(01.01.2026 முதல் 31.12.2026 வரை )
(பூரட்டாதி 4ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி வரை)
குடும்பம்: ஏழரைச் சனியின் ஆரம்பப் பகுதியில் உள்ள உங்களுக்கு, ராசிநாதனாகிய குரு பகவானும், வக்கிர கதியில், மிதுன ராசியில் சஞ்சரிப்பது, நன்மை தராது!வரவை விட, செலவுகளே அதிகமாக இருக்கும். உடல் நலனிலும் கவனமாக இருத்தல் வேண்டும். வெளியூர்ப் பயணங்களின்போது, பணம், ெபாருட்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்தல் வேண்டும்.
உத்தியோகம்: அன்றாடப் பணிகளிலும், பொறுப்புகளிலும் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். சக-ஊழியர்களிடம் நெருங்கிப் பழகாமலிருப்பது நன்மை செய்யும். மேலதிகாரிகளுடன் சற்று அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. பொறாமையினால், சக-ஊழியர்கள் உங்கள் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கக்கூடும். இத்தகைய கிரக நிலைகள் அமையும்போது, அன்றாடப் பணிகளில் எச்சரிக்கையாக செயல்படுவது அவசியம் என புராதன ஜோதிட நூல்கள் வற்புறுத்துகின்றன.
தொழில், வியாபாரம்: முன்பணமில்லாமல், சரக்குகளை அனுப்புவதைக் கண்டிப்பாக தவிர்த்தல் வேண்டும். சந்தை நிலவரம் அடிக்கடி மாறிக்கொண்டேயிருக்கக்கூடும் என கிரக நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன. ஆதலால், முன்கூட்டியே விலையை நிர்ணயிப்பது கூடாது. நிதிநிறுவனங்களின் ஆதரவும் குறையக்கூடும். பண விஷயங்களில் கண்டிப்பாக இருத்தல் மிகவும் அவசியம்.
கலைத் துறையினர்: நிச்சயமாக நமக்குக் கிடைக்கும் என்று எண்ணி எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள், கடைசி நேரத்தில் கைநழுவிப் போகும். கைப் பணமும், வீண் செலவுகளில் கரைந்துவிடும். அதிஜாக்கிரதையாக இருக்க வேண்டிய தருணமிது என்பதை கிரக நிலைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன.கலந்துகொண்ட பல நிகழ்ச்சிகளிலும்கூட, எதிர்பார்த்திருந்த வருமானம் கிடைக்காது. ஏமாற்றமே மிஞ்சும். கைப் பணத்தைக் காப்பாற்றி வைத்துக் கொள்ள வேண்டிய தருணம் இது.
அரசியல் துறையினர்: அரசியல் துறையுடன் தொடர்புள்ள கிரக நிலைகள் அனுகூலமாக சஞ்சரிக்கவில்லை! பேச்சில் கவனம்தேவை , மேல்மட்டத் தலைவர்கள், உங்களைப் புறக்கணித்துவிடுவார்கள். காரணம், உங்்கள் மீது நம்பிக்கையின்மையே!உங்கள் திறமையிலும், கட்சி மீதுள்ள விசுவாசத்திலும், அவர்களுக்கு நம்பிக்கை குறைந்துள்ளது. மேலும், பிற அரசியல் கட்சிகளுடன் நீங்கள் நெருக்கமாக பழகுவதும் மேல்மட்டத் தலைவர்களுக்குப் பிடிக்கவில்லை. உங்களை, அவர்கள் சந்தேகிக்கின்றார்கள். நீங்கள் “ஓர் மதில் மேல் பூனை....!” போன்றவர் என அவர்கள் கருதுகிறார்கள்.இதற்கு, நீங்களும் காரணமாகின்றீர்கள் என்பதே மறுக்க முடியாத உண்மை!!
