search-icon-img
featured-img

மகரம்

Published :

(உத்திராடம் 2ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் வரை)

குடும்பம்: ஏழாம் இடத்திற்கு குரு வருகிறார். வருமானம் திருப்திகரமாக இருந்தும், செலவுகள் கட்டுக்கடங்காமல் இருப்பதால், மாதக் கடைசியில் பிறர் உதவியை நாட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகக்கூடும்.இதுவரை ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் குரு பகவான் நிலை கொண்டிருந்ததால், புதிய கடன்களை ஏற்க வேண்டிய அவசியமும் உருவாகும். கூடிய வரையில், தவிர்ப்பது விவேகமான செயலாகும். ஆனாலும் ஏழாம் இட குரு இந்த ஒரு வருடத்திற்குள் செல்வ வளத்தை தந்து விட்டே செல்்வார்.வெளியூர்ப் பயணங்களில், பணம் விரயமாகும். திருமண முயற்சிகளில், வரன் அமைவதும் தாமதப்படும், ஆனால், அமைந்து விடும். உடல் ஆரோக்கியத்திலும் கவனமாக இருத்தல் நல்லது.

தன ஸ்தானத்தில், ராகு சஞ்சரிப்பதால், பணம், பொருட்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுதல் அவசியம். ஏனெனில், இவை களவு போவதற்கு சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன, ஆகவேதான் இந்த எச்சரிக்கை!

உத்தியோகம்: மகரம், சனி பகவானின் ஆட்சிவீடாகும். அந்தச் சனி பகவான், செவ்வாயுடன் சேர்ந்து, மீன ராசியில் ஆதரவாக சஞ்சரிப்பதால், மேலதிகாரிகளின் ஆதரவும், உதவியும் பணிகளில் உற்சாகத்தை அதிகரிக்கும். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், ஊதிய உயர்விற்கும் சாத்தியக்கூறு உள்ளது. தற்காலிகப் பணியாளர்கள், தங்கள் பணிகளில் நிரந்தரம் செய்யப்படுவார்கள். வெளிநாடுகளில் பணியாற்ற ஆர்வமிருப்பின், முயற்சிக்கலாம். வெற்றியடைய சாத்தியக்கூறு உள்ளது.

தொழில், வியாபாரம்: சனி மற்றும் செவ்வாய் ஆகிய இரு வீரியம் நிறைந்த கிரகங்களும், உங்களுக்குச் சாதகமாக சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், சந்தையில் விற்பனையை அதிகரிக்கும். நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் சரக்குகளுக்கு நல்ல வரவேற்பு காத்துள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. நிதி நிறுவனங்களின் சலுகைகளும், ஆதரவும் கை கொடுக்கும். குறிப்பாக, ஏற்றுமதி, இறக்குமதித் துறையினருக்கு லாபகரமான காலகட்டம் இதுவே. தசா, புக்திகள் சாதகமாக இருப்பின், வெளிநாடு சென்று வரும் வாய்ப்பும் உருவாகும். சகக் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு, கிடைக்கும். கிளை விற்பனை நிலையங்்கள் திறப்பதற்கும் ஏற்ற தருணம் இது.

கலைத் துறையினர்: கலைத் துறையின் பெரும் பகுதியை, தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது, சுக்கிரனாகும். அவர், பூரண சக்தியுடன் சஞ்சரிப்பதால், கலைத் துறை அன்பர்களுக்கு, அனுகூலமான காலகட்டமிது. புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வருமானம் உயரும். இடையில் ஏற்பட்ட தடங்கல்கள், அடியோடு விலகும்.உங்கள் நிதி நிலைமையை சரி செய்து கொள்ள ஏற்ற கால கட்டமிதுவேயாகும்.

அரசியல் துறையினர்: அரசியல் துறையை, தனது கட்டுப்பாட்டில் கொண்டு்ள்ளது, சுக்கிரனாவார். அந்தச் சுக்கிரன், இம்மாதம் முழுவதும் சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், அரசியல் துறையினருக்கு, அதிர்ஷ்டம் தேடிவரும், இம்மாதத்தில்!தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், பதவி ஒன்று கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. முயற்சிகள் அனைத்தும் பலன் பெறும்.உயர்மட்டத் தலைவர்களுக்கு, உங்கள் மீது பூரண நம்பிக்கை உள்ளதை கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன. இதுவே உங்களது பலமாகும்.

மாணவ - மாணவியர்: கல்விக்கு அதிபதியான, புதன் சுபபலம் பெற்று சஞ்சரிப்பதால், அனைத்து மாணவ - மாணவியருக்கும் கல்வியில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும் இந்தக் குருப் பெயர்ச்சிக் காலத்தில்!வெளிநாடு சென்று, உயர் கல்வி பயில சலுகைகளும், வங்கிகள் உதவியும் எளிதில் கிட்டும். பலருக்கு, வெளிநாட்டிலுள்ள பல்கலைக் கழகங்களில் உயர் கல்விக்கான இடங்கள் கிடைக்கும். கிரக நிலைகளின்படி, இது ஓர் அரிய சந்தர்ப்பம். பயன்படுத்திக் கொள்வது, உங்கள் திறமையிலேயே உள்ளது.

விவசாயத் துறையினர்: விளைச்சலும், வருமானமும் எதிர்பார்ப்பதை விட, சற்று அதிகமாகவே இருக்கும் என்பதை கிரக நிலைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன.விவசாயத்திற்கு அத்தியாவசியமான, உரம், விதை, நாற்றுகள், தண்ணீர் வசதி ஆகியவை குறைவின்றிக் கிடைக்கும் எனக் கிரக நிலைகள் உறுதியளிக்கின்றன.பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து நிம்மதி பெற தக்க தருணமிது. புதிய விளை நிலங்கள் அல்லது ஆடு - மாடுகள் சேர்க்கைக்கும் வாய்ப்பு கிட்டும்.

பெண்மணிகள்: பெண்மணிகளின் நலன்களுக்கு, அதிகாரம் கொண்டுள்ள கிரகங்கள் அனுகூலமாக சஞ்சரிப்பதால், பல நன்மைகள் உங்களுக்குக் காத்துள்ளன.உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். விவசாயப் பணிகளில் உள்ள பெண்மணிகளுக்கு, நல்ல விளைச்சலும், வருமானமும் கிட்டும். உத்தியோகத்திற்குச் சென்றுவரும் வனிதையருக்கு, பணி நிரந்தரமாகும். புதிய வேலைக்கு முயற்சித்துவரும், மகளிருக்கு, வெற்றி கிட்டும்.

அறிவுரை: திட்டமிட்டு செலவு செய்யுங்கள். உங்கள் பொருளாதார நிலையை சரி செய்து கொள்ள அரிய சந்தர்ப்பம் இது.

பரிகாரம்: தினமும் பசுவிற்கு உணவளித்து வாருங்கள். கைமேல் பலன் கிட்டும்.