(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரை)
குடும்பம்: ஜென்ம ராசியில், சூரியன், செவ்வாய் சேர்க்கை, அர்த்தாஷ்டகத்தில் ராகு, ராசி நாயகராகிய குரு பகவான், பஞ்சம ஸ்தானத்தில்! குடும்பச் சூழ்நிலை, மன நிறைவை அளிக்கும். உஷ்ண சம்பந்தமான பிணிகள், சரும பாதிப்பு ஆரோக்கியத்தைப் பாதிக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். குழந்தைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மே மாதம் 1-ம் தேதியிலிருந்து, குரு பகவான் ரிஷப ராசிக்கு மாறுவது, நன்மை தராது!! பழைய கடன்கள் மன நிம்மதியைப் பாதிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். திருமண முயற்சிகளில் பின்னடைவு ஏற்படும்.
உத்தியோகம்: உத்தியோகத் துறைக்கு அதிபதியான சனி பகவான், மிகவும் அனுகூலமாக நிலைகொண்டிருப்பதால், உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேலதிகாரிகள், நிர்வாகத்தினர் ஆகியோரின் ஆதரவு மன நிறைவையளிக்கும். ராகுவின் நிலை, அனுகூலமற்று இருப்பதால், வேலைச் சுமையும், பொறுப்புகளும் அதிகரிக்கும். அடிக்கடி வெளியூர் ெசன்றுவர நேரிடும். சகக் கூட்டாளிகளினால், சிறு, சிறு பிரச்னைகள் ஏற்பட்டு மறையும்.
தொழில், வியாபாரம்: ராகுவின் நிலையினால், போட்டிகள் கடுமையாக இருக்கும். அவற்றை முறியடித்து, லாபம் பெறும் திறமையை அளித்தருள்கிறார், சுப பலம் பெற்ற நிலையில் சஞ்சரிக்கும் சனிபகவான்! பாடுபட்டாலும், அதற்கேற்ற பலனைத் தந்தருள்வார், பகலவனின் புதல்வன்! அர்த்தாஷ்டகத்தில் ராகு இருப்பதால், ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் அவசியம். குறிப்பாக, இரவு நேரங்களில் வாகனங்களை ஓட்டும்போது, அதிஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அஷ்டம, அர்த்தாஷ்டக, ஜென்ம ராசிகளின் சஞ்சாரங்களின்போது, ராகு விபத்துகளை ஏற்படுத்தக்கூடும் என்பதைப் புராதன ஜோதிட நூல்கள் விவரித்துள்ளன. வியாபாரம் சம்பந்தமாக வெளியூர்களுக்குச் செல்லும்போது, விழிப்புடன் செயல்படுவது அவசியம்.
கலைத் துறையினர்: கலைத் துறைக்கு, அதிபதியான சுக்கிரன் ஆண்டு முழுவதுமே ஓரளவு அனுகூலமாக சஞ்சரிப்பதால், வாய்ப்புகளும் வருமானமும் போதிய அளவிற்கு இருக்கும். குறிப்பாக, திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு, கிரக நிலைகள் மிகவும் அனுகூலமாக வலம் வருகின்றனர். தக்கதருணத்தில், நிதியுதவி தேடி வரும்.
அரசியல் துறையினர்: அரசியல் துறையினருக்கு, ஆதாயமான ஆண்டாகும்! ெசல்வாக்கு மிகுந்த ஓர் பிரமுகருடன் தொடர்பும், அதனால் உங்கள் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கிய திருப்பம் ஒன்றும் ஏற்படும். இதனை அனுபவத்தில் பார்க்கலாம். கட்சியில் ஆதரவு பெருகும். அந்நிய நாடுகளில் உள்ள அரசியல் கட்சிகளுடன் தொடர்பு ஏற்படும். உங்கள் உயர்ந்த கருத்துக்களுக்கு தவறான சாயம் பூசி, பிரச்னைகள் ஏற்படுத்துவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன.
மாணவ – மாணவியர்: கல்விக்கு அதிபதியான ஓரளவே சுப பலம் பெற்றுள்ளன, இப்புத்தாண்டு. கல்வி முன்னேற்றத்தைக் காப்பாற்றிக்கொள்ளப் பாடுபட்டுப் படிக்க வேண்டும். ஆசிரியர்கள் ஓரளவுதான் உதவுவார்கள். நீங்களே படித்துக் கொள்ளவேண்டிய நிலையைச் சமாளிக்க வேண்டி வரும்.
விவசாயத் துறையினர்: வயல் பணிகளில், உழைப்பு கடினமாக இருக்கும். இருப்பினும், விளைச்சலும் வருமானமும் எதிர்பார்க்கும் அளவிற்கு இருப்பது, மன நிறைவையளிக்கும். கால்நடைகளின் பராமரிப்பு, பணம் விரயமாகும். சிலர், புதிய கடன்களை ஏற்க நேரிடும். விவசாய வசதிகளுக்குக் குறைவிராது.
பெண்மணிகள்: குரு மற்றும் சுக்கிரன் ஆகிய இருவரும் இப்புத்தாண்டில் ஓரளவே உங்களுக்கு ஆதரவாக உள்ளனர்! குடும்ப நிர்வாகத்தில், பெரிய பிரச்னை ஏதும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை!! இருப்பினும், அடிக்கடி ஏற்படும் பணப் பற்றாக்குறை, உடல் உபாதைகள், குடும்பப் பிரச்னைகள் ஆகியவை மன நிம்மதியைப் பாதிக்கும். கூடியவரையில், அதிக உடல் உழைப்பையும், குடும்பத்தின் எதிர்காலம் பற்றிய கவலைகளையும் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
அறிவுரை: சிக்கனமாக செலவு செய்யவும். கடின உழைப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள். தேவையில்லாத, கற்பனையான மனக் கவலைகளை, போக்கிக் கொள்ள மிகச் சிறந்த சாதனம் பிராணாயாமம், யோகா பயிற்சிகளை மேற்கொள்வது!
பரிகாரம்: ஆலங்குடி திருத்தல தரிசனம் மிகவும் ஏற்றது. முடியாதவர்கள், வியாழக் கிழமைகளில், பிரதோஷ நேரமாகிய மாலை நேரத்தில் (5.30 மணி முதல், 7.30 மணி வரையுள்ள நேரம்), உங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள கோயிலில் அல்லது உங்கள் வீட்டுப் பூஜையறையில் தினமும் ஐந்து நெய் தீபங்கள் ஏற்றி வரவும். இதற்குப் பலன் அளவற்றது. காலை, மாலை இருவேளைகளிலும் 108 அல்லது 1008 முறைகள் “ராம” நாமம் சொல்லி வருவதும், லிகித ஜெபமமாகக் கருதி போற்றப்படுவதும், மகத்தான புண்ணிய பலன்களைத் தரவல்லதும், “ராம” நாமத்தை நோட்டுப் புத்தகங்களில் எழுதி வருவதும் மிகச் சிறந்த பரிகாரமாகும்.