மாணவ - மாணவியர்: வித்யா காரகரான புதன், சாதகமாக சஞ்சரிக்கவில்லை! நினைவாற்றலும், பாடங்களில் ஆர்வமும் குறையும். கல்லூரிக்குச் செல்வது என்றாலே, கசக்கும்! இன்றைய கல்வியே நாளைய எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகிறது என்பதை மறந்துவிடாதீர்கள். நேரத்திற்கு உண்டு, உறங்கச் செல்வதை பழக்கத்தில் கொண்டுவாருங்கள். தினமும் காலை - மாலை இரு வேளைகளிலும் சுமார் 30 நிமிடங்களாவது, இறைத் தியானம் செய்வது நல்ல பலனை அளிக்கும் என்பதை திருச்சி - திருப்பராய்த்துரை ராமகிருஷ்ண தபோ வனம் தலைவராக இருந்த ஸ்வாமிஜி சித் பவானந்த மகராஜ் அடிக்கடி உபதேசிப்பது உண்டு. இதையே இப்போது மீன ராசியினர் கடைப்பிடித்து வருவது நல்லது!
விவசாயத் துறையினர்: விவசாயத் துறையுடன் நேரடி தொடர்பு கொண்டுள்ள செவ்வாயும், மற்ற கிரகங்களும் அனுகூல நிலைகளில் சஞ்சரிக்கவில்ைல!விளைச்சல் எதிர்பார்த்திருந்த அளவிற்கு இராது!! இதற்கு பல காரணங்கள் இருப்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. உங்கள் அலட்சிய மனப்பான்மையும், குறைந்த விளைச்சலுக்கு ஓர் காரணமாகும். மேலும், வயல் பணிகளில் உங்கள் நேரடியான உழைப்பும், கண்காணிப்பும், மேற்பார்வையும் குறைந்துள்ளன.நல்ல விளை நிலத்தை விவசாயிகளிடம் ஒப்படைத்துவிட்டு, சென்ற ஒருவருடக் காலமாக, சற்று அலட்சியமாக இருந்து வருவதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. இனியாவது, விழித்துக் கொள்ளுங்கள். உங்கள் நேரடியான மேற்பார்வையில் இருந்தால் மட்டுமேதான் வயல் பணிகள் பலனளிக்கும்.உங்கள் கவனம் சிறிதளவு குறைந்தாலும், விவசாயம் படுத்துவிடும் என்பதை உணர்ந்து கொண்டால், உங்கள் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும்.
பெண்மணிகள்: உங்கள் ராசிநாதனாகிய குரு பகவான், தொடர்ந்து அனுகூலமாகவே சஞ்சரிக்கி்றார். இருப்பினும், ஏழரைச் சனியின் ஆரம்பப் பிடியில், சிக்கிக் கொண்டிருக்கின்றீர்கள்! ராகுவினாலும், நன்மை ஏற்படாது. வீண் அலைச்சலும், சருமம் சம்பந்தமான உபாதைகளினாலும், மருத்துவச் செலவுகளினாலும், துன்பப் படுவீர்கள் என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். குறிப்பாக, இரவு நேரங்களில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். விரய ஸ்தானத்தில் சனி - ராகு கூட்டுச் சேர்க்கையினால், பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் களவு போக சாத்தியக்கூறு உள்ளது. எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியம் என கிரக நிலைகள் உணர்த்துகின்றன.
அறிவுரை: உடல் ஆரோக்கியத்தில், கவனமாக இருத்தல் அவசியம். சிறு உபாதை என்றாலும், மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. கூடியவரையில், இரவு நேரங்களில் தனியே செல்வதைத் தவிர்த்தல் வேண்டும். நண்பர்கள் - உறவினர்களுக்கு பண உதவி செய்வதையும் தவிர்த்தல் வேண்டும்.
பரிகாரம்: தினமும் காலை - மாலை இருவேளைகளிலும், ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம், மற்றும் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி வருவது கைமேல் பலனளிக்கும். பசுவிற்கு உணவளிப்பதும் உங்களைப் பாதுகாக்கும்.


