(மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை)
குடும்பம்: குரு 12ம் இடத்திற்கு வருகிறார். ஜன்ம ராசியில் கேதுவும், அஷ்டம ராசியில் சனி பகவானும் சஞ்சரிக்கும் நிலையில், இந்த குரு பெயர்ச்சி அமையப் பெறுகிறது!"எங்கே போயிற்று கைப் பணமெல்லாம்..?!" என்று நீங்களே வியக்கும்் வண்ணம் கைப் பணம் கரைந்தோடும்!! எந்தச் செலவையும் உங்களால் தவிர்க்க இயலாது. இருப்பினும், ஓரளவு திட்டமிட்டு செலவு செய்தால், புதிய கடன்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். சில குடும்பங்களில், ஓர் உறவினர் உத்தியோகம் சம்பந்தமாக, வெளிநாடு செல்ல நேரிடும். அஷ்டம ஸ்தானமாகிய மீன ராசியில், சனி பகவானும், மேஷத்தில் செவ்வாயும் சஞ்சரிப்பதால், உஷ்ண சம்பந்தமான உடல் கோளாறுகள் வருத்தக்கூடும். சரும உபாதைகள் ஏற்பட்டு, எளிய சிகிச்சையினால் குணம் கிட்டும். சிறு விஷயங்களுக்குக்கூட, அதிகமாக பாடுபடவேண்டியிருக்கும். திருமண முயற்சிகளில் வரன் அமைவது கடினம். கருவுற்றுள்ள பெண்மணிகளுக்கு, சுகப் பிரசவம் கிட்டும். ஒருசிலருக்கு, வீடுமாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன.
உத்தியோகம்: ஜீவனகாரகரான சனி பகவான், அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், உத்தியோகஸ்தர்கள் அன்றாடப் பணிகளில் கவனமாக இருத்தல் நல்லது. பணிச்சுமை சக்திக்கு மீறியதாக இருக்கும். மேலதிகாரிகளின் கண்டிப்பு, கவலையை அளிக்கும். சக-ஊழியர்களின் ஒத்துழைப்பும் குறையக் கூடும். புதிய வேலைக்கு முயற்சித்துவரும் சிம்ம ராசியினருக்கு, கிடைக்கும் வேலையிலும், நிறுவனத்திலும் மன நிறைவு இராது.
தொழில், வியாபாரம்: நியாயமற்ற போட்டிகள் அதிகரிக்கும். அதனால், விற்பனையும், லாபமும் பாதிக்கப்படும். வெளிமாநிலப் பயணங்களில், எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் கிடைப்பது கடினமே! சகக் கூட்டாளிகளினால், பிரச்னைகள் ஏற்படக்கூடும். நிதிநிறுவனங்களின் கண்டிப்பு, கவலையை அளிக்கும். கூடியவரையில், புதிய முதலீடுகளைக் குறைத்துக் கொள்வது, எதிர்காலத்திற்கு நல்லது.
கலைத் துறையினர்: எதிர்பார்க்கும் அளவிற்கு, வாய்ப்புகள் கிடைப்பது கடினம் என்பதை கிரக நிலைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. வாய்ப்புகளும், வருமானமும் குறையும். கைப் பணத்தைச் சிக்கனமாகச் செலவு செய்வது அவசியம். ஆடம்பரச் செலவுகளைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஒருசிலர், சிறு வாகன விபத்தில் சிக்கிக் கொள்ள நேரிடும். கூடியவரையில், இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது மிகவும் அவசியம் என கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன.நடிகர்கள், மற்றும் நடிகைகள், துணை நடிகர்கள் ஆகியோருக்கு வாய்ப்புகளும், வருமானமும் குறையக்கூடும்.
