(01.01.2026 முதல் 31.12.2026 வரை )
(சித்திரை 3ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ம் பாதம் வரை)
குடும்பம்: ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்துள்ள குரு பகபவான், ராசியைப் பார்ப்பது, மிகவும் அனுகூலமான கிரக நிலையாகும்.பண வசதி திருப்திகரமாகவே இருக்கும். செலவுகள் கட்டுக்கடங்கியே இருக்கும். எதிர்பாராத பண வரவிற்கும் சாத்தியக்கூறு உள்ளது.மனைவியின் உடல் ஆரோக்கியத்தில், திருப்திகரமான முன்னேற்றத்தைக் காணலாம். சிலருக்கு, வீடுமாற்றம் ஏற்படவிருக்கும் வாய்ப்புள்ளது. திருமண முயற்சிகளில், வெற்றி கிட்டும்.குடும்பத்தில், பிரச்னைகள் தீர்ந்து, ஒற்றுமை நிலவும். கல்வி முடிந்து, வேலைக்கு முயற்சித்துவரும் பெண் அல்லது பிள்ளைக்கு நல்ல வேலை கிடைக்கும். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், வெளிநாட்டில் வேலை கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் சுட்டிக்காட்டுகின்றன.விவாகமாகியுள்ள பெண்மணிகளுக்கு, கருத்தரிக்க கிரக நிலைகள் சுப பலம் பெற்று விளங்குகின்றன. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நிலவும், நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம் முதலிய சுப நிகழ்ச்சிகளினால், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
உத்தியோகம்: கிரக நிலைகள் சுப பலம் பெற்றுள்ளன. தற்காலிகப் பணியாளர்கள், அவரவரது பணிகளில் நிரந்தரம் செய்யப்படுவார்கள்.புதிதாக வேலைக்கு முயற்சித்துவரும் அன்பர்களுக்கு, நல்லவேலை கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு பணிகளில் உற்சாகத்தைத் தரும். ஆயினும், பணிச் சுமை சக்திக்கு மீறியதாகவே இருக்கும். ஓய்வின்றி உழைக்க நேரிடும்.வெளிநாடு சென்று, வேலை பார்க்க வேண்டுமென்ற விருப்பமிருப்பின், இப்போது முயற்சிக்கலாம். வெற்றி கிட்டும்.
தொழில், வியாபாரம்: தொழிலை விருத்தி செய்து கொள்வதற்கு ஏற்ற காலகட்டம் இது என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
புதிய கிளைகள் ஆரம்பிப்பதற்கும், ஏற்ற நேரமிது. ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் புதிய ஆர்டர்கள் உற்சாகத்தை ஏற்படுத்தும்ஆயினும், சகக் கூட்டாளிகளினால், பிரச்னைகள் ஏற்படும். சில தருணங்களில், பிரிவினையும் ஏற்படக்கூடும்.
கலைத் துறையினர்: புதிய வாய்ப்புகள் உற்சாகத்தை ஏற்படுத்தும். வருமானம் உயரும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெறலாம். புதிய விற்பனை நிலையங்களைத் திறப்பதற்கு ஏற்ற காலகட்டம் இது. தசா, புக்திகள் அனுகூலமாக இருப்பின், வெளிநாடு சென்று வரும் வாய்ப்பும் கிட்டும். மக்களிடையே செல்வாக்கு உயரும்.உங்கள் பொருளாதார நிலையைச் சரி செய்து கொள்ள ஏற்ற காலகட்டம் இது. சினிமாத் துறையினர் புதிய படங்களில் முதலீடு செய்யலாம். லாபம் கிடைக்கும்.
அரசியல் துறையினர்: அரசியல் துறை பெரும்பாலும் சுக்கிரனின் ஆதிக்கத்தில்தான் உள்ளது. அந்தச் சுக்கிரன் உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிப்பதால், மக்களிடையே செல்வாக்கு உயரும். உயர்மட்டத் தலைவர்களின் ஆதரவு கிட்டும்.
மாணவ - மாணவியர்: கல்வித் துறையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள கிரகங்கள் ஓரளவு சாதகமாக வலம் வருவதால், பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும். நினைவாற்றல் அதிகரிக்கும், பலருக்கு நேர்முகத் தேர்வுகளில் வெற்றி கிட்டும். வௌிநாடுகளில் உயர் கல்வி பயில ஆர்வமிருப்பின், தற்போது முயற்சிக்கலாம். பொருள் உதவி கிடைப்பதற்கும், வாய்ப்புள்ளது.
விவசாயத் துறையினர்: விவசாயத் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள அனைத்து கிரகங்களும் சுபத்துவப் பாதைகளில் சஞ்சரிப்பதால், குறைவில்லாத தண்ணீர் வசதி கிட்டும். ஆடுகள், மாடுகள் அபிவிருத்தியடையும். நவீன விவசாய வசதிகள் கிட்டும்.
பெண்மணிகள்: பெண்மணிகளின் நலன்களுக்கு, அதிகாரம் படைத்த கிரகங்கள் அனுகூலமாக இருப்பதால், இக்காலகட்டத்தில் பல நன்மைகளை எதிர்பார்க்கலாம்.திருமணமாகியுள்ள பெண்மணிகளுக்கு, கருத்தரிக்கும் வாய்ப்பு உள்ளது. விவாக வயதிலுள்ள கன்னியருக்கு, நல்ல வரன் அமையும்.வேலைக்கு முயற்சித்துவரும் மகளிருக்கு, நல்ல நிறுவனத்தில், மனத்திற்கு நிறைவையளிக்கும் வேலை கிடைக்கும். கபணப் பற்றாக்குறையினால் குடும்பத்தில் ஏற்பட்டு வந்த பல பிரச்னைகள் நல்லபடி தீர ஆரம்பிக்கும்.ஒருசில பெண்மணிகளுக்கு, வெளிநாடு செல்லும் யோகமும் அமைந்துள்து.
அறிவுரை: பூர்வ புண்ணிய, புத்திர ஸ்தானமாகிய, கும்ப ராசியில் சனி - ராகு சேர்ந்திருப்பதால், குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். பரிகாரம் அவசியம். உலகில் ஜனித்த அத்துனை ஜீவ ராசிகளுக்கும் பிரத்யேகமான - தனித்துவமான குணாதீசயங்கள் உண்டு. மனிதப் பிறவியிலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்துவமான பிறவிக் குணம் - பலகீனங்கள் உண்டு என ஜோதிடக் கலை விவரித்துள்ளது. துலாம் ராசிக்காரர்களுக்கான பிரத்யேகமான குணமாகச் சொல்லப்படுவது யாதெனில், தங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்ள தவறிவிடுவார்கள் என்பதே அது! இக்குணமானது அவர்களின் பிறவியிலேயே ஏற்பட்டுள்ள சுபாவம் எனக் கொள்ளப்படுகிறது.
பரிகாரம்: சனிக்கிழமை தோறும், அருகிலுள்ள ஆலயம் ஒன்றில், தீபத்தில் எள் எண்ணெய் சேர்த்து வருவது, சனி மற்றும் ராகுவினால் ஏற்படும் தோஷத்தை நீக்கிவிடும். 24 சனிக்கிழமைகள் இப்பரிகாரத்தைச் செய்து வந்தால், தோஷம் அடியோடு நீங்கிவிடும்.2. திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு தரிசனமும் இத்தோஷத்தைப் போக்கிவிடும்.


