(01.01.2026 முதல் 31.12.2026 வரை )
(அவிட்டம் 3ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3ம் பாதம் வரை)
குடும்பம்: ஜென்ம ராசியில், சனி - ராகு சேர்க்கை ஏற்பட்டுள்ளது. வருமானம் திருப்திகரமாக இருப்பினும், செலவுகள் எல்லை மீறிப் போகும். “கைப்பணம் எங்கே போயிற்று? எப்படிப் போயிற்று?” -என்று தெரியாத அளவிற்கு பணம் விரயமாகும்.குடும்பப் பிரச்னைகளும் மன அமைதியைப் பாதிக்கும். திருமண வயதில் பெண் அல்லது பிள்ளை இருப்பின், வரன் அமைவதில் தடங்கல்களும், தாமதங்களும் ஏற்பட்டு, பணவிரயத்திற்கு வழிவகுக்கும், மனதில் நிம்மதி குறையும்.நெருங்கிய உறவினர்களிடையே ஒற்றுமைக் குறைவும், தேவையற்ற வாக்குவாதமும், பரஸ்பர குற்றச்சாட்டுகளும் மனத்திற்கு வேதனையை ஏற்படுத்தும். சில குடும்பங்களில், பாகப்பிரிவினை ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை, கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.உத்தியோகம் காரணமாக, பெண் அல்லது பிள்ளை வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளதையும் சம்பந்தப்பட்ட கிரகங்கள் குறிப்பிடுகின்றன. தைரியமாக அனுப்பி வையுங்கள். அவர்களது எதிர்காலத்திற்கு மிகவும் நல்லது.
உத்தியோகம்: கும்ப ராசி, சனி பகவானின் ஆட்சிவீடாகும். ஆதலால், ஜென்ம ராசி தோஷம் சனி பகவானுக்குக் கிடையாது! அதற்கு மாறாக, அவரது ஜென்ம ராசி சஞ்சாரக் காலம் நன்மைகளையே செய்யும்.அலுவலகப் பணிகளும், பொறுப்புகளும் சக்திக்கு மீறியதாக இருக்கும். உடலும், மனமும் ஓய்விற்குக் கெஞ்சும். ஓய்வில்லாத உழைப்பினால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். நியாயமாக அளிக்கப்படக்கூடிய ஊதிய உயர்வு மற்றும் பதவியுயர்வு, சலுகைகள் ஆகியவை உங்களுக்கு மறுக்கப்படும். அதனால், பணிகளில் சோர்வும், விரக்தியும் ஏற்படும்.பணியை விட்டு விலகிவிட மனம் துடிக்கும். அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. வெளிநாடு செல்லும் முயற்சிகளில் பணத்தை இழப்பதற்கு சாத்தியக்கூறு உள்ளதால், இடைத்தரகர்களை நம்பி, ஏமாந்துவிட வேண்டாம்.
தொழில், வியாபாரம்: லாப ஸ்தானம் அனுகூலமாக இருப்பினும், ஜென்ம ராசியில் இணைந்துள்ள சனி - ராகு தோஷத்தினால், மிகக் கடினமான போட்டிகளைச் சந்தையில் நீங்கள் எதிர்கொள்ள நேரிடும். நிதி நிறுவனங்களும் தக்க தருணத்தில், சலுகைகளை மறுத்துவிடுவார்கள். கூட்டாளிகளும் பண உதவி செய்ய முன்வரமாட்டார்கள்.
அதனால், சரக்குகளின் தரம் உயர்ந்திருப்பினும், லாபம் கிடைக்காது. அதிக வட்டிக்கு, தனியாரிடம் கடன் வாங்க வேண்டிய அவசியம் ஏற்படும். இதுவே வியாபாரிகளின் தற்போதைய வீழ்ச்சிக்குக் காரணமாக அமையும்.
கலைத் துறையினர்: வாய்ப்புகள் குறையும். அதன் காரணமாக, வருமானமும் பாதிக்கப்படும். எதிர்பார்த்திருந்த கலை நிகழ்ச்சிகளில், லாபம் கிடைப்பது கடினமே!
வெளிநாடு சென்று-வரும் வாய்ப்புகளும், கடைசி நேரத்தில் ஏமாற்றத்தில் கொண்டுபோய் விடும். சோதனையான காலகட்டத்தில் நீங்கள் தற்போது இருப்பதை கிரக நிலைகள் உள்ளங்கை நெல்லிக் கனி என எடுத்துக்காட்டுகின்றன. எந்த நிகழ்ச்சிகளில் ஒப்புக் ெகாள்வதாக இருந்தாலும், தீர விசாரித்து அதன் பின்பே ஏற்றுக் கொள்வது விவேகமாகும்.
அரசியல் துறையினர்: ஜென்ம ராசியில் சக்திவாய்ந்த சனி மற்றும் ராகு நிலை கொண்டுள்ளதை நினைவில் வைத்துக் ெகாள்ளுங்கள்!கூடியவரையில் உங்கள் கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என கிரக நிலைகள் வற்புறுத்துகின்றன. உங்கள் அரசியல் வாழ்க்கையில், மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டிய தருணமிது என்பதை கிரக நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன!
மாணவ - மாணவியர்: வித்யா காரகர் மட்டுமின்றி, இதர கிரகங்களும் உங்களுக்கு அனுகூலமாக இல்லை! பாடங்களில் ஈடுபாடு குறையக்கூடும். தரக் குறைவான பழக்க - வழக்கங்கள் உள்ள நண்பர்களுடன் நட்புறவு ஏற்படும். இது உங்கள் கல்வி முன்னேற்றத்தை வெகுவாக பாதித்துவிடும் என கிரக நிலைகள் வலியுறுத்துகின்றன.
விவசாயத் துறையினர்: வயல் பணிகளில், ஓயாது பாடுபட்டும், விளைச்சல் மட்டும் எதிர்பார்த்திருந்த அளவிற்கு இராது! கடினமாக உழைத்தும்கூட, ஏமாற்றமே மிஞ்சும். தக்க தருணத்தில், மழையும் பொய்க்கும்!! அதிக வெயிலில் பயிர்கள் காய்ந்துபோய்விடும். கால்நடைகள் நோயினால் பாதிக்கப்படும். என்றோ பட்ட கடன்கள் கவலையை அளிக்கும்.
பெண்மணிகள்: ஜென்ம ராசியில், சக்திவாய்ந்த சனி பகவானும், ராகுவும் இணைந்திருப்பதால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். குடும்ப நலன் காரணமாக, கவலையும் ஏற்பட்டு உடல் நலனைப் பாதிக்கும். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு, அலுவலகச் சூழ்நிலையும், பணிச் சுமையும், குடும்பக் கவலைகளும் ஒன்றுசேர்ந்து உடல் ஆரோக்கியத்தைப் பாதித்துவிடுவதற்கு வாய்ப்புள்ளது. உடல் நலனில் கவனமாக இருத்தல், மிகவும் அவசியம்.
அறிவுரை: கற்பனையான கவலைகளைத் தவிர்ப்பது மிகவும் அவசியம்.
பரிகாரம்: திருக் கொள்ளிக்காடு, திருநாகேசுவரம், திருநள்ளாறு தரிசனம் அவசியம். இவற்றில் ஏதாவது ஒன்றையாவது எள் எண்ணெய் தீபம் ஏற்றிவைத்து, தரிசித்தல் வேண்டும்.


