search-icon-img
featured-img

சிம்மம்

Published :

(01.01.2026 முதல் 31.12.2026 வரை )

(மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை)

குடும்பம்: 2026-ம் வருடம், மார்ச் 6-ந் தேதி சனி பகவான், மீன ராசிக்கு மாறுகிறார். சிம்ம ராசிக்கு, மீனம் அஷ்டம ஸ்தானமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம்.தேவையற்ற அலைச்சல்களையும், வெளியூர்ப் பயணங்களையும் குறைத்துக் கொள்வது அவசியம். வரவை விட, செலவுகளே அதிகமாக இருக்கும்.நெருங்கிய உறவினர்களிடையே பரஸ்பர ஒற்றுமையும், அந்நியோன்யமும் பாதிக்கப்படும். வீடு மாற்றத்திற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன. அனைவரிடமும் அனுசரித்து நடந்து கொள்வது அவசியமாகும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வெளியூர்ப் பயணங்களின்போதும், வாகனம் ஓட்டும்போதும் அதிஜாக்கிரதையாக இருத்தல் அவசியம்.திருமண முயற்சிகளில் தவறான வரனை நிச்சியித்துவிடும் சாத்தியக்கூறும் உள்ளது. ஆதலால், திருமண வயதில் பெண் அல்லது பிள்ளை வைத்திருப்போர், வரனை நிச்சயித்துவிடும் முன்பு, தீர விசாரித்தும், யோசித்தும் முடிவெடுப்பது மிகவும் முக்கியமானது.மேலும், இத்தகைய கிரக நிலைகள் அமையும்போது, கடன் வாங்குவதைத் தவிர்த்தல் அவசியம் என ஜோதிடக் கலை வற்புறுத்துகிறது. காரணம், இத்தகைய கிரக நிலையில் வாங்கும் கடன்கள் வளரும் என்பது ஜோதிடக் கலையின் விதியாகும்.

உத்தியோகம்: நவ கிரகங்களில், சனி பகவான்தான் உத்தியோகத் துறைக்குக் காரகத்துவம் கொண்டுள்ளவர்! அவர், ராசிக்கு 8-ம் இடத்தில் சஞ்சரிக்கும்போது, அன்றாடப் பணிகளில், அதிகக் கவனமாக இருத்தல் வேண்டும் என்பதையும் ஜோதிடம் வற்புறுத்திக் கூறுகிறது. புதிய வேலைக்கு முயற்சித்துவரும் அன்பர்கள், இடைத் தரகர்களிடம் பணம் கொடுத்து, ஏமாந்துவிட வேண்டாம். “எப்படியாவது வேலை கிடைத்தால் போதும்!” -என்ற எண்ணத்தில் பிறரை நம்பி, ஏமாந்துவிடும் சாத்தியக்கூறு உள்ளது.

தொழில், வியாபாரம்: மார்ச் 6, 2026-ந் தேதியன்று சனி பகவான், ராசியின் அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுவதால், சந்தையில் மிகக் கடினமான போட்டிகளைச் சந்திக்க நேரிடும். அதனால், உங்கள் விற்பனையையும், லாபத்தையும் தக்க வைத்துக் கொள்ள பாடுபடவேண்டியிருக்கும்.நிதி நிறுவனங்களினாலும், பிரச்னைகள் ஏற்படக்கூடும். சகக் கூட்டாளிகள் ஒத்துழைக்க மறுப்பார்கள். ஊழியர்களினாலும், பிரச்னைகள் ஏற்பட்டு, அவற்றைத் தீர்ப்பதற்குப் போராட வேண்டிவரும்.

கலைத் துறையினர்: வாய்ப்புகளும், வருமானமும் குறையக்கூடும். சபாக்களின் அலட்சியப் போக்கு, மனத்திற்கு வேதனையைத் தரும். பழைய கடன்கள் மன நிம்மதியைப் பாதிக்கும். வாய்ப்புகளுக்காக, அலையவேண்டிவரும்.கிடைக்கும் சில சந்தர்ப்பங்களிலும், எதிர்பார்க்கும் அளவிற்கு வருமானம் கிடைப்பது சந்தேகமே! பரதநாட்டியக் கலைஞர்களுக்கு, வருமானம் பாதிக்கப்படக்கூடும்.

