(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரை)
குடும்பம்: ராசிக்கு எட்டில் குரு வருகிறார். சனி மற்றும் ராகு ஆகிய மூவரும் அனுகூலமான நிலைகளில் வலம் வருகின்றனர்! வருமானம் திருப்திகரமாக இருப்பதால், பணப் பற்றாக் குறை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. திருமண வயதில் பெண் அல்லது பிள்ளை இருப்பின், நல்ல வரன் அமையும். குடும்பச் சூழ்நிலை வழக்கம்போல் இருக்கும். அதிக வெயிலினால், சிறு சரும உபாதைகள் ஏற்பட்டு, எளிய சிகிச்சையினால் குணமாகும். ெவளிநாட்டில் வேலைக்கு முயற்சித்துவரும் பெண் அல்லது பிள்ளைக்கு நல்ல செய்தி கிடைக்கும். திருமணமாகியுள்ள பெண்களுக்கு கருத்தரிக்க கிரக நிலைகள் சுப பலம் பெற்றுள்ளன.ஒரு சிலருக்கு, சொந்த வீடு வாங்கும் யோகமும் அமைந்துள்ளது. அஷ்டம ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதால், கணவர்- மனைவியரிடையே சிறுசிறு கருத்துவேற்றுமை ஏற்பட்டு, சமரசத்தில் முடியும்.
உத்தியோகம்: வேலைச் சுமையும், பொறுப்புகளும் அதிகரிக்கும் என சனி மற்றும் ராகுவின் சஞ்சார நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன.உயரதிகாரிகளுடன் கருத்து வேற்றுமை ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. சகஊழியர்களுடன் சற்று அனுசரித்து நடந்து கொள்வது நல்லது என கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன.வெளிநாடுகளில் பணியாற்றிவரும் அன்பர்களுக்கு, தாய் நாடு திரும்பும் வேட்கை அதிகரிக்கும்.
தொழில், வியாபாரம்: ஒரே சீராக தொடர்ந்து வந்த சந்தை நிலவரத்தில், திடீரென்று போட்டிகள் அதிகரிக்கும். லாபத்தைப் பாதுகாத்துக் கொள்ள, பாடுபட வேண்டியிருக்கும்.ஏற்றுமதி - இறக்குமதித் துறையினருக்கு, பணப் பிரச்னை சற்று கடுமையாகவே இருக்கும். ஒரு சிலர், வெளிநாடு சென்று வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படக்கூடும்.வங்கி மற்றும் இதர நிதிநிறுவனங்களின் கண்டிப்பு, கவலையை அளிக்கும். கூட்டாளிகளிடையே கருத்து வேற்றுமை ஏற்படும். புதிய முதலீடுகளைத் தற்போதைக்குத் தவிர்ப்பது மிகவும் அவசியம்.முன்பணமில்லாமல், வெளிநாடுகளுக்கு சரக்குகளை அனுப்புவதைத் தவிர்த்தல் நல்லது. இல்லாவிடில், பணத்தை இழக்க நேரிடும்.
கலைத் துறையினர்: வாய்ப்பும், வருமானமும் குறையும். நிதிப் பற்றாக்குறை மனத்தை அரிக்கும். பிரபல நிறுவனங்களின் ஆதரவு குறையும். மக்களிடையே செல்வாக்கு பாதிக்கப்படும். எதிர்பார்த்திருந்த வெளிநாட்டுக் கலை நிகழ்ச்சிகள் ஏமாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.கைப் பணம் விரயமாகும். சினிமா தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் சொந்தக்காரர்கள் ஆகியோருக்கு நஷ்டம் ஏற்படும். எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சினிமாத் துறை நடிகர் - நடிகைகளுக்கு வாய்ப்புகள் குறைவதால், வாழ்க்கை சுகமும், வருமானமும் வெகுவாக பாதிக்கப்படும். கூடியவரையில், ஆடம்பரச் செலவுகளையும், பணியாட்களையும் குறைத்துக் கொள்வது, நல்லது.
