search-icon-img
featured-img

மகரம்

Published :

(01.01.2026 முதல் 31.12.2026 வரை )

(உத்திராடம் 2ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் வரை)

குடும்பம்: ஏழரைச் சனியின் பிடியில் அகப்பட்டு தவித்துவந்த உங்களுக்கு, அந்தத் தோஷம் நிவர்த்தியாகவுள்ளது. வறண்ட பூமிக்கு, பெய்யும் மாமழை போலும், சனி பகவானின் ஏழரை வருட தோஷம் நீங்கவுள்ளது!!தொடர்ந்து ஏற்பட்டுவந்த பணக் கஷ்டம் படிப்படியாக விலக ஆரம்பிக்கும். நெருங்கிய உறவினர்களிடையே ஏற்பட்டுவந்த வாக்குவாதமும், ஒற்றுமைக் குறைவும் நீங்கும் காலம் ஏற்பட்டுள்ளது. உத்தியோகம் காரணமாக, பிரிந்திருந்த கணவர் - மனைவி மீண்டும் ஒன்றுசேர்வர். விவாகரத்து போன்ற வழக்கு இருப்பின், சமரசத்தில் முடியும். குடும்பத்தில், சுபநிகழ்ச்சிகள் நிகழும்.உடல் ஆரோக்கியத்திலும் நல்ல அபிவிருத்தி ஏற்படும். திருமண வயதில் பெண் அல்லது பிள்ளை இருப்பின், நல்ல வரன் அமையும்.பழைய கடன்கள் படிப்படியாக நீங்கிவிடும். மனம் அமைதிபெறும். வெளிநாட்டில் பணியாற்றிவரும், பெண் அல்லது பிள்ளையின் வருகை குடும்பத்தில் குதுகலத்தை ஏற்படுத்தும். பலருக்கு, சொந்த வீடு அமையும் யோகமும் உள்ளது.

உத்தியோகம்: உத்தியோகத்தில் நல்ல மாறுதல் ஏற்படுவதை அனுபவத்தில் பார்க்கலாம். உங்களைக் கண்டாலே முகம் சுழிக்கும் மேலதிகாரி ஒருவர் இடமாற்றம் செய்யப்படுவதால், இனி நிம்மதியாக உங்கள் பணிகளில் கவனத்தைச் செலுத்தலாம்.சிலருக்கு, வேலையில் நல்ல மாற்றமும் ஏற்படக்கூடும் என கிரக நிலைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. வெளிநாடு சென்று, பணியாற்ற விருப்பமிருப்பின், இப்போது முயற்சிக்கலாம். எளிதில் வெற்றி கிட்டும். தற்காலிகப் பணிகளில் உள்ள அன்பர்களுக்கு, பணி நிரந்தரமாகும்.

தொழில், வியாபாரம்: கிரக நிலைகள் வர்த்தகத் துறையினருக்கு மிகவும் அனுகூலமாக அமைந்துள்ளன. உற்பத்தியை அதிகரித்துக் கொள்ள ஏற்ற தருணமிது. சந்தையில் உங்கள் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். போட்டிகள் குறையும், லாபம் உயரும். புதிய முதலீடுகளில் அளவோடு இறங்கலாம். விற்பனையை உயர்த்துவதற்காக, வெளி மாநிலங்களுக்குச் சென்றுவரும் சாத்தியக்கூறும் உள்ளது. நிதி வசதியுள்ள பிரமுகர் ஒருவர், உங்களுடன் பங்குதாரராக சேருவதற்கு வாய்ப்புள்ளது. ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாடு சென்று-வரும் வாய்ப்பும் உருவாகும்.

கலைத் துறையினர்: சுக்கிரன் இம்மாதம் முழுவதும் உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிப்பதால், வாய்ப்புகள் அதிகரிக்கும். ஒருசிலர் வெளிநாடுகளுக்குச் சென்று, அங்கு நிகழும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகளும் உருவாகும். உங்கள் வருமானத்தை உயர்த்திக் கொள்ள அரிய சந்தர்ப்பமாகும் இது!!உங்கள் பொருளாதார நிலையைச் சரி செய்து கொள்ள இம்மாதத்தில் வழிபிறக்கும். மக்களிடையே பெயரும், செல்வாக்கும் உயரும்.

