search-icon-img
featured-img

கன்னி

Published :

(01.01.2026 முதல் 31.12.2026 வரை )

(உத்திரம் 2ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2ம் பாதம் வரை)

குடும்பம்: சனி மற்றும் ராகு அனுகூலமாக சஞ்சரிக்கின்றனர்! குரு பகவானால், எவ்வித அனுகூலமும்கிடைக்காது. வருமானம் திருப்திகரமாகவே இருக்கும். வருமானத்திற்கேற்ற செலவுகளும் ஏற்படுவதால், சேமிப்பிற்கு சாத்தியக்கூறு கிடையாது.குடும்பத்தில், நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம் - வளைகாப்பு, குழந்தைப் பேறு போன்ற நிகழ்ச்சிகளினால் குடும்பத்தில் குதுகலம் உண்டாகும்.நெருங்கிய உறவினர்களிடையே, ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் ஒருவர், உத்தியோகம் காரணமாகவோ, அல்லது வேறு காரணங்களுக்காகவோ, வெளிநாடு சென்று - வரும் வாய்ப்பும் உருவாகும்.சிலருக்கு, சொந்த வீடு அமையும் யோகமும் உள்ளது.

உத்தியோகம்: சனி - ராகு கூட்டுச் சேர்க்கை, கும்ப ராசியில் ஏற்பட்டுள்ளது. இந்தக் கிரகச் சேர்க்கை, உத்தியோகத் துறையினருக்கு, நன்மை செய்யும்.உத்தியோகத் துறை சனி பகவானின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது! கும்பம், சனி பகவானின் ஆட்சி வீடாகும்!!ராகுவின் சேர்க்கையினால், பணிச் சுமையும், பொறுப்புகளும், உழைப்பும் கடினமாக இருக்கும். ஆயினும், அதற்கான அங்கீகாரம் கிடைக்கும்! ஊதியம் உயரும். சிலருக்கு பதவியுயர்வு கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளது.புதிதாக வேலைக்கு முயற்சித்துவரும் கன்னி ராசி அன்பர்களுக்கு, மனத்திற்கு உகந்த, நல்ல நிறுவனத்தில் பணி கிடைக்கும்.

தொழில், வியாபாரம்: உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஏற்ற மாதம் இது! உற்பத்திக்கு அவசியமான, மூலப் பொருட்கள் சகாய விலையில் கிடைக்கும். தொழிற்சாலையை விருத்தி செய்து கொள்ள, கிரக நிலைகள் அனுகூலமாக உள்ளன.வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் ஆதரவு எளிதில் கிட்டும். சகக் கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள்.ஏற்றுமதித் துறையினருக்கு, பிரபல வெளிநாட்டு நிறுவனங்களுடன், புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சிலருக்கு, வியாபாரம் சம்பந்தமாக வெளிநாடு சென்று வரும் சாத்தியக்கூறும் உருவாகும்.

கலைத் துறையினர்: சுக்கிரன், உங்களுக்கு ஆதரவாக, சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், புதிய வாய்ப்புகள் வருமானத்தை உயர்த்தும்.பிரபல சபாக்களில், உங்கள் நிகழ்ச்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். மக்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், வெளிநாடு சென்று, கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும்.உங்கள் பொருளாதார நிலையை சரி செய்துகொள்ள ஏற்ற வருடம் இது. கிடைக்கும்போது, சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். சாதாரண எறும்புகள்கூட, நமக்கு அரியதொரு வழிகாட்டுகின்றன. கிடைக்கும்போது சேமித்து வைப்பவர்கள்தான், பிற்காலத்தில் அவதியுறாமல் இருப்பார்கள்.

அரசியல் துறையினர்: அரசியல் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள சுக்கிரன், உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிப்பதால், கட்சியில் செல்வாக்கும், ஆதரவும் பெருகும்.செல்வாக்கு மிகுந்த அரசியல் பிரமுகர் ஒருவரின் நட்பு, உங்களுக்கு பல நன்மைகளை அளிக்கவுள்ளது.தசா, புக்திகள் சாதகமாக இருப்பின், அரசு பதவி ஒன்று கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. சிலருக்கு, கட்சி சார்பாக வெளிநாடு சென்று - வரும் சாத்தியக்கூறும் உள்ளது.

மாணவ - மாணவியர்: கல்வித் துறையைத் தனது பிடியில் கொண்டுள்ள புதன், சுப பலம் பெற்று வலம் வருவதால், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நினைவாற்றல் அதிகரிக்கும்.நற்குணங்கள் அமைந்த சக மாணவர்களின் நட்பு கிடைக்கும். ஆசிரியர்களின் ஆதரவும் கைகொடுக்கும்.உயர் கல்விக்கு உதவிகள் தேடிவரும். வெளிநாடு சென்று பிரத்யேகக் கல்வி பயில வேண்டுமென்ற ஆர்வமிருப்பின், இப்போது முயற்சிக்கலாம்.

விவசாயத் துறையினர்: விவசாயத்திற்கு அவசியமான, தண்ணீர் வசதி, ஓரளவிற்கே கிடைக்கும். கால்நடைகளின் ஆரோக்கியமும் பாதிக்கப்படக்கூடும் என கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன.ஆதலால், எதிர்பார்க்கும் அளவிற்கு சற்று குறைவாகவேதான் விளைபொருட்கள் கிடைக்கும். சந்தையில், அதிக விலைக்கு விற்க முடியும். ஆதலால்தான், நஷ்டத்தை ஓரளவு ஈடுகட்ட முடியும்.ஆடுகள், மாடுகள் ஆகியவற்றின் பராமரிப்பில் வைத்தியச் செலவுகள் அதிகமாக இருக்கும். பழைய கடன்கள் நீடிப்பதால், வட்டிகளில் பணம் விரயமாகும்.

பெண்மணிகள்: வேலைக்குச் சென்று வரும் பெண்மணிகளுக்கு, குரு பகவான் அனுகூலமாக இல்லை! “பத்தில் குரு,பதவியைக் கெடுப்பார்....!” என்றொரு முதுமொழியும் உண்டு. மேலதிகாரிகள் உங்கள் வேலையில் ஏதாவது ஒரு குற்றங்குறை கூறிக்கொண்டேயிருப்பார். ஆதலால், எதிர்காலத்தைப் பற்றிய அச்சம், மன நிம்மதியைப் பாதித்துக் கொண்டேயிருக்கும்.புதிதாக வேலைக்கு முயற்சித்துவரும் கன்னியருக்கு, மனத்திற்குப் பிடித்த வேலை கிடைப்பது சற்று கடினமே! தாற்காலிகப் பணிகளில் உள்ள பெண்மணிகளுக்கு, வேலை நிரந்தரமாவது, தாமதப்படும்.

அறிவுரை: அன்றாட அலுவலகப் பணிகளில் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். அடிக்கடி விடுப்பில் செல்வதையும், தவிர்த்தல் வேண்டும். இல்லாவிடில், பிரச்னைகளில் சிக்கிக் கொள்ள நேரிடும்.

பரிகாரம்: வியாழக் கிழமைகளில், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் மாலையில் மூன்று தீபங்கள் ஏற்றிவந்தால் போதும். அல்லது, வியாழக்கிழமைகள் தோறும், காலையில் சிறிது நெய், எள் எண்ணெய் சேர்த்த மூன்று சாத உருண்டைகள் காகத்திற்கு வைத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.