அரசியல் துறையினர்: அரசியல் துறைக்கு அதிகாரம் படைத்துள்ள கிரகங்கள், பலம் குறைந்து வலம் வருவதால், உங்கள் பேச்சுக்களிலும், பிறர் தொடர்புகளிலும் எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் அவசியம்.உயர்மட்டத் தலைவர்கள் எவரையும் முழுமையாக நம்பிவிட வேண்டாம். கூடியவரையில், பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பதைத் தவிர்த்தல் அவசியம்.மனதை உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிடில், புதிய பிரச்னைகளில் சிக்கிக் கொள்ள நேரிடும்.

மாணவ - மாணவியர்: கல்வித் துறையைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள “வித்யாகாரகர்” எனப் போற்றப்படும் புதன், ஓரளவே சாதகமாக இருப்பதால், பாடுபட்டு படிக்க வேண்டி வரும். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் குறையும்.படிக்க உட்கார்ந்தால், சோம்பலும், உறக்கமும் மேலிடும். விடுதிகளில் தங்கி, படித்துவரும் மாணவ - மாணவியருக்கு, பணப் பிரச்னை கவலையை அளிக்கும். உயர் கல்விக்கு இடம் கிடைப்பதற்கு, பாடுபடவேண்டியிருக்கும்.வெளிநாடு சென்று பிரத்யேக உயர் கல்வி பயில ஆர்வமுள்ளவர்களுக்கு, பணப் பிரச்னை கவலையளிக்கும்.

விவசாயத் துறையினர்: விவசாயத் துறைக்கு அதிகாரம் படைத்த செவ்வாய், ஓரளவு சாதகமாக சஞ்சரிக்கிறார். ஆயினும், மற்ற கிரகங்களினால், அனுகூலமில்லை!வயல் பணிகள் சற்று கடுமையாகவே இருக்கும். பாடுபடும் அளவிற்கு, விளைச்சல் கிடைப்பது சற்று கடினமே!மழையும், எதிர்பார்த்த அளவிற்குப் பெய்யாது, பொய்த்துப் போகும். இயற்கையின் ஒத்துழைப்பும் ஏமாற்றத்தைத் தரும். கால்நடைகளினால், பராமரிப்பு மற்றும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். பழைய கடன்கள் நீடிக்கின்றன.

பெண்மணிகள்: உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் அவசியம் என்பதை கிரக நிலைகள் தெள்ளத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன.வெயிலில் அலைவதைக் குறைத்துக் கொள்வது நல்லது. வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகள், அலுவலகத்தில் பிற ஊழியர்களுடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்தல் வேண்டும் என கிரக நிலைகள் அறிவுறுத்துகின்றன. தேவையற்ற பிரச்னைகளில் சிக்கிக் கொள்ள சாத்தியக்கூறுகள் உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுவதாலேயே இந்த எச்சரிக்கை விடுக்கின்றோம். திருமணத்திற்குக் காத்துள்ள பெண்மணிகளுக்கு, வரன் அமைவதில் தாமதங்களும், தடங்கல்களும் உண்டாகும். வேலைக்கு முயற்சித்துவரும் பெண்மணிகளுக்கு, சிறு சிறு தடங்கல் ஏற்பட்டு , கவலை தரும்.

அறிவுரை: அஷ்டம (8-ம் இடம்) ஸ்தானத்திற்கு சனி வரவிருப்பதால், உடல் நலனில் அக்கரையுடன் இருத்தல் அவசியம். வெளியூர்ப் பயணங்களின்போது, எச்சரிக்கையுடன் இருப்பது முக்கியம். காரணம், பொருட்கள் களவு போகக் கூடும் என்பதனாலேயே இந்த அறிவுரை.

பரிகாரம்: சனிக்கிழமை தோறும், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில், தீபத்தில் சிறிது எள் எண்ணெய் சேர்த்து வந்தால், அதிசயத்தக்க பலன் கிட்டும். அல்லது ஏழை ஒருவருக்கு, உணவளித்தாலும், அதே பலன் உங்களை வந்தடையும். அல்லது காகத்திற்கு மூன்று அல்லது ஐந்து சாத உருண்டைகள் சிறிது எள், பருப்பு ெநய் கலந்து வைப்பது மிகச் சிறந்த பரிகாரமாகும்.