அரசியல் துறையினர்: அரசியல் துறையை தனது ஆதிக்கத்தில் கொண்டுள்ள சுக்கிரனும், இத்துறைக்கு சம்பந்தப்பட்ட இதர கிரகங்களும் சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், கட்சியில் ஆதரவு பெருகும்.உயர்மட்டத் தலைவர்கள் உங்கள் கருத்துகளுக்கு செவி சாய்ப்பார்கள். தசா, புக்திகள் ஆதரவாக இருப்பின், கட்சி சார்பாக வெளிநாடு ஒன்றிற்குச் சென்று-வரும் சாத்தியக்கூறும் உள்ளது. இதன் காரணமாக, கட்சியில் உங்கள் செல்வாக்கு உயரும்.

மாணவ - மாணவியர்: கல்வித் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள புதனுள்ளிட்ட அனைத்து கிரகங்களும் உங்களுக்கு ஆதரவாக வலம் வருகின்றனர். பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும். நினைவாற்றலும், கிரகிப்புத் திறனும் அதிகரிக்கும். உயர் கல்விக்கு நிதியுதவி எளிதில் கிடைக்கும். வெளிநாடுகளிலுள்ள, பிரசித்திப் பெற்ற கலாசாலையில் உயர் கல்விக்கான இடம் கிடைக்கும். இந்தச் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். அரிது, அரிது வாய்ப்புகள் கிடைப்பது! கிடைப்பதை நழுவ விடாமல் பயன்படுத்திக் கொள்வது நம் கைகளில்!!

விவசாயத் துறையினர்: வயலைச் சற்று பார்த்தாலே, எந்த அளவிற்கு பூமிகாரகரான செவ்வாய் மற்றும் விவசாயத் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள சூரியன் மற்றும் சனி ஆகியவை உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கின்றனர் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்!விளைச்சலும் வருமானமும் எதிர்பார்்த்ததைவிட, பல மடங்்கு அதிகமாகவே கிடைக்கும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெறலாம். உங்கள் விவசாயத்திற்கு நவீன உபகரண வசதிகள் எளிதில் கிடைக்கும்.சிலருக்கு, புதிய கால்நடைகளும், விவசாய பூமியும் வாங்கும் யோகமும் அமைந்துள்ளது. இது ஓர் அரிய சந்தர்ப்பம்! பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!

பெண்மணிகள்: மகர ராசியில் பிறந்துள்ள பெண்மணிகளுக்கு, பெரும்பான்மையான கிரகங்கள் உதவிகரமாக வலம் வருகின்றனர். ஆதலால், பல நன்மைகளும் இப்போது எதிர்பார்க்கலாம்.ஆரோக்கியத்தில் நல்ல அபிவிருத்தி ஏற்படும். உத்தியோகத்திற்கு முயற்சித்துவரும் வனிதையருக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணத்திற்குக் காத்துள்ள பெண்களுக்கு, மனத்திற்கு உகந்த வரன் அமையும்.

அறிவுரை: உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்! கைப் பணத்தை திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும். பிறர் பிரச்னைகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டாம்.

பரிகாரம்: உங்கள் வீட்டின் பூஜையறையிலோ அல்லது அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிலோ சனிக்கிழமைதோறும், மாலையில் எள் எண்ணெய் தீபம் ஒன்று ஏற்றிவந்தால் போதும். அளவற்ற நன்மைகள் ஏற்படும்.தினமும் ஓர் ஏழைக்கோ அல்லது பசுவிற்கோ உணவளித்து வந்தாலும் நல்ல பலன் கிட்டும். இவை தவிர, தினமும் மூன்று அல்லது ஐந்து சாத உருண்டைகளில் நெய், பருப்பு, எள் சேர்த்து, காகத்திற்கு வைத்தாலும் போதும். தன்னிகரற்ற தோஷ பரிகாரமிது.