(01.01.2026 முதல் 31.12.2026 வரை )
(மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் வரை)
குடும்பம்: ஜென்ம ராசியில், வக்கிர கதியில் குரு பகவான் சஞ்சரிப்பதால், வரவிற்கு மீறிய செலவுகள் ஏற்படும்.சிறு காரியத்திற்குக்கூட அதிக அலைச்சலும் உழைப்பும் தேவைப்படும். களத்திர ஸ்தானத்தில், சூரியன் - செவ்வாய் இணைந்திருப்பதால், மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் நல்லது.பாக்கிய ஸ்தானத்தில சனி - ராகு சஞ்சரிப்பதால், வெளியூர்ப் பயணங்களும், வீண் செலவுகளும், குடும்பப் பிரச்னைகளும் உடல் அசதியை ஏற்படுத்தும்.நெருங்கிய உறவினர்களிடையே தேவையற்ற வாக்குவாதமும், ஒற்றுமைக் குறைவும் ஏற்படும். நீதி மன்ற வழக்குகள் இருப்பின், சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
உத்தியோகம்: மேலதிகாரிகள், உங்களுக்கு ஆதரவாகவும், நியாயமாகவும் நடந்துகொள்வார்கள்.இருப்பினும், வேலைப் பளுவும், பொறுப்புகளும் சக்திக்கு மீறியதாகவே இருக்கும். சக-ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். உங்களுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய சலுகைகள் மறுக்கப்படுவதால், மனதில் ஏமாற்றமும், எதிர்காலத்தைப் பற்றிய அச்சமும், அவ நம்பிக்கையும் மனத்தை வருத்தும்.வேறு வேலைக்குச் சென்றுவிடலாமா? -என மனம் விழைந்தாலும், மனதில் தைரியம் ஏற்படாது.
தொழில், வியாபாரம்: சந்தையில் போட்டிகள் கடுமையாக இருப்பினும், லாபம் திருப்திகரமாகவே இருக்கும்.உங்கள் சரக்குகளுக்கு நல்ல விலை கிடைக்கும். வர்த்தகத்தை அபிவிருத்தி செய்வதற்கு ஏற்ற மாதம் இது. நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.ஏற்றுமதித் துறை அன்பர்களுக்கு, வெளிநாடுகளிலிருந்து, புதிய தொடர்புகள் ஏற்படுவதால், வியாபாரம் பன்மடங்கு அதிகரிக்கும்.தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், வெளிநாடு ஒன்றிற்குச் சென்று - வரும் வாய்ப்பும், கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் சாத்தியக்கூறும் உள்ளது.புதிய முதலீடுகளில் துணிந்து ஈடுபடலாம். லாபம் கிட்டும். புதிய கிளைகள் திறப்பதற்கும் கிரக நிலைகள் அனுகூலமாக உள்ளன. இது ஓர் அரிய சந்தர்ப்பம். பயன் படுத்திக் கொள்வது உங்களின் திறமையில்தான் உள்ளது.
கலைத் துறையினர்: திரைப்படத் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள் ஆகியோருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். பணப் பற்றாக்குறை நீங்கும்.பல மாதங்களாக உங்கள் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வந்த உங்களுக்கு, ஓர் அரிய சந்தர்ப்பம் இது!
அரசியல் துறையினர்: அரசியல் துறையைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள சுக்கிரனும், செவ்வாயும் சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், செல்வாக்கும், புகழும் கொண்டு விளங்கும் அரசியல் கட்சி ஒன்றின் ஆதரவு உங்களுக்குப் புதிய வாய்ப்புகளை அளிக்கவுள்ளது. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.மாற்றியமைக்கும் நேரமிது! நழுவ விட்டுவிடாதீர்கள்!!
மாணவ - மாணவியர்: கல்வித் துறையைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள அனைத்து கிரகங்களும் சுப பலம் பெற்று வலம் வருவதால், பாடங்களில் மனம் ஆர்வத்துடன் ஈடுபடும்.தேர்வுகளில் உடனுக்குடன் சரியான பதிலளிப்பதற்கு இக் கிரக நிலைகள் உதவிகரமாக அமைந்துள்ளன. வெற்றி உறுதி!கிரகிப்புத் திறனும், நினைவாற்றலும் மேம்படும்.உயர் கல்விக்கு உதவிகள் தேடி வரும்.
விவசாயத் துறையினர்: விவசாயத் துறை, செவ்வாய் மற்றும் சூரியன் ஆகிய இரு பிரதான கிரகங்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. மற்ற கிரகங்களான சனி மற்றும் ராகு ஆகியோருக்கும் விவசாயத் துறையில் ஆதிக்கம் உண்டு! ஆதலால், வயல் பணிகளில் உழைப்பு கடினமாக இருக்கும். உழைப்பிற்கேற்ற நல்ல விளைச்சல்களையும் அளித்தருள்வார்கள், சனி பகவானும், ராகுவும்!!நேர்மைக்கும், நியாயத்திற்கும் எடுத்துக்காட்டாக சனிபகவானைக் கூறுகிறது, ஜோதிடக் கலை! கண்டிப்பிற்கும் அவரே உதாரணம்.
பெண்மணிகள்: ஜென்ம ராசியில், வக்கிர கதியில் குரு பகவான் சஞ்சரிப்பதால், குடும்பக் கவலைகளும், குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகளும் மனத்தை வாட்டும்.திருமண வயதிலுள்ள பெண்மணிகளுக்கு, வரன் அமைவது சற்று கால தாமதமாகும். அதுவே கவலைக்கு மூலகாரணமாக அமைந்துவிடும்.கணவருடனும், நெருங்கிய பிற உறவினர்களுடனும் சற்று அனுசரித்தும், விட்டுக் கொடுத்தும் நடந்து கொள்வது, அவசியம் என்பதை பெண்மணிகளுக்கு, கிரக நிலைகள் அறிவுறுத்துகின்றன. வேலை பார்க்கும் பெண்மணிகளுக்கு, அலுவலகச் சூழ்நிலை திருப்தியை அளிக்கும். ஆயினும், பணிச் சுமை சக்திக்கு மீறியதாக இருக்கும்.
குடும்பப் பொறுப்பை ஏற்றுள்ள பெண்மணிகளுக்கு, பல குடும்பப் பிரச்னைகள் மன நிம்மதியைப் பாதிக்கும்.
அறிவுரை: முன்கோபம், பிடிவாதம் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. இயலாவிடில், குறைத்துக் கொள்ளவாவது முயற்சி செய்யுங்கள்.சிக்கனம், தேவை இக்கணம்! அதுபோல், கடன் வாங்குவதையும், கடன் கொடுப்பதையும் தவிர்க்கவும்.
பரிகாரம்: வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் ஏழை ஒருவருக்கு அன்னம் அளிப்பது, மிகச் சிறந்த பரிகாரமாகும். பல மடங்கு நற்பலனை அளிக்கவல்லது.இது தவிர, வியாழக் கிழமைதோறும், மாலையில் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில், தீபத்தில் சிறிது பசு நெய் அல்லது எள் எண்ணெய் சேர்த்து வந்தாலும் போதும். பலன் கைமேல் கிட்டும். இதை அனுபவத்தில் காணலாம்.