அரசியல் துறையினர்: அரசியல் துறைக்கு ஆதிக்கம் பெற்றுள்ள கிரகங்கள் ஓரளவே அனுகூலமாக சஞ்சரிப்பதால், மேல்மட்டத் தலைவர்களுக்கு, உங்கள் மீது இருந்த நம்பிக்கை சற்று குறையக்கூடும். மாற்றுக் கட்சியினர் உங்களை தங்கள் கட்சியில் சேர்ந்துவிட முயற்சிப்பார்கள். தீர யோசித்து முடிவெடுப்பது உங்கள் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும்.
மாணவ - மாணவியர்: கல்வித் துறையை தங்கள் ஆதிக்கத்தில் கொண்டுள்ள வித்யாகாரகரான புதனும், மற்ற அனைத்து கிரகங்களும் ஓரளவே சுபபலம் பெற்று வலம் வருவதால், மாணவ - மாணவியர் பாடுபட்டுப் படிக்க வேண்டியிருக்கும். படித்தவை எளிதில் மறந்து போகும். உயர் கல்விக்கு முயற்சிப்பின், சிறு சிறு தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதை கிரகநிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
விவசாயத் துறையினர்: விவசாயத் துறை, குறிப்பாக சூரியன் மற்றும் செவ்வாயின் ஆதிக்கத்தில் உள்ளது. இவ்விரு கிரகங்களும் விவசாயத் துறையினருக்கு சாதகமாக சஞ்சரிப்பதால், அடிப்படை வசதிகளுக்குக் குறைவிராது. விளைச்சல் எதிர்பார்த்ததைவிட, சற்று அதிகமாக இருக்கும் என்பதை கிரக நிலைகள் உறுதி செய்கின்றன. கால்நடைகள் நல்ல அபிவிருத்தியை அடையும். தசா, புக்திகள் சாதகமாக இருப்பின், பழைய கடன்களை அடைத்து, நிம்மதி பெறலாம். சிலருக்கு புதிய விளைநிலம் வாங்கும் யோகமும் அமைந்திருப்பதை செவ்வாய் மற்றும் சுக்கிரனின் சஞ்சார நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்வது உங்கள் திறன்!
பெண்மணிகள்: பெண்மணிகளின் நலன்களுக்கு, அனைத்து கிரகங்களுக்கும் அதிகாரம் உள்ளது. ஆயினும், சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஆகிய இரு கிரகங்களுக்கும் மற்ற கிரகங்களை விட, அதிக அதிகாரம் உள்ளது.வீரியம் நிறைந்த சுக்கிரன், செவ்வாய் ஆகிய இருவரும் பெண்மணிகளுக்கு சாதகமாக வலம் வருவதால், இந்தக் குரு பெயர்ச்சியின்போது பல நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். சுக்கிரனின் ஆதிக்கத்தினால், புதிய ஆடை, ஆபரணங்கள் கிடைப்பதற்கு சிறந்த வாய்ப்புள்ளது. திருமண வயதிலுள்ள கன்னியருக்கு, நல்ல வரன் அமைந்து, திருமணமும் நடைபெறும் என கிரக நிலைகள் உறுதிபடக் கூறுகின்றன.
அறிவுரை: குறிப்பாக, இந்த ராசியில் பிறந்துள்ள பெண்மணிகளுக்கு அதிக நன்மைகள் சுக்கிரனால் ஏற்படவுள்ளன. இத்தகைய அரிய நல்ல கிரக காலம் நடைபெறும்போது, பயன்படுத்திக் கொள்வது நமது திறமையில் மட்டுமே உள்ளது. இவ்வாய்ப்பினைத் தவறவிடாமல் கைப்பற்றிக் கொள்ளுங்கள்.
பரிகாரம்: குரு பகவானின் அருளைப்பெற அன்னதானம் செய்வது பெரும் நன்மைகளைச் செய்யும். சனிக்கிழமைகள்தோறும், காகத்திற்கு நெய், எள், பருப்பு கலந்த ஐந்து சாத உருண்டைகள் வைப்பது மிக நல்ல பரிகாரமாகும்.


