திருமால் - திருமகள்
துர்வாசரால் சாபம் பெற்ற தேவேந்திரன் பராசக்தியின் ஆணைப்படி அசுரர்களுடன் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தான். அப்போது முதலில் தோன்றிய ஆலால விஷத்தை ஈசன் விழுங்கி தன் தொண்டையில் நிறுத்தி நீலகண்டனானார். பாற்கடலிலிருந்து ஐராவதம், கற்பகமரம், உச்சைச்ரவஸ் எனும் குதிரை, கௌஸ்துப மணி, காமதேனு போன்ற மங்கலப் பொருட்கள் ஒவ்வொன்றாக தோன்றின. சந்திரன், தன்வந்திரி போன்றோர் தோன்றிய பின் பேரழகுப் பெட்டகமாக திருமகள் பாற்கடலிலிருந்து தோன்றி திருமாலை மணந்தாள்.
முருகன் - வள்ளி
வேடுவர் குலத்தில் பிறந்த வள்ளியை முருகப்பெருமான் வேங்கை மரமாய், விருத்தனாய் வந்து சோதித்தார். பின் விநாயகப் பெருமானின் திருவருள் யானையாக மாறி வள்ளியைத் துரத்த அதைக் கண்டு பயந்த வள்ளிமான், வேலன் எனும் புள்ளிமானின் மீது சாய்ந்தாள். முருகப்பெருமான் அவளை ஆட்கொண்டு திருமணம் செய்தருளினார்.
முருகன் - தெய்வானை
பத்மாசுரனின் கொடுமையை அழிக்க தேவர்கள் முருகப்பெருமானை துதித்தனர். தேவசேனாபதியான முருகப்பெருமான் சிக்கலிலே வேல்வாங்கி சூரனை திருச்செந்தூரில் இரு கூறாக்கி தன் சேவற்கொடியாகவும், மயில் வாகனமாகவும் மாற்றிக்கொண்டார். அதனால் மனம் மகிழ்ந்த தேவேந்திரன் தன் அருமை மகளாம் தெய்வானையை சகல சீர்களுடன் முருகப்பெருமானுக்கு மணம் செய்து கொடுத்தார்.
நான்முகன் - நாமகள்
உலகம் இயங்க தலையாயது சிருஷ்டி. பராசக்தி நான்முகனை சிருஷ்டிக்கும் தொழில் செய்யப் படைத்தாள். அதற்குத் துணைபுரிய நாமகளை படைத்து அவனுக்கு திருமணம் செய்து வைத்தாள். நான்முகனின் நாவிலே இடம் பெற்றவள் நாமகள். சிருஷ்டி தொழிலில் அன்றிலிருந்து நாமகளும் நான்முகனுக்கு உதவி செய்து கொண்டு வருகிறாள்.
ஈசன் - பார்வதி
பர்வத ராஜகுமாரனின் மகளாகப் பிறந்த பராசக்தி பார்வதி எனும் பெயரில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தாள். தக்க பருவம் வந்ததும் பார்வதியை ஈசனுக்கு மணமுடித்துத் தந்தான் தட்சன். இந்த சிவ-பார்வதி திருமணத் திருக்கோலம் அம்பிகை உபாசனையில் சுயம்வரா பார்வதி தேவிக்குரிய உருவமாக போற்றப்படுகிறது. மணமாக வேண்டிய கன்னியரும் காளையரும் இத்திருவுருவை பூஜித்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நிச்சயமாகிவிடும்.
அர்ஜுனன் - திரௌபதி
திரௌபதியின் சுயம்வரத்தில் கிருஷ்ணர் முன்னிலையில் பஞ்சபாண்டவர்களும் கலந்து கொண்டனர். எது கிடைத்தாலும் பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் அதை சமமாக பங்கு போட்டுக்கொள்வது வழக்கம். சுயம்வரத்தில் தலைக்கு மேலே சுழன்றோடும் மீனை கீழே தெரியும் நீரில் காணும் பிரதிபிம்பத்தை பார்த்து அம்பு எய்து வீழ்த்தினான் அர்ஜுனன். பிறகு, தாயிடம் ‘வெற்றிக்கனி பறித்து வந்துள்ளேன்’ என அர்ஜுனன் கூற, ‘அதை ஐவரும் சமமாக பகிர்ந்து கொள்ளுங்கள்’ என்ற தாய் குந்தியின் வாக்குப்படி திரௌபதி ஐவருக்கும் பத்தினியானாள்.
