு ஏற்படுமுங்க. வீட்டு சுப விசேஷங்கள்ல முழு ஈடுபாடு காட்டுவீங்க. அயல்நாட்டிலேர்ந்து வரும் செய்திகள் உற்சாகம் தருமுங்க. அங்கே இருக்கற உறவினர் அல்லது நண்பர், உங்க திட்டங்களுக்குத் தேவையான யோசனைகள் சொல்வாங்க; உதவிகளையும் செய்வாங்க. கலைஞர்கள் சாதனை படைப்பீங்க. சிலருக்கு அரசு விருதும் கிடைக்கும். அடிவயிறு முதல் பாதம்வரை ஏதேனும் உபாதை தெரிஞ்சா உடனே மருத்துவரைப் பார்த்திடுங்க. இந்தத் தேதிப் பெண்களால குடும்பத்ல சுமுகமான போக்கு நிலவுமுங்க. கணபதி காயத்ரி சொல்லுங்க; அணுகாது அல்லல் எதுவும்.
உத்யோகம், தொழில் காரணமாக இட மாற்றம் ஏற்படுமுங்க. இது நன்மைக்குதான், கவலைப்படாதீங்க. இடமாற்றமில்லாமலும் சிலர் உயர்வுகளைப் பெறுவீங்க. அலுவலகத்ல முக்கியமான முடிவுக்கு யோசனை சொல்லி எல்லோர் பாராட்டையும் பெறுவீங்க. மனப்பக்குவம், சிந்தனையில் முதிர்ச்சின்னு புதுப் பரிமாணத்ல இயங்குவீங்க. அதனால குடும்பத்ல ஏற்பட்டிருந்த பூசல்கள், பிரச்னைகள் எல்லாம் காணாமல் போகுமுங்க. உறவினர்களிடையேயும் சமூகத்திலும் மதிக்கப்படுவீங்க. பொதுநல அமைப்புகளால பாராட்டப்படுவீங்க. தொலைதூரச் செய்திகளும் நன்மைகளைச் சுமந்து வருமுங்க. புது முயற்சிகள்லாம் வெற்றியே காணுமுங்க. இந்தத் தேதிகள்ல பிறந்த கர்ப்பிணிப் பெண்கள் ரொம்பவும் எச்சரிக்கையாக இருக்கணுமுங்க. மருத்துவர் யோசனைப்படி நடந்துக்கறதும் எதற்கும் டென்ஷன் ஆகாம இருக்கறதும் ரொம்ப முக்கியமுங்க. மகான் ராகவேந்திரர் நாமாவளி சொல்லுங்க; மகோன்னதம் பெறுவீங்க.
புது நண்பர்களைத் தேர்ந்தெடுத்துப் பழகணுமுங்க. உங்க பலவீனங்களை வெளிக்காட்டாம இருக்கறது நல்லதுங்க; இல்லாட்டி தவறான சகவாசம் உங்களைச் சூழ்ந்துக்கும்; எச்சரிக்கையாக இருங்க. ‘நமக்கு ஒண்ணும் ஆகாது; நமக்கெல்லாம் பிரச்னை வராது’ன்னு நீங்களாக கற்பனை பண்ணிகிட்டு, புதைகுழியில விழுந்துடாதீங்க. கொடுக்கல்-வாங்கலில் சம்பந்தமே இல்லாம மூக்கை நுழைக்காதீங்க. மத்தியஸ்தம் பண்ணிவெச்சு மதிப்பு பெற நினைப்பீங்க; ஆனா பேர்தான் ரிப்பேராகும். நல்லதோ, கெட்டதோ யார் வம்புக்கும் போகாம இருக்கறதுதாங்க நல்லது. ஒருத்தர் எவ்வளவுதான் நல்லவராக இருந்தாலும் அவருக்காகக்கூட எந்த பொறுப்பையும் ஏற்காதீங்க. நரம்புப் பகுதியில் ஏற்கெனவே பாதிப்பு இருக்கறவங்க கவனமா இருங்க. ஒவ்வாமையால பிரச்னை வரலாம்; கவனமா இருங்க. இந்தத் தேதிப் பெண்கள் வம்புப் பேச்சில் ஈடுபடாதீங்க. அபிராமி அந்தாதி படியுங்க. அமைதியான வாழ்க்கை அமையும்.
யாரோ செய்த தவறுக்காக பழி சுமந்துகிட்டிருந்த உங்களுக்கு இப்ப விடுதலை கிடைக்குமுங்க. ஏதேனும் வழக்கில் நீங்க சிக்கியிருந்தீங்கன்னா அதுவும் உங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பாகுமுங்க. தொழில், வியாபாரத்ல மறைமுக எதிரிகள் உங்களை சட்ட சிக்கல்ல மாட்டி வெச்சிருந்தாங்கன்னா அதிலிருந்தும் நீங்க விடுபடுவீங்க. அலுவலகத்ல உங்களோட நியாயமான உரிமைகளுக்கும் சலுகைகளுக்கும் போராடி வந்ததும் வெற்றியாகி கூடுதல் ஆதாயம் பெறுவீங்க. பூர்வீக சொத்து விவகாரம் ஏதாவது கோர்ட் வழக்காக நடந்துகிட்டிருந்தால் அதிலும் உங்க தரப்பு வெற்றி பெறுமுங்க. குடும்பத்ல சண்டை சச்சரவுகள் மறையுமுங்க. காதல் வயப்பட்டிருக்கறவங்களுக்கு அது ஈடேறுமுங்க. முக்கியமா, அதுக்குப் பெரியவங்க ஆசியும் ஆதரவும் கிடைக்கும். ஜீரண உறுப்புகள்ல கோளாறு தெரியுதுங்க. இந்தத் தேதிப் பெண்களுடைய யோசனைகளைப் பிறர் ஏற்றுப்பாங்க. சிவ அஷ்டோத்திரம் படிங்க. சிறப்புகள் பெருகும்.
இந்த வாரம் உங்களைக் காக்கக் கூடிய ஒரே தற்காப்பு ஆயுதம், பொறுமைதாங்க. சும்மாவானும் உங்களை உசுப்பேத்தி கோபப்பட வைக்கறதுக்கு சூழ்நிலைகள் காத்துகிட்டிருக்குங்க. பொறாமைக்காரங்களும் அதை எதிர்பார்க்கறாங்க. அதனால நிதானமா இருங்க. ‘என்ன வேணா சொல்லிட்டுப் போகட்டும்’னு அமைதி காத்தீங்கன்னா, உங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லீங்க. குடும்பத்திலேயும் சரி, வெளி வட்டாரப் பழக்கத்திலேயும் சரி, சின்னதாகவும் கோபத்தை வெளிப்படுத்திடாதீங்க. யாருக்கும் எதற்கும் உத்தரவாதம் கொடுக்காதீங்க; ‘கையாலாகாதவன்’னு விமர்சனம் வந்தாலும் பரவாயில்லே. யாரைப் பற்றியும் புறஞ்சொல்லாதீங்க. உங்ககிட்ட யாராவது புறஞ்சொல்ல வந்தாங்கன்னா உடனே அங்கிருந்து நகர்ந்திடுங்க. ரத்த அழுத்தத்தைப் பரிசோதிச்சுக்கோங்க. இந்தத் தேதிப் பெண்களுக்குப் புது உயர்வுகள் சந்தோஷம் தரும். விநாயகர் காரியசித்தி மாலை படிங்க; விரைவில் நன்மைகள் சூழும்.