அரசியல் துறையினர்: அரசியல் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள கிரகங்கள் அனைத்தும் இந்தக் காலகட்டம் முழுவதும் சுபபலம் பெற்றிருக்கவில்லை. மக்களிடையே செல்வாக்கு குறையும். வருமானமும் பாதிக்கப்படக்கூடும். கையிலிருப்பதைச் சிக்கனமாக செலவு செய்வது அவசியம் என கிரக நிலைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன.கட்சியிலும், செல்வாக்கு குறையக்கூடும். உயர் மட்டத் தலைவர்கள் உங்களைப் புறக்கணிப்பார்கள். அதனால், மனம் வேதனையடையும். பிற அரசியல் கட்சிகளிடமிருந்து, அழைப்பு வந்து கொண்டிருக்கும். "சென்றுவிட்டால்தான் என்ன...?!" என்று மனதில் குழப்பம் ஏற்படும். எந்த முடிவானாலும், ஆழ்ந்து சிந்தித்து, அதன் பிறகே முடிவெடுப்பது, உங்கள் எதிர்கால அரசியல் வாழ்க்கைக்கு நன்மை செய்யும்.
மாணவ - மாணவியர்: கல்விக் கிரகமான, புதன் ஓரளவு சுபபலம் பெற்றுள்ளார்! பாடங்களில் மனம் முழுமையாக ஈடுபடும். தேர்வுகளில் உயர்ந்த மதிப்பெண்களைப் பெற்றுத் திகழ்வீர்கள். உயர் கல்விக்கு, உங்கள் விருப்பப்படி, பிரசித்திப் பெற்ற கல்லூரியில் இடம் கிடைக்கும்.தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், வெளிநாடு சென்று, விசேஷ உயர் கல்வி பெறுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது.சிலருக்கு, "ஸ்காலர்ஷிப்" அதாவது, கல்வி உதவித் தொகை கிடைப்பதற்கும் வாய்ப்புள்ளது. ஒருசிலருக்கு, வெளிநாட்டிலுள்ள பிரபல சர்வ கலாசாலையில் உயர் கல்விக்கு இடம் கிடைக்கும். உயர் கல்விக்கு உதவி செய்வதில் புதனுக்கும், சுக்கிரனுக்கும் இணையான கிரகங்கள் வேறில்லை!
விவசாயத் துறையினர்: விவசாயத் துறை, செவ்வாய் மற்றும் சூரியனின் ஆதிக்கத்தில்தான் உள்ளது. வீரியம் நிறைந்த இவ்விரு கிரகங்களும், பலத்துடன் சஞ்சரிப்பதால், நல்ல விளைச்சலும், லாபமும் கிடைக்கும். அடிப்படை வசதிகளான, தண்ணீர், உரம், விதைகள். நாற்றுகள் ஆகியவற்றிற்குக் குறைவிராது. பணவசதியும் தேவையான அளவிற்கு இருக்கும் என்பதை கிரக நிலைகள் உறுதி செய்கின்றன. சற்று திட்டமிட்டு செலவு செய்தால், பழைய
கடன்களை அடைத்து, புதிய விளைநிலம் வாங்கும் யோகமும் அமைந்துள்ளது.
பெண்மணிகள்: சென்ற சுமார் மூன்று மாதங்களாக, பல விதங்களிலும் வேதனைப் பட்ட உங்களுக்கு இப்போது நல்ல காலம் பிறந்துள்ளதை கிரகங்களின் சஞ்சார நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன. உடல் ஆரோக்கியம் அபிவிருத்தியடையும். உடலை வருத்தி வந்த பிரச்னைகள் நல்லபடியே தீரும். வேலை பார்க்கும் இடத்தில் மன நிம்மதியைப் பாதித்து வந்த சூழ்நிலையில், நல்ல மாறுதலை இப்போது காணலாம். புதிய வேலைக்கு முயற்சித்த வனிதையருக்கு, நல்ல நிறுவனத்தில், மனத்திற்குப் பிடித்த வேலை கிடைக்கும். தொடர்ந்து ஏற்பட்டு வந்த பணக் கஷ்டம் இனி இராது. விவாக வயதிலுள்ள கன்னியருக்கு, நல்ல வரன் அமையும். உடல் ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
அறிவுரை: கூடியவரையில், உடல் உழைப்பையும், கற்பனையான கவலைகளையும், எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்தையும் விட்டுவிடுங்கள். உங்கள் மனமே உங்களுக்கு எதிராகிவிடக்கூடாது.
பரிகாரம்: விநாயகருக்கு தினமும் காலையில் விளக்கேற்றி வழிபாடு செய்வது நல்லது. கஷ்டங்கள் நீங்கும்.