கிருஷ்ணர் - ஜாம்பவதி
நான்காம் பிறையை பார்த்தால் நாய் படாத பாடு என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல; பரம்பொருளே மனித வடிவெடுத்து பூமியில் பிறந்தாலும் அவர்களுக்கும் அந்த கதிதான். ஒரு முறை நான்காம் பிறையை கிருஷ்ணர் யதேச்சையாக தரிசித்ததால் ஜாம்பவான் எனும் வன அரசனிடமிருந்த சியமந்தகமணியை கிருஷ்ணர்தான் திருடினார் எனும் வீண்பழி அவர் மேல் விழுந்தது. அதனால் கிருஷ்ணருக்கும் ஜாம்பவானுக்கும் கடும் போர் நிகழ கண்ணனும், ராமனும் ஒன்றே என உணர்ந்த ஜாம்பவான் தன் மகள் ஜாம்பவதியை அவருக்கு திருமணம் முடித்துக் கொடுத்தான்.
ராமர் - சீதை
ஜனகனின் சிவதனுசு வில்லை யார் முறிக்கின்றார்களோ அவர்களுக்கே தன் மகள் சீதையை திருமணம் முடித்து வைப்பதாக அறிவித்தார் ஜனக மகாராஜா. அந்த சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்த ராமன் சீதையை உப்பரிகையில் தரிசித்தார். அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள் எனும் வசனம் ராமாயணத்தில் மிகவும் பிரபலமானது. ஜனகனின் வில்லை ஒடித்து ஜானகியை மணந்த ராமர் சீதா ராமனானார்.
ரோகிணி - சந்திரன்
தட்சனின் 27 நட்சத்திரப் பெண்களையும் மணந்தான் சந்திரன். ஆனாலும் அவனுக்கு ரோகிணியிடம் தனிப் பிரியம். அதனால் மற்ற பெண்கள் தட்சனிடம் முறையிட தட்சன் சந்திரனை தேய்ந்தும் மறைந்தும் மாறி மாறி வளர சாபமிட்டான். அதனால்தான் சந்திரன் அமாவாசையன்று காணாமல் போவதும், பௌர்ணமியன்று முழுநிலவாய் பிரகாசிப்பதும் நிகழ்ந்து வருகிறது
ருக்மிணி - கிருஷ்ணன்
ருக்மிணி எழுதி அனுப்பிய காதல் கடிதத்தில் அவள் குறிப்பிட்டிருந்த புவன சுந்தரா எனும் வார்த்தையில் மனம் நெகிழ்ந்த கிருஷ்ணர் உடனே தானே ரதத்தைச் செலுத்தி ருக்மிணியின் சுயம்வரத்தில் கலந்து கொண்டு அங்கு எதிரிகளை தன்னந்தனியே வென்று ருக்மிணியை சிறையெடுத்து திருமணம் செய்தார். சாட்சாத் மகாலட்சுமியே ருக்மிணியாக பிறப்பெடுத்திருந்தாள். திருமகளை திருமால் மணந்தாற்போல் ருக்மிணியை கிருஷ்ணர் திருமணம் புரிந்தார்.
விநாயகர்- சித்தி, புத்தி
முழு முதற்பொருளான பரம்பொருளான விநாயகருக்கு திருமணம் முடிக்க தீர்மானித்தனர் உமா மகேஸ்வரர். சித்தி- புத்தி எனும் இருவரை விநாயகப் பெருமானுக்கு திருமணம் செய்வித்து உளம் மகிழ்ந்தார்கள் அவர்கள். சித்தி-புத்தியுடன் திருமணக் கோலத்தில் தோற்றமளிக்கும் விநாயகப் பெருமானை வழிபட வாழ்வில் வளங்கள் பெருகும்.
- ந.பரணிகுமார்
சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவு கள் அதிகமாகும். மகளுக்கு நல்லவரன் அமையும். பணப்பற்றாக் குறையைச் சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் வேலையைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத நல்லவை உண்டாகும் நாள்.