search-icon-img
featured-img

கும்பம்

Published :

(அவிட்டம் 3ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3ம் பாதம் வரை)

குடும்பம்: ஆறாம் இடத்திற்கு குரு வருகிறார். தன ஸ்தானத்தில் சனி உள்ளார். ஜென்ம ராசியில் ராகு! வருமானத்தைவிட, செலவுகளே அதிகமாக இருக்கும். கணவன்-மனைவியிடையே பரஸ்பர அன்பும், ஒற்றுமையும் பாதிக்கப்படும். குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்தில் கவலை ஏற்படும்.திருமண முயற்சிகளில் தடங்கல்களும், தாமதமும் கவலையளிக்கும். ஒருசிலருக்கு, சொந்த வீட்ைட விற்க வேண்டிய அவசியமும் உருவாகும். சுபச் செலவுகளில் பணம் செலவழியும்.ஒருசிலர், வெளிநாடு சென்று வரும் அவசியமும் உருவாகும். புதிய வேலைக்கு முயற்சித்துவரும் பெண் அல்லது பிள்ளைகளுக்கு, புதிய பிரச்னைகள் உருவாகும். வைத்தியச் செலவும், தவிர்க்க இயலாதது.

உத்தியோகம்: ஜீவன ஸ்தானத்திற்கு சிறிது தோஷம் ஏற்பட்டுள்ளதால், மேலதிகாரிகளுடன் கருத்து வேற்றுமை உண்டாகும். எவ்வளவுதான் பாடுபட்டு வேலை செய்தாலும், குற்றங்குறைகளைக் கூறிக் கொண்டேயிருப்பார்கள்.

தற்காலிகப் பணியிலுள்ளவர்களுக்கு, வேலை நிரந்தரமாவதில், தடங்கல்களும், பிரச்னைகளும் ஏற்படும். வேலை பார்க்கும் இடத்தில் அனைவரிடமும், சற்று அனுசரித்தும், வளைந்து கொடுத்தும் நடந்து கொள்வது நல்லது என கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன.

தொழில், வியாபாரம்: சந்தையில், கடுமையான போட்டியை நீங்கள் சந்திக்க நேரிடும். நியாயமற்ற போட்டிகளைச் சமாளிக்க வேண்டி வரும்.நிதி நிறுவனங்களின் சலுகைகளும், குறையக்கூடும். அடிக்கடி, நிதிப் பற்றாக் குறையைச் சமாளிக்க வேண்டிவரும். சகக் கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் குறையக்கூடும்.அரசியல் சூழ்நிலையும், உங்கள் வியாபாரத்தை மறைமுகமாக பாதிக்கக்கூடும். அடிக்கடி பணப் பிரச்னை ஏற்பட்டு, கவலையளிக்கும்.

கலைத் துறையினர்: "நிச்சயமாகக் கிட்டும் ..!" என உறுதியாக எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் கைநழுவிப் போகும்.உங்கள் லாபத்தை இது கடுமையாகப் பாதிக்கும். பல தருணங்களில், பணப் பிரச்னை தலைதூக்கும். வெளிநாடு ஒன்றிற்குச் சென்று, அங்கு நிகழவிருக்கும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் ஏமாற்றத்தைத் தரும்.சினிமாத் தயாரிப்பாளர்களுக்்கு, படங்கள் பாதியில் நின்றுபோகும். கடினமான நிதிப் பற்றாக்குறையை நீங்கள் சமாளிக்க வேண்டிவரும். பழைய பாக்கிகள் வசூலாவதில் ஏமாற்றமே மிஞ்சும். கடும் பணப் பிரச்னைகளை நீங்கள் சமாளிக்க வேண்டிவரும்.

அரசியல் துறையினர்: அரசியல் துறை, எவ்வளவு ஆபத்தானது என்பதை இப்போது நீங்கள் உணர்ந்து கொண்டிருப்பீர்கள். இனியாவது, விவேகத்துடன் விலகியிருங்கள். அதுவே உங்கள் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும். மேல்மட்டத் தலைவர்கள் மற்றும் உங்கள் மீது கடுமையான அதிருப்தியில் உள்ளார்கள். இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

மாணவ - மாணவியர்: வித்யாகாரகரான புதன், சுப பலம் பெற்று உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிப்பதால், பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும். நினைவாற்றல் அதிகரிக்கும். கிரகிப்புத் திறனும் உயரும். வெளிநாடு சென்று, விசேஷ உயர் கல்வி பயில விருப்பமுள்ளவர்கள், முயற்சிக்கலாம். வெற்றி கிட்டும். பலருக்கு, உயர்கல்வி பயில பண உதவி (ஸ்காலர் ஷிப்) கிட்டும்.

விவசாயத் துறையினர்: சூரியனும், செவ்வாயும் சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், நல்ல விளைச்சலும், வருமானமும் கிடைக்கும். கால்நடைகள் அபிவிருத்தியடையும்.திட்டமிட்டு செலவு செய்தால், உங்கள் பழைய கடன்களை அடைத்து, பொருளாதார நிலையை சீர்செய்து கொள்ளலாம். முயற்சித்தால், சிறு அளவில், புதிய விளைநிலம் வாங்குவதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை செவ்வாயின் சஞ்சார நிலை எடுத்துக் காட்டுகிறது.தசா, புக்திகள் உதவிகரமாக இருப்பின், சிறு வீடு வாங்குவதற்கும் யோகம் உள்ளதை கிரக நிலைகள் உறுதி செய்கின்றன.

பெண்மணிகள்: படித்து முடித்து, வேலைக்கு முயற்சித்துவரும் பெண்மணிகளுக்கு, நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும் என கிரக நிலைகள் உறுதி செய்கின்றன.பல பெண்மணிகளுக்கு, விவாக யோகமும் அமைந்துள்ளது. விவாகமான பெண்மணிகள், கருத்தரிப்பதற்கு யோகமும் உள்ளது.சில பெண்மணிகள் வெளிநாடுகளில் வேலைக்குச் சேரும் வாய்ப்பும் உள்ளதை கிரக சஞ்சார நிலைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன.

அறிவுரை: எப்போதெல்லாம்,யோக பலன்கள் காத்துள்ளன என்பதை கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன. அவற்றை முன்கூட்டியே தெரிந்து கொண்டு, முயற்சி செய்யின், வெற்றி உங்களைத் தேடி வரும் என்பதை ஜோதிடம் என்னும் அரிய வானியல் நுண்கலை விவரித்துள்ளது. காரிருளில் வழிகாட்டும், கலங்கரை விளக்காகத் திகழ்கிறது, ஜோதிடம் எனும் அரிய கலை!

பரிகாரம்: குரு, சனி மற்றும் ராகுவிற்கு பரிகாரம் செய்வது, கும்ப ராசியினருக்கு அளவற்ற நன்மைகளைச் செய்யவல்லது.

1.சனிக்கிழமைகளில், காலையில், சிறிது நெய், பருப்பு, எள் சேர்த்த ஐந்து சாத உருண்டைகள் காகத்திற்கு வைப்பது மிகச் சிறந்த பரிகாரபலனைத் தரும்.

2.தினந்தோறும் ஒரு அத்தியாயம் என்றழைக்கப்படும் ஒரு சர்க்கம், சுந்தரகாண்டம் பாராயணம் செய்துவதும் மகத்தான நற்பலனைப் பெற்றுத் தரும்.