search-icon-img
featured-img

கன்னி

Published :

(உத்திரம் 2ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2ம் பாதம் வரை)

குடும்பம்: குரு 11ம் இடத்திற்கு வருகிறார், சனி மற்றும் ராகு ஆகிய மூவரும் உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கின்றனர். வருமானம் போதிய அளவிற்கு இருக்கும் என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. ஆயினும், திட்டமிட்டு செலவு செய்தல் அவசியம் என்பதையும் அதே கிரக நிலைகள் எச்சரிக்கையும் செய்கின்றன. தேவையற்ற அலைச்சல், கடின உழைப்பு, வெளியூர்ப் பயணங்கள் ஆகியவற்றினால், உடல் நலன் பாதிக்கப்பட சாத்தியக்கூறு உள்ளது. கூடியவரையில், தவிர்க்க முயற்சிக்கவும். திருமண முயற்சிகளில், தடங்கல்கள் ஏற்படக்கூடும் என்பதையும் கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. எக்காரணத்தைக் கொண்டும், பிறரிடம் கடன் வாங்கக் கூடாது! கிரக நிலைகளின் படி, வாங்கும் கடன் விருத்தியாகும் எனவும், அதிலிருந்து விடுபடுவதற்கு சிரமமாக இருக்கும் எனவும், ஜோதிடக்கலை எச்சரிக்கை செய்கிறது. எத்தகைய தருணங்களில், எந்தெந்த விஷயங்களில் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே தெரிவித்து, நமக்கு நல்வழி காட்டும் உதவியை ஜோதிடக் கலை செய்கிறது.

உத்தியோகம்: உத்தியோகத் துறை, ஜீவன காரகரான சனி பகவானின் பூரண ஆதிக்கத்தில்தான் உள்ளதாக ஜோதிடக் கலை விவரித்துள்ளது. அத்தகைய சக்திவாய்ந்த சனி பகவான், ராகுவுடன் சேர்ந்து, பூரண சுபபலம் பெற்று சஞ்சரிப்பதால், உத்தியோகத் துறையினருக்கு, வேலை பார்க்கும் இடத்தில், அனைவரின் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள், உங்கள் பணிகளில் உற்சாகத்தையளிக்கும். ஜனன கால ஜாதகத்தில், தசா, புக்திகள் சுபபலம் பெற்றிருப்பின், வெளிநாடு ஒன்றிற்குச் சென்று, பணியாற்றும் வாய்ப்பும் கிட்டும். தற்காலிகப் பணிகளில் உள்ள அன்பர்களுக்கு, வேலை நிரந்தரமாகும். புதிய பணிக்கு முயற்சித்து வருபவர்களுக்கு மனதிற்கு உகந்த வேலை கிடைக்கும்.

தொழில், வியாபாரம்: சம்பந்தப்பட்ட கிரகங்கள் அனைத்தும், சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், லாபகரமான காலகட்டத்தில் நீங்கள் தற்போது இருப்பதைக் காணலாம். உங்கள் பொருட்களுக்கு சந்தையில் நல்ல லாபம் கிடைக்கும். வங்கிகள் மற்றும் இதர நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு உற்சாகத்தையளிக்கும். புதிய முதலீடுகளில் அளவோடு ஈடுபடலாம். சகக் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு எளிதில் கிட்டும். ஒருசிலருக்கு, வியாபார அபிவிருத்தி சம்பந்தமாக, வெளிநாடு சென்று வரும் வாய்ப்பும் உருவாகும். வெளிநாட்டிலுள்ள பிரபல வர்த்தக நிறுவனத்துடன் வியாபார ஒப்பந்தம் கையெழுத்தாகும்.

கலைத் துறையினர்: புதிய வாய்ப்புகள் வருமானத்தை உயர்த்தும். உற்சாகம் மேலிடும். ஒரு சிலருக்கு, வெளிநாட்டில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு, வாய்ப்புகள் உருவாகும். உங்கள் பொருளாதார முன்னேற்றத்திற்கு இவை உதவும்.திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு, லாபகரமான காலகட்டம் இது. சிறிய திரைப்படமும், நல்ல லாபத்தைப் பெற்றுத் தரும். நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு,கிரக நிலைகள் சாதகமாக அமைந்துள்ளன. உங்கள் பொருளாதார நிலையை சரிசெய்து கொள்ள ஏற்ற தருணம் இது. செவ்வாய், பூரண சுப பலம் பெற்றிருப்பதால், பலருக்கு சொந்த வீடு அமையும் யோகமும் உள்ளது.

அரசியல் துறையினர்: அரசியல் துறையை தனது பூரண அதிகாரத்தில் கொண்டுள்ளது சுக்கிரனாகும்! அவருக்கு அடுத்தபடியாக, செவ்வாய்க்கு அதிகாரம் உள்ளது. இவ்விருவரும், பூரண சுப பலம் பெற்று, சஞ்சரிப்பதால், அரசியல் துறையினருக்கு, லாபகரமான காலகட்டம் இது. தசா, புக்திகள் சாதகமாக இருப்பின், உயர் பதவி ஒன்றை வகிப்பதற்கும் சூழ்நிலை உருவாகும். உயர்மட்டத் தலைவர்களின் ஆதரவும், உதவியும் எளிதில் கிட்டும். ஒருசிலருக்கு, கட்சி மாற்றமும், அதன் காரணமாக, உயர் பதவி ஒன்று கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை சுக்கிரனின் சஞ்சார நிலை எடுத்துக்காட்டுகிறது.

மாணவ - மாணவியர்: வித்யா காரகரான புதன், பூரண சுப பலம் ெபற்று சஞ்சரிப்பதால், பாடங்களில் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் மனம் ஈடுபடும். ஆசிரியர்களின் உதவியும், வழிகாட்டுதல்களும் சமய சஞ்ஜீவியாக உதவும். வெளிநாடு சென்று, உயர் கல்வி பயில ஆர்வமிருப்பின், இப்போது முயற்சிக்கலாம். அதற்கான உதவிகள் அனைத்தும் எளிதில் கிட்டும்.

விவசாயத் துறையினர்: விவசாயத்துறைக்கு சம்பந்தப்பட்ட கிரகங்கள் சுப பலம் பெற்று அனுகூலமாக சஞ்சரிப்பதால், நல்ல விளைச்சலும், வருமானமும் கிடைக்கும். கால்நடைகள் சிறந்த அபிவிருத்தியை அடையும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெற ஏற்ற தருணம் இது. தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், புதிய விளை நிலம், கால்நடைகள் வாங்கும் யோகமும் அமைந்துள்ளதை கிரக நிலைகள் சுட்டிக் காட்டுகின்றன.

பெண்மணிகள்: சுக்கிரன், இம்மாதம் முழுவதும் எவ்வித தோஷமுமின்றி, சஞ்சரிப்பதால், பெண்மணிகள் அதிக நன்மைகளைப் பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விவாக வயதிலுள்ள கன்னியருக்கு, நல்ல வரன் அமையும். விவாகமாகியுள்ள நங்கையருக்கு, கருத்தரிக்கும் யோகமும் அமைந்துள்ளது.

அறிவுரை: சிக்கனமாக இருந்து, எதிர்காலத்திற்கென்று சிறிது சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். அதிக அலைச்சலையும், குறைத்துக் கொள்வது நல்லது.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகள் தோறும், காலையில், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் தீபத்தில் சிறிதளவு நெய் சேர்த்து வந்தால் போதும்.