search-icon-img
featured-img

கடகம்

Published :

(புனர்பூசம் 4ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் வரை)

குடும்பம்: உங்களின் ஜென்ம ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கும் நிலையில், அஷ்டம ஸ்தானத்தில் ராகுவும், பாக்கிய ஸ்தானத்தில் சனி பகவானும் அமர்ந்திருப்பது, மருத்துவச் செலவுகளைக் குறிக்கிறது!மற்ற குடும்பச் செலவுகளும்கூட, சற்று அதிகமாகவேதான் இருக்கக்கூடும். சிறு விஷயங்களுக்கும்கூட அதிக அலைச்சலும், முயற்சியும் தேவைப்படும். திருமண முயற்சிகளில், வரன் அமைவது சற்று கடினமே!கணவன் - மனைவியிடையே தேவையில்லாத வாக்குவாதமும், மனக் கசப்பும், கருத்து வேற்றுமையும் ஏற்படக்கூடும். வருமானத்தைவிட, செலவுகளே அதிகளவில் இருக்கும். இருப்பினும், கடன்வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகாது.

உத்தியோகம்: அஷ்டம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால், வேலை பார்க்கும் இடத்தில், பணிச் சுமையும், பொறுப்புகளும் சக்திக்கு மீறியதாகவே இருக்கும். மேலதிகாரிகளின் அளவிற்கு மீறிய கண்டிப்பு, பணிகளில் வெறுப்பை ஏற்படுத்தும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதும் சற்று கடினமே!தற்காலிகப் பணியாளர்களுக்கு, ேவலை நிரந்தரமாவதில் பிரச்னைகள் ஏற்படக்கூடும். புதிய வேலைக்கு முயற்சித்து வரும் கடக ராசி அன்பர்களுக்கு, வேலை கிடைக்கும். ஆயினும், அதில் பரிபூரண திருப்தியிராது என கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன.

தொழில், வியாபாரம்: எவ்வளவுதான் பாடுபட்டாலும், லாபம் மட்டும், அளவோடுதான் இருக்கும் என கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன. சந்தையில், உங்கள் பொருட்களுக்குக் கடும்போட்டி நிலவும். வங்கி மற்றும் இதர நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு குறையும். சகக் கூட்டாளிகளிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு, கவலையை அளிக்கும். ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாடுகளிலிருந்து வரவேண்டிய பாக்கிகள் மேலும் தாமதமாகும். அதன் காரணமாக, நிதிப் பற்றாக்குறையை நீங்கள் சந்திக்க நேரிடும். விற்பனை விஸ்தரிப்புத் திட்டங்களை ஒத்திப் போடுதல், உங்கள் எதிர்கால நன்மைக்கு உகந்ததாகும். புதிய முதலீடுகளையும், தற்போதைக்குத் தவிர்த்தல் நலம் பயக்கும்.

கலைத் துறையினர்: "நிச்சயமாகக் கிடைக்கும்....!" என எதிர்பார்த்திருந்த வெளிநாட்டு வாய்ப்புகள் ஏமாற்றத்தைத் தரும். கிடைக்கும் வாய்ப்புகளிலும், வருமானம் மட்டும் எதிர்பார்க்கும் அளவிற்கு இராது. ஆதலால், கைப் பணத்தை எண்ணி, எண்ணிச் செலவழிக்க வேண்டும். இல்லாவிடில், நிதிப் பற்றாக்குறையைச் சந்திக்க நேரிடும். சினிமாத் துறையினருக்கு, மேலும் சிறிது காலத்திற்கு புதிய முயற்சிகளில் ஈடுபடாமலிருப்பது எதிர்காலத்திற்கு நன்மை செய்யும். திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு இது முற்றிலுமாகப் பொருந்தும். தற்போதுள்ள கிரக நிலைகளின்படி புதிய முயற்சிகளில் நஷ்டமே ஏற்படக்கூடும் எனத் தெரிகிறது. ஆதலால், தவிர்த்தல் நல்லது.

அரசியல் துறையினர்: மேல்மட்டத் தலைவர்களுடன், அளவிற்கு மீறி பழக வேண்டாம் என கிரக நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன. கட்சியினருடன், உயர்மட்டத் தலைவர்களைப்பற்றி, உங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டாம். கட்சியில், உங்களுக்கு மறைமுக எதிர்ப்பு உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்! சாதுர்யமாக நடந்து கொள்ளுங்கள்.

மாணவ - மாணவியர்: "வித்யாகாரகரான" புதன் அனுகூலமாக இல்லை! ஆதலால், படிப்பில் மனத்தைச் ெசலுத்துவது சற்று சிரமமாகவே இருக்கும். புத்தகத்தைக் கையிலெடுத்தாலே உறக்கம் மேலிடும். தினமும் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிற்குச் சென்று, தரிசித்து வருவது தோஷத்தைப் போக்கிவிடும். வெளிநாடு சென்று, விசேஷ உயர் கல்வி பயில ஆர்வமிருப்பின், தற்போதைக்கு முயற்சிகளை ஒத்திப் போடுவது நல்லது.

விவசாயத் துறையினர்: விவசாயத் துறைக்கு ஆதிக்கத்தில் கொண்டுள்ள சூரியன், செவ்வாய் ஆகிய இருவரும், அனுகூலமாக இருப்பதால், பாடுபடும் அளவிற்கு விளைச்சல் கிடைக்கும். தண்ணீர்ப் பற்றாக்குறை இருப்பதற்கு வாய்ப்பில்லை! கால்நடைகளும், அபிவிருத்தியடையும். வயலைப் பார்த்தாலே உள்ளம் குளிரும். சற்று சிக்கனமாக இருப்பின், பழைய கடன்களை அடைத்து, உங்கள் பொருளாதார நிலையை சீர்செய்துகொள்ள ஏற்ற தருணம் இதுவே என்பதை கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன. சிக்ககனமாக இருந்து, சற்று பாடுபட்டால், புதிய விளை நிலம் வாங்கும் யோகமும் அமையப் பெற்றுள்ளது.

பெண்மணிகள்: பெண்மணிகளின் நலன்களைப் பாதுகாப்பதில், சுக்கிரனுக்கும், செவ்வாய்க்கும், புதனுக்கும் பெரும் பங்குண்டு! இம்மூவரும் உங்களுக்கு அனுகூலமாக இந்தக் காலகட்டம் முழுவதும் சஞ்சரிப்பதால், பல நன்மைகள் உங்களுக்காகக் காத்துள்ளன. பயன்படுத்திக் கொள்வது உங்கள் திறமையிலும், புத்தி சாதுர்யத்திலும்தான் உள்ளது. புதிய வேலைக்கு முயற்சிக்கும் வனிதையருக்கு, வெற்றி காத்துள்ளது. திருமணத்திற்குக் காத்துள்ள கன்னியருக்கு, நல்ல வரன் அமையப் பெறுவர்.

அறிவுரை: சிக்கனமாக இருந்து, பணத்தைச் சேமித்துக் கொள்வதற்கும், உங்கள் பொருளாதார நிலையை சீர்செய்து கொள்வதற்கும், கிரக நிலைகள் அனுகூலமாக உள்ளன. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறும், ஏழைப் பெண்மணி ஒருவருக்கு, வஸ்திரமும், உணவும் கொடுத்தால் போதும்.