(விசாகம் 4ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை வரை)
குடும்பம்: பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில், குரு பகவான் உச்ச நிலையில் அமர்ந்து, உங்கள் ஜென்ம ராசியையும் தனது சுபப் பார்வையினால், பலப்படுத்துகிறார். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றைத் தீர்த்து, நிம்மதி பெறலாம். குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சியை அளிக்கும். ஆனால், சனிபகவானும், ராகுவும் அதிக அலைச்சலை தருவார்கள். எல்லா விஷயங்களிலும் அதிக முயற்சியும் தேவைப்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம்.குறிப்பாக, இரவு நேரங்களில் வாகனம் ஓட்டுவதைக் குறைத்துக் கொள்வது நல்லது. ஆபத்தைத் தேடிச் செல்வாரும் உண்டோ..?! மேலும், வெளியூர்ப்பயணங்களின்போது, பணம், பொருட்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.பாக்கிய ஸ்தானத்தில் குரு பகவான் அமர்ந்திருப்பதால் குடும்பத்தில், நிச்சயதார்த்தம், கல்யாணம், சீமந்தம், மகப்பேறு போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அதனால் இல்லத்தில் மகிழ்ச்சிக்கும், மன நிறைவிற்கும் குறைவிராது. பலருக்கு, சொந்த வீடு அமையும் பாக்கியம் இருப்பதையும் கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன.படிப்பு முடிந்து, வேலைக்கு முயற்சி செய்யும், பிள்ளை அல்லது பெண்ணிற்கு, நல்ல நிறுவனத்தில், மனதிற்குப் பிடித்த வேலை கிடைக்கும். பழைய கடன்கள் இருப்பின், அவை அடைபடும்.
உத்தியோகம்: உத்தியோகஸ்தர்களுக்கு, அனுகூலமான காலகட்டமாகும், இந்தக் குருபெயர்ச்சி! "குருவின் அனுக்கிரகம் இருப்பின் கோடி தோஷம் விலகும்...!" என குரு பகவானின் பெருமையையும் சக்தியையும், ஜோதிடக் கலை போற்றிப் புகழ்கிறது. வேலையில்லாமல், அவதியுறும் இளைஞர்கள், பெண்கள் ஆகியோருக்கு நல்ல நிறுவனத்தில், மனத்திற்குப் பிடித்த வேலை கிடைக்கும்.தற்காலிகப் பணியாளர்களுக்கு, வேலை நிரந்தரமாகும். வெளிநாடு சென்று, பணியாற்றி பணம் சேமிக்க வேண்டும் என்ற ஆர்வமிருப்பின், தற்போது முயற்சிக்கலாம். வெற்றி எளிதாகக் கிட்டும்.
தொழில், வியாபாரம்: வர்த்தகத் துறையினருக்கு, கிரக நிலைகள் மிகவும் சாதகமாக அமைந்துள்ளன, இந்தக் குரு பெயர்ச்சி கால கட்டத்தில்!உங்கள் சரக்குகளுக்கு, சந்தையில் நல்ல வரவேற்பும், லாபமும் கிடைக்கும். ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாட்டில் உள்ள பிரபல வர்த்தகத் துறையினருடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.தற்கால தசா, புக்திகள் சுபபலம் பெற்றிருப்பின், வியாபார அபிவிருத்தி சம்பந்தமாக வெளிநாடு சென்று வரும் சாத்தியக்கூறு உள்ளதையும் கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன. புதிய முதலீடுகளில் துணிந்து இறங்கலாம்.
கலைத் துறையினர்: லாபகரமான பல வாய்ப்புகள் அதிக சிரமமின்றி உங்களைத் தேடிவரும். அதனால், வருமானம் உயரும். உங்கள் பொருளாதார நிலையை சரி செய்துகொள்ள ஏற்ற தருணமிதுவே! பலருக்கு, வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பும் கிட்டும். இது உங்கள் பொருளாதாரப் பிரச்னைகளைக் கணிசமாகக் குறைத்துவிடும். புதிய சங்கீத, நாட்டியப் பள்ளிகளைத் திறப்பதற்கு அனுகூலமான தருணம் இது.
அரசியல் துறையினர்: அரசியல் துறையைக் கட்டுப்படுத்தும் பிரதான கிரகங்கள் சுக்கிரனும், செவ்வாயும் ஆவர். புதனுக்கும் அதில் பங்குண்டு! இம்மூன்று கிரகங்களும் இம்மாதம் உங்களுக்கு ஆதரவாக வலம் வருவதால், பல நல்ல வாய்ப்புகளை உருவாக்கித் தருவார்கள்.பிரபல அரசியல் தலைவர்களுடன் நட்புறவு மேலிடும். இன்னும் சிலருக்கு, உயர் பதவி ஒன்று உங்களைத் தேடி வரும்.மக்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். சிம்மாசனத்தில் அமர்த்தி அரசனாக்கும் சக்தி சுக்கிரனுக்கு உண்டு எனக் கூறுகிறது "அர்்த்த சாஸ்திரம்". அத்தகைய தன்னிகரற்ற, சக்தி வாய்ந்த கிரகம் சுக்கிரனாவார்.
மாணவ - மாணவியர்: வித்யாகாரகரான புதன், உங்கள் ராசிக்கு அனுகூலமான நிலையில் சஞ்சரிப்பதால், கல்வியில் நல்ல முன்னேற்றம் காத்துள்ளது.பாடங்களில் மனம் ஆர்வத்துடன் ஈடுபடும். படித்தவை மனதில் நிலைத்து நிற்கும். பரிட்சைகளில், கேள்விகளைச் சரியாகப் புரிந்து கொண்டு, சரியான விடைகளை அளிப்பதற்குஅவசியமான நினைவாற்றல் அதிகரிக்கும். ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் குறைவின்றிக் கிடைக்கும்.
விவசாயத் துறையினர்: சூரியன், செவ்வாய் ஆகிய இருவரும் உங்களுக்கு ஆதரவாக வலம் வருவதால், விவசாயத் துறையினருக்கு, நல்ல விளைச்சலும், வருமானமும் கிடைக்கும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெற நல்ல வாய்ப்பு இது. நழுவ விடாதீர்கள். தசா, புக்திகள் சுபபலம் பெற்றிருப்பின், புதிய விளைநிலம் வாங்கும் யோகமும் உள்ளது.
பெண்மணிகள்: பெண்மணிகளின் நலன்களுக்கு, அதிகாரம் கொண்டுள்ள சுக்கிரனும் மற்ற கிரகங்களும் அனுகூலமாக வலம் வருவதால், பெண்மணிகளுக்கு பல நன்மைகள் காத்துள்ளன. குறிப்பாக, உடல் நலனில் நல்ல அபிவிருத்தி ஏற்படும். நிரந்தர உபாதைகளுக்காக சிகிச்சை பெற்று வரும் பெண்களுக்குக்கூட, வியக்கத்தக்க குணம் கிடைக்கும்.
அறிவுரை: சிக்கனமாக செலவு செய்து, சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். திருமண வயதில் பெண் அல்லது பிள்ளை இருப்பின், நல்ல வரன் அமைவதற்கு ஏற்ற தருணம் இது. நழுவ விட்டுவிடாதீர்கள்.
பரிகாரம்: வெள்ளி மற்றும் செவ்வாய்க் கிழமைகள் தோறும், காகத்திற்கு, பருப்பு, நெய், எள் கலந்த ஐந்து சாத உருண்டைகள் வைப்பதும், ஏழை ஒருவருக்கு, உணவளிப்பதும் கைமேல் பலனளிக்கும். இதனை அனுபவத்தில் காணலாம்.


