search-icon-img
featured-img

கடகம்

Published :

(01.01.2026 முதல் 31.12.2026 வரை )

(புனர்பூசம் 4ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் வரை)

குடும்பம்: ராசிக்கு விரயத்தில், குரு பகவான்! தன ஸ்தானத்தில் கேது!! ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் சூரியன் - செவ்வாய் - புதன் - சுக்கிரன் சஞ்சரிப்பது அனுகூலமான கிரக நிலையல்ல!!இது தவிர, ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சனி - ராகு கூட்டுச் சேர்க்கையும் ஏற்பட்டுள்ளது!! உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம்.குறிப்பாக, இரவு நேரப் பயணங்கள், வாகனம் ஓட்டுதல், தனியே வெளிச் செல்வது ஆகியவற்றின்போது எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியம். விபத்துகள் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளதை இத்தகைய கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.கும்ப ராசியில், சனியும், ராகுவும் இணைந்திருப்பது நன்மை செய்யாது!!சனிக்கும், ராகுவிற்கும் இரவு நேரங்களில் சக்தி அதிகம் எனக் கூறுகின்றன, மிகப் புராதனமான ஜோதிடக் கிரந்தங்கள். மேலும், தரக்குறைவான உணவகங்களில் உண்பதையும் தவிர்க்க வேண்டும்.பிறருடன் வாக்குவாதம் செய்வதையும், விலக்க வேண்டும். அலுவலகப் பணிகளில் கவனமாக இருத்தல் மிக மிக அவசியம். தவறுகள் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.

உத்தியோகம்:வேலை பார்க்கும் இடத்தில், மேலதிகாரிகளின் மற்றும் சக ஊழியர்கள் ஆகியோருடன் அனுசரித்தும், விட்டுக் கொடுத்தும் நடந்துகொள்வது தேவையற்ற பிரச்னைகளில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்க உதவும்.

புதிய வேலைக்கு முயற்சித்துவரும் அன்பர்களுக்கு, பல விதத் தடங்கல்கள் ஏற்படும்.வெளிநாடுகளில் வேலை பார்த்துவரும் அன்பர்களுக்கு, சக ஊழியர்களினால், பிரச்னைகளும், வேலைக்கு ஆபத்தும் ஏற்படக்கூடும். அனைவரிடமும், சற்று அனுசரித்தும். விட்டுக் கொடுத்தும் நடந்து கொள்வது உங்கள் எதிர்கால நன்மைக்கு உதவும்.

தொழில், வியாபாரம்: சந்தையில், மிகக் கடினமான, நியாயமற்ற போட்டிகளை நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும். சகக்-கூட்டாளிகளே உங்கள் நலனிற்கு எதிராக நடந்து கொள்வார்கள்.தக்க தருணத்தில், நிதி நிறுவனங்களும், ஒத்துழைக்க மறுத்துவிடுவார்கள்! இதன் காரணமாக, சந்தையில் விற்பனை பாதிக்கப்படும்.பல விற்பனைக் கிளைகளுக்கு உங்கள் சரக்குகள் செல்வது தடைப்படும். உற்பத்திக்கு, அத்தியாவசியான மூலப் பொருட்கள் கிடைப்பதிலும் பிரச்னைகள் ஏற்படும் என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.இத்தனை பிரச்னைகளுடன் மன்றாடிக் கொண்டிருக்கும் தருணத்தில், வங்கி மற்றும் இதர நிதி நிறுவனங்களும், புதிய பிரச்னைகளை ஏற்படுத்தும்.

கலைத் துறையினர்: சுக்கிரன் ஒருவரே ஓரளவு அனுகூலமாக சஞ்சரிக்கிறார். மற்ற பிரதான கிரகங்கள் அனுகூலமாக இல்லை!எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் கைநழுவிப் போகும், வருமானம் குறையும். கிடைக்கும் சில வாய்ப்புகளும் எதிர்பார்த்திருந்த வருமானம் கிடைக்காமல், ஏமாற்றம் ஏற்படும். ஆயினும், உங்கள் ெசலவுகள் எதையும் குறைத்துக் கொள்ள முடியாது.பழைய கடன்களும் நீடிப்பதால், மன அமைதி பாதிக்கப்படக்கூடும். கிடைக்கும் வாய்ப்புகளிலும் வருமானம் மட்டும் சொற்ப அளவிலேயே இருக்கும்.

அரசியல் துறையினர்: பிரதான கிரகங்கள் அனைத்தும் அனுகூலமாக இல்லை! இருப்பினும், அரசியல் துறையை, தனது ஆதிக்கத்தில் கொண்டுள்ள சுக்கிரன், ஓரளவு கைகொடுத்து உதவுகிறார்.வருமானம் நீடிக்கும், ஆயினும், எதிர்பார்த்த அளவிற்கு இராது. அதற்கு மாறாக, கைப் பணம் விரயமாகும்.அரசியல் பகட்டு காரணமாக, எந்தச் செலவையும் குறைத்துக் கொள்ள முடியாது. உயர்மட்டத் தலைவர்களைச் சந்திப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். இல்லாவிடில், புதிய பிரச்னைகளில் நீங்கள் சிக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

மாணவ - மாணவியர்: கல்வி முன்னேற்றத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு, பாடுபட வேண்டியிருக்கும். புத்தகத்தைக் கையில் எடுத்தாலயே உறக்கம் மேலிடும்.தகுதியற்றவர்களுடன் நட்பு ஏற்படும். அதுவே உங்கள் கல்வியைப் பாதிக்கக்கூடும் என கிரகங்கள் எடுத்துக்காட்டுகின்றன. நீங்களுண்டு, உங்கள் படிப்புண்டு! -என்று இருப்பது, உங்களுக்கு நன்மை செய்யும்.

விவசாயத் துறையினர்: அதிக வெயில், குறைந்துவரும் தண்ணீர் வசதி, கால்நடைகளின் பராமரிப்பில் அதிக செலவு, பழைய கடன்கள் என பல பிரச்னைகளை இவ்வருடம் நீங்கள் சமாளிக்க வேண்டி வரும். இக்கட்டான இச்சூழ்நிலையினால், நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டிவரும். மழையின்மையினால், பயிர்கள் வாடி - வதங்கும். ஆடு - மாடுகளும் நோய்வாய்ப்படும்.இந்நிலையில், என்றோ பட்ட கடன்களும் தொல்லை தரும்.

பெண்மணிகள்: கிரக நிலைகள் அனுகூலமாக இல்லை! குடும்பப் பிரச்னைகள், மன நிம்மதியைப் பாதிக்கும். மருத்துவச் செலவுகளில் பணம் விரயமாகும்.திருமண வயதிலுள்ள கன்னியருக்கு, வரன் அமைவது தடை படும். வேலைக்குச் சென்றுவரும் வனிதையருக்கு, அலுவலகச் சூழ்நிலை கவலையளிக்கும். வேலைக்கு முயற்சித்துவரும் பெண்களுக்கு தடங்கல் உண்டாகும்.

அறிவுரை: வீண் அலைச்சல்களையும், கவலைகளையும் தவிர்ப்பது மிகவும் அவசியம். இல்லாவிடில், நோயுற்று,படுக்கையில் அவதியுற நேரிடும்.

பரிகாரம்: தினமும் காலை - மாலை இருவேளைகளிலும் கந்தர் சஷ்டி கவசம் படித்து வந்தால் போதும், அற்புத பலன் கிட்டும். இதுதவிர, அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் மாலையில் சிறிது நல்லெண்ணெய் அல்லது நெய் தீபம் ஏற்றிவருதல் கைமேல் பலனளிக்கும்.