உங்கள் பார்வைக்கு இவ்வாறு தெரியும் மருமகள் சுற்றத்தார்களிடமும், தனது கணவனிடமும் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை கவனித்தீர்களா..? உங்கள் உறவினர்களின் பார்வையில் அவரது நடத்தையைப் பற்றிக் கேட்டுப் பாருங்கள். புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசியில் பிறந்திருக்கும் உங்களுக்கும், கேட்டை நட்சத்திரம், விருச்சிக ராசியில் பிறந்திருக்கும் உங்கள் மருமகளுக்கும் ஷஷ்டாஷ்டகம் என்பது ஜாதக ரீதியாக உண்டாகியிருக்கும். அதாவது ஒருவரின் செயல் மற்றவரின் பார்வைக்குத் தவறாகத்தான் தெரியும். இந்த இரு ராசிக்காரர்களுக்கும் இடையே ஒத்துப்போவது என்பது கடினம். என்றாலும் அவர் தனுசு லக்னத்திலும், நீங்கள் மிதுன லக்னத்திலும் பிறந்திருப்பதால் பெருத்த பிரச்னை ஏதும் உண்டாகாது.
மிதுன லக்னம், மிதுன ராசி என்று புதனின் ஆதிக்கத்தில் பிறந்திருக்கும் நீங்கள்தான் அவரை அனுசரித்துச் செல்ல வேண்டும். ஜென்ம லக்னம் என்பது ஒருவரின் உள்மனதைப் பற்றிச் சொல்லும். ஜென்ம ராசி என்பது வெளி மனதினைக் குறிக்கும். அதாவது ஒருவர் வெளியில் எவ்வாறு நடந்துகொள்கிறார் என்பதை ஜென்ம ராசி உணர்த்தும். இந்த அடிப்படையில் காணும் போது தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மருமகள் மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மீது மிகவும் மரியாதை கொண்டிருப்பார். இருந்தாலும் வெளி மனதிற்கு உரிய விருச்சிக ராசிக்கும், உங்களது மிதுன ராசிக்கும் இடையே கருத்து வேறுபாடு தோன்றுவது சகஜமே. மேலும் தற்போது ஏழரைச் சனியின் தாக்கத்தில் மருமகள் இருப்பதால் அவரது மனநிலையைப் புரிந்து கொண்டு பொறுத்துச் செல்ல வேண்டும். உங்களுடைய பொறுமையும், அனுசரித்துச் செல்லும் தன்மையும் மருமகளிடம் மாற்றத்தை நிச்சயம் உருவாக்கும்.
தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மருமகள் மிகவும் நல்ல குணம் படைத்தவர். உறவினர்களை உபசரிப்பதிலும், விருந்தோம்பலிலும் சிறந்து விளங்குவார். அவரது ஜாதகத்தில் வாக்கு ஸ்தான அதிபதி சனி என்பதாலும், வாக்கு ஸ்தானத்தில் கேது அமர்ந்திருப்பதாலும் அவர் பேசும் பேச்சுக்கள் மனதைப் புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்தக் காரணத்திற்காக நீங்கள் அவர்களை விட்டு விலக வேண்டிய அவசியம் இல்லை. அவர் பேசும் பேச்சுக்களை விளையாட்டாக எடுத்துக் கொள்ளுங்கள். அடிப்படையில் மிகவும் நல்ல குணத்தினையும், நிர்வாகத் திறனையும் கொண்ட உங்கள் மருமகளின் உண்மையான குணத்தினைப் புரிந்துகொண்டு அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள்.
மருமகளின் நிர்வாகத் திறன் சிறப்பாக உள்ளதால் பொறுப்புகள் அத்தனையையும் அவரிடமே விட்டு விடுங்கள். அவர் எதைச் செய்தாலும் சரியே என்ற மனப்பக்குவத்திற்கு வந்துவிடுங்கள். பொறுப்பினைச் சுமக்கத் துவங்கும்போது தன்னால் அவருக்குப் புரியவரும். மகனின் வாழ்வு சிறப்பாக அமைய வேண்டும் என்பதே ஒரு தாயின் நோக்கம். தினமும் காலை மாலை இருவேளையும் பூஜையறையில் விளக்கேற்றி வைத்து கீழ்க்கண்ட அபிராமி அந்தாதி பாடலைப் படித்து வாருங்கள். கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளவாறு தீர்க்கசுமங்கலி யோகம் கிடைப்பதுடன் அம்பாளின் அனுக்ரஹத்தால் குடும்பத்தில் நிம்மதியான சூழல் நிரந்தரமாக நிலவக் காண்பீர்கள். கவலை வேண்டாம்.
புண்ணியம் செய்தனமே மனமே புதுப்பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடிநம் காரணத்தால்
நண்ணி இங்கேவந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்
பண்ணி நம் சென்னியின்மேல் பத்மபாதம் பதித்திடவே.
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். கனவு நனவாகும் நாள்.