கடகம்
நல்ல எண்ணங்கள் ஊற்றெடுக்க அடுத்தவருக்கு நலம் புரிய வாழும் கடக ராசி அன்பர்களே! இந்த 2019ம் ஆண்டு உங்களுக்கு நல்ல பெயர் ஈட்டித்தர போகிறது. தஞ்சம் என்று வந்தவர்களை ஆதரித்து வாழ வைப்பீர்கள். புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும். பொருளாதாரத்தில் முன்னேற்ற சூழ்நிலை உண்டு. குடும்பத்தில் சுபமங்கள காரியங்கள் நிறைவேறும். வெகுகாலம் எதிர்பார்த்திருந்த தனவரவு தானாகவே வந்து சேரும். இளைய சகோதரர்களாலும் நண்பர்களாலும் அதிகமான நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வாழ்வில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் உங்களுக்கு அனுபவம் தரும் வகையில் அமைந்திருக்கும். பெரியவர்களின் உடல்நலம் ஓரளவு பாதிக்கப்பட்டாலும் பின் சரியாகி விடும். புத்திரர்கள் வகையிலும் தாய்வழி உறவினர்கள் வகையிலும் நற்செய்திகள் வந்து சேரும். தீராத வழக்கு கடன் வகை ஏதும் இருந்தால் இவ்வருடம் பைசல் ஆகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் பலன் கிடைக்கும். தம்பதிகள் ஒற்றுமை ஓங்கும். உறவினர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் சரியாகும். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். ரசாயனம் சார்ந்த இனங்களை கையாளும் போது கவனம் தேவை. திருமண வாய்ப்புகள் கைகூடும்.
உத்யோகஸ்தர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு திறமைக் கேற்றவாறு பணி உயர்வு, இடமாற்றம் ஏற்படும். சக ஊழியர்களுடன் நல்லுறவு கூடும். செயல்திறன் அதிகரிக்கும். சிறுதவறுகள் செய்து தண்டனைக்குள்ளானவர்கள் இவ்வருடம் மீண்டும் பணியில் சேர வாய்ப்புகள் வரும். நீங்கள் போட்டு வைத்திருந்த திட்டங்களை செயல்படுத்த முனைவீர்கள். மேலிடமும் அதற்கு ஒத்துழைப்பு தருவார்கள். தைரியமும் புகழும் கூடும். எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் மனநிலை ஏற்படும். பணி நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்திருந்தவர்கள் மீண்டும் குடும்பத்தினருடன் இணைவார்கள்.
தொழிலதிபர்களுக்கு: செய்தொழில் எதுவானாலும் தங்களுடைய தனித்தன்மையினால் வளமான ஆண்டாக இவ்வாண்டு இருக்கப் போகிறது. குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், உணவு சார்ந்த, ஓட்டல் போன்ற துறையினர் தரத்தை அதிகப்படுத்தி வளம் பெறுவீர்கள். பொருளாதார வகையில் வரவேண்டிய பணம் அனைத்தும் வந்து சேரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். ஊழியர்களுக்கு அதிகமான தொகையினை செலவு செய்ய வேண்டி வரலாம். அரசாங்கத்தின் கண்டனத்திற்கு ஆளாக நேரிடலாம், கவனம் தேவை. எதிரிகளின் தொல்லைகள் நீங்கும்.
மாணவர்களுக்கு: சிந்தனையிலும் செயல்திறனிலும் புதிய உத்வேகம் பிறக்கும். உங்கள் பேச்சின் வசீகரத்தால் அனைவரையும் கவர்ந்திழுப்பீர்கள். அறிவியல் சார்ந்த கல்வி பயிலும் மாணவமணிகளுக்கு நல்ல முறையில் தேர்ச்சி பெறுவீர்கள். மருத்துவம் சார்ந்த மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்களைப் பெற வாய்ப்பு ஏற்படும். மனதில் ஏதேனும் சஞ்சலம் உருவாகி மறையும். நண்பர்கள் உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
பெண்களுக்கு: குடும்ப செலவுக்காக கணவரின் கையை எதிர்பார்த்து காத்திருந்த நிலைமை மாறி உங்களுக்கு புதிய வேலை கிடைக்கும். உற்றார், உறவினர்களின் அனுசரணையான பேச்சால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை பார்க்கும் பெண்களுக்கு கவுரமான சூழல் ஏற்படும். பணம் சேமிக்கும் பழக்கம் அதிகரிக்கும். ஆடை ஆபரணங்கள் சேர்க்கை ஏற்படும். தம்பதிகள் ஒற்றுமை சீராக இருக்கும். தெய்வ வழிபாடு செய்வதற்குரிய அருள் கிடைக்கப் பெறுவீர்கள். திருமண முயற்சிகள் கைகூடி வரும்.
கலைஞர்களுக்கு: சிற்பம் செய்பவர்கள், கைவினைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கைகூடி வரும். நடிப்புத்துறையில் உள்ளவர்களுக்கு அதிக உழைப்புதேவைப்படும். நகைத்தொழில் செய்வோருக்கு அதிக லாபம் கிட்டும். பெண் கலைஞர்களுக்கு சுப நிகழ்ச்சிகள் நிறைவேறும். மனதில் புதிய உற்சாகமும் பொருளாதார மேன்மையும் ஏற்படும். சக கலைஞர்களின் ஆதரவால் அறிய சாகசங்களை புரிய முடியும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். தொழில் ரீதியான போட்டிகளை மென்மையாக அணுக வேண்டும். பல்வேறு விருதுகள் பாராட்டுகள் கிடைக்கும்.
அரசியல்துறையினருக்கு: கட்சிப்பதவி அரசுப்பதவி என இரண்டையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க வாய்ப்பு ஏற்படும். எந்த சோதனைகளையும் திடமான மனதுடன் எதிர்கொள்வது நல்லது. நீங்கள் ஏணியாக இருந்து ஏற்றி விட்டவர்களே உங்களுக்கு எதிரான நிலை எடுக்கலாம். அரசுத்துறை சலுகைகளால் உங்களுக்கு லாபம் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவும் வகையில் உங்களது வளர்ச்சி இருக்கும். அரசியல் விரோதங்கள் மறைந்து உங்களுக்கு இதமான சூழல் உருவாகும். விட்டுக் கொடுத்து செயல்படுவது உங்களுக்கு உகந்ததாக இருக்கும். பொருளாதார வகையில் மிக நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
பரிகாரம்:
திங்கட்கிழமைதோறும் அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்குச் சென்று 16 முறை வலம் வரவும்.