
(உத்திராடம் 2ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் வரை)
குடும்பம்: ராகு திருதீய ஸ்தானமாகியதும், குருவின் வீடானதுமான மீன ராசியில், மாறியிருப்பது, நல்ல யோக பலன்களை அளிக்கக்கூடிய மாறுதலாகும். ஆயினும், கேது பாக்ய ஸ்தானத்திற்கு மாறியிருப்பது சில நன்மைகளை மட்டுமே அளிக்கவல்ல மாறுதலாகும். பணப் பிரச்னைகள், கடன் தொல்லைகள் ஆகியவை படிப்படியாகத் தீரும். வருமானம் உயரும். வீண் செலவுகள் கட்டுக்கு அடங்கி நிற்கும். திருமண முயற்சிகளில் தொடர்ந்து ஏற்பட்டு வந்த பிரச்னைகள் தீர்ந்து, நல்ல வரன் அமைய ராகு உதவி செய்வார். “ராகுவைப் போல் கொடுப்பாரில்லை…!” என்ற பெருமை அவருக்கு உண்டு. எதிர்பாராத பணவரவும் எதிர்பார்க்கலாம். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உங்களுக்கே. குடும்பச் சூழ்நிலை, மனத்திற்கு மகிழ்ச்சியைத் தரும்.பாக்ய ஸ்தானத்திற்கு மாறியுள்ள கேதுவினால், குடும்பத்தில் சுபச் செலவுகள் ஏற்படும்.பல குடும்பங்களில் தீர்த்த, தல யாத்திரை யோகம் சித்திக்கும். மனம் ஆன்மிகச் சிந்தனைகளில் ஈடுபடும்.மகான்களின் ஜீவ சமாதி மற்றும் பிருந்தாவன தரிசனப் பேறு கிட்டும். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், பல பிறவிகளிலும் கிடைத்தற்கரிய கங்காஸ்நான பாக்கியம், “சார்தாம்” எனப் புகழப்படும் கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் தீர்த்த, தல யாத்திரையை அளிக்கும் அதிகாரம் ராகு – கேது நிழல் கிரகங்களுக்கு உண்டு! அசுரர்களாக இருந்தாலும், அமுதம் பருகி, அதனால்பார்வதி – பரமேஸ்வரரின் கருணையும், தரிசனமும் கிடைத்து, கிரகப் பதவி பெற்றவர்களாதலால் மனிதப் பிறவியைப் பயனுள்ளதாகச் செய்யும் இத்தகைய தல தரிசனங்களைப் பெற்றுத் தரும், சுப பலம் படைத்தவர்கள் ராகுவும் – கேதுவும்! வேண்டிக் கொண்டவை நிறைவேறும்! கேது-வின் நிலையினால், கிடைத்த பணத்தைக் கொண்டு திருக்கோயில் திருப்பணிகள், ஏழைகளுக்கு அன்னதானம், கல்விக்கு உதவி செய்வது போன்ற புண்ணிய காரியங்களில், மனம் ஈடுபடும். கேது, மோட்சகாரகர். “பிறவி” எனும் தீராப் பிணியிலிருந்து நம்மை விடுவிக்கும் தெய்வீக ஆற்றல் பெற்றவர் என மிகப் பழைமையான ஜோதிட நூல்கள் விவரித்துள்ளன.
உத்தியோகம்: மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள். பொறுப்புகளில் திறமை பளிச்சிடும். தசா, புக்திகள் சாதகமாக இருப்பின், ஊதிய உயர்வையும் பெற்றுத் தருவார், மீன ராசியில் வலம் வரும் ராகு! புதிய வேலைக்கு முயற்சி செய்யும் மகர ராசியினருக்கு, எதிர்பார்ப்பு நிறைவேறும்.
தொழில், வியாபாரம்: தொழில் மற்றும் வியாபாரத்தில் ராகுவிற்கு நேரிடையான அதிகாரம் உண்டு. அவர் தற்போது நல்ல சுப பலம் பெற்றுத் திகழ்வதால், சந்தை நிலவரம் சாதகமாக நீடிக்கும்.உற்பத்தியை அதிகரிக்கலாம். முலப் பொருட்கள் சகாய விலைக்குக் கிடைக்கும். சில்லைறை வியாபாரிகள், நடைபாதை விற்பனையாளர்கள் ஆகியோருக்கு நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தித் தருவார், ராகு! கேதுவினால் நன்மைகள் ஏற்படும்.
கலைத் துறையினர்: புதிய வாய்ப்புகளைப் பெற்றுத் தருவார், ராகு! அதன் மூலம் வருமானமும் உயரும். திரைப்படத் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள் ஆகியோருக்கு வருமானம் உயரும். ஆடம்பரச் சுகங்களை வழங்குவதில் ராகு கணக்குப் பார்க்கமாட்டார் என ஜோதிடக் கலை கூறுகிறது. கேதுவின் நிலையினால், உபன்யாசகர்கள், ஓதுவா மூர்த்திகள், சிற்பக் கலை வல்லுநர்கள், ஓவியம் தீட்டும் நிபுணர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர்.
அரசியல் துறையினர்: கட்சியில் தொண்டர்களின் அமோக ஆதரவையும், தலைவர்களின் நல்லெண்ணத்தையும் பெற்றுத் தருவார், ராகு! கட்சித் தலைமைப் பீடத்திற்கு உங்கள் மீது கூடுதல் நம்பிக்கை ஏற்படும். புதிய பொறுப்புகள் உங்களிடம் ஒப்படைக்கப்படும்.
விவசாயத் துறையினர்: நல்ல விளைச்சல் கிடைக்க அருள்புரிவார், ராகு! கேதுவின் நிலையினால், பசுக்கள் அபிவிருத்தி அடையும். வருமானமும் உயரும். சந்தையில் உங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலையும், லாபமும் கிடைக்க வழிவகை செய்வார், கேது!!
மாணவ, மாணவியர்: உயர் கல்விக்கு அனைத்து உதவிகளும் கிடைக்கச் செய்வார், ராகு.வெளிநாடு சென்று, அங்குள்ள உயர் கல்வி நிறுவனங்களில் சேர இடம் கிடைக்கச் செய்வார், ராகு! கேது, கல்விக்கு ஸ்காலர்ஷிப் கிடைக்க உதவுவார். வங்கிகளும், நிதிநிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு உங்களுக்கு உதவுவதில் முண்டியடிப்பர்!
பெண்மணிகள்: திருமணமான பெண்மணிகளுக்கு குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். கணவர் – மனைவியரிடையே பரஸ்பர அந்நியோன்யமும், அன்பும் மேலிடும். பணவரவு சற்று உயருவதால், சேமிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் மற்றும் உங்கள் சந்ததியரின் எதிர்கால நலனுக்கு அது உதவுமல்லவா? கேதுவின் நிலையினால், பழைய கடன்கள் அடைய
வழி பிறக்கும்.
அறிவுரை: ராகு கொடுப்பதை விரயம் செய்துவிடாமல், எதிர்காலத்திற்கென்று சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.
பரிகாரம்: அருகிலுள்ள நவக்கிரக சந்நதியில் சனிக்கிழமைகளில் பிரதோஷ காலமாகிய மாலை நேரத்தில் நல்லெண்ணெய் தீபமும், செவ்வாய்க்கிழமைகளில் பசு நெய் தீபமும் ஏற்றி வந்தால், ராகு – கேதுவினால் அதிக நற்பலன்களைப் பெற்று மகிழலாம்.