(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)
குடும்பம்: வருட ஆரம்பத்திலிருந்து, சுக்கிரனின் ராசியான ரிஷபத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், சித்திரை 28-ம் தேதிக்கு சரியான ஆங்கிலத் தேதி மே 11, 2025 அன்று புதனின் ஆட்சிவீடான மிதுனத்திற்கு மாறுகிறார்! அங்கிருந்து, துலாம், விருச்சிகம், கும்பம் ஆகிய மூன்று ராசிகளையும் தனது சுபப் பார்வையினால், தோஷமற்றவையாகச் செய்கிறார்! மிதுனம், மேஷ ராசியினருக்கு “திருதீய” ஸ்தானமாகும். ஜோதிடக் கலையின் விதிகளின்படி, ராசிக்கு மூன்றாம் இடத்தில், குரு சஞ்சரிக்கும்போது, எதிர்பாராத செலவுகளில் பணம் விரயமாகும். சிறு சிறு உடல் உபாதைகளினால், மருத்துவச் செலவுகள் ஏற்படும். சிறு குடும்ப விஷயங்களுக்குக்கூட, அதிகமாக அலையவேண்டிவரும். திருமண முயற்சிகளில், அதிகமாக பாடுபடவேண்டியிருக்கும். நெருங்கிய உறவினர்களிடையே ஒற்றுமை குறையும். அடிக்கடி குடும்பப் பிரச்னைகளினால், மனதில் “டென்ஷன்” உண்டாகும். வரும் சுமார் ஒரு வருடக் காலத்திற்கு, திட்டமிட்டு செலவு செய்வது, குடும்பத்திற்கு நன்மை செய்யும்.
உத்தியோகம்: குடும்பக் கவலைகளினால், அலுவலகத்தின் அன்றாடப் பணிகளில் மனதைச் செலுத்துவது சற்று கடினம். அடிக்கடி முன்-கோபம், பொறுமையின்மை, சக-ஊழியர்களிடம் சந்தேகம் ஆகியவை மனதை வருத்தும். பிறருடன் பழகுவதில், பொறுமை அவசியம். சக-ஊழியர்களின் சொந்தப் பிரச்னைகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டாம். இது மிக, மிக முக்கியம்! மறந்துவிடாதீர்கள்!! மேலதிகாரிகளுடன், அலுவலகக் கடமைகள் பற்றி, விவாதிக்கும்போது, சாதுர்யம், கட்டுப்பாடு அவசியம். சில தருணங்களில், நிதானத்தை இழப்பதற்கு சாத்தியக்கூறு உள்ளது.
தொழில், வியாபாரம்: அடு்த்து வரும் சுமார், ஒருவருடக் காலத்திற்கு, குரு பகவானின் சஞ்சாரம் சாதகமாக இல்லை! புரட்டாசி 22-ம் (8-10-2025) தேதியன்று குரு பகவான், கடக ராசிக்கு மாறுகிறார்! மீண்டும் மார்கழி 6-ந் (21-12-2025) தேதியன்று மிதுன ராசிக்குத் திரும்புகிறார்! அதன் பிறகும், அவரது சஞ்சார நிலையினால், உங்களுக்கு நன்மை ஏதும் ஏற்படாது. இருப்பினும், அவரது 5, 7, 9-ம் பார்வைகளினால், துலாம், விருச்சிகம், கும்பம் ஆகிய ராசியினர், நன்மை பெறுகிறார்கள். சந்தை நிலவரம், அனுகூலமாக இராது. நீங்கள் எதிர்பார்க்கும் விலை உங்கள் சரக்குகளுக்குக் கிடைப்பது கடினம். கூட்டாளிகளினாலும், பிரச்னைகள் ஏற்படும். கூடியவரையில், வரும் 1 வருடக் காலத்திற்கு, கடனுக்கு சரக்குகள் அனுப்புவதைக் குறைத்துக் கொள்வது நல்லது. இல்லாவிடில், பணத்தை இழக்க நேரிடும்.
கலைத் துறையினர்: அடுத்துவரும், ஒரு வருடக் காலத்திற்கு, குரு பகவானால், அதிக நன்மைகளை எதிர்பார்ப்பதில் பயனில்லை. வாய்ப்புகளுக்காக, பாடுபடவேண்டியிருக்கும். கிடைக்கும் சந்தர்ப்பங்களில்கூட, எதிர்பார்க்கும் அளவிற்கு வருமானம் கிடைப்பது சந்தேகம். எதிர்பார்த்திருந்த வெளிநாட்டு நிகழ்ச்சிகள் கைநழுவிப் போகும். கையிலிருப்பதைச் சிக்கனமாகச் செலவு செய்வது நல்லது என கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. குரு பகவான், மிதுனத்திலும், கடகத்திலும் மாறி, மாறி சஞ்சரித்தாலும், அதனால், உங்களுக்கு நன்மை எதுவும் ஏற்படாது. ஆயினும், கடகம், விருச்சிகம், கும்ப ராசியினர் அளவோடு நன்மை அடைவார்கள் – குரு பகவானின் பார்வை சக்தியினால்…!
அரசியல் துறையினர்: குடும்பப் பிரச்னைகளினால், கட்சிப் பணிகளில் அதிகமாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை உருவாகும். திருமணமாகியுள்ள அரசியல் பிரமுகர்களுக்கு, குடும்பப் பிரச்னைகள் கவலையை அளிக்கும். கணவர் – மனைவியரிடையே கருத்துவேற்றுமை சற்று கடுமையாக இருக்கும். ஜனன கால கிரக நிலைகள் சாதகமாக இல்லையெனில், விவாக ரத்து வரை சென்றுவிடக்கூடும். கூடியவரையில், கணவர் – மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தும், அனுசரித்தும் நடந்துகொள்வது விவேகமாகும்.
மாணவ – மாணவியர்: குடும்பச் சூழ்நிலை, பாடங்களில் கவனம் செலுத்துவதைப் பாதிக்கும். மனதில், நிம்மதி குறையும். விடுதிகளில் தங்கி, படித்துவரும் மாணவ – மாணவியருக்கு, பணத் தட்டுப்பாடு கவலையை அளிக்கும். ஒருசிலருக்கு, பள்ளி மாற்றம் ஏற்படக்கூடும் என்பதையும் குரு பகவான், கல்வி கிரகமாகிய புதனின் ராசியான மிதுனத்தில் சஞ்சரிப்பது எடுத்துக்காட்டுகிறது. பாடங்களில் மனதைச் செலுத்த இயலாமல், சில பிரச்னைகள் கவலையை அளிக்கும்.
விவசாயத் துறையினர்: குரு பகவானின் சஞ்சாரத்தில், வரும் ஒருவருடக் காலத்திற்கு ஏற்பமாறுதல்கள் உங்களை அதிகமாக பாதிக்காது. அதற்குப் பதிலாக, உங்கள் ராசிக்கு, லாப ஸ்தானமாகிய கும்ப ராசியில் அமர்ந்துள்ள சனி பகவாைனயும், ராகுவையும், குரு பார்ப்பது, பல நன்மைகளை உங்களுக்கு அளிக்கவுள்ள கிரக நிலையாகும். சிலருக்கு புதிய விளைநிலம் வாங்கும் யோகத்தையும் அளித்தருள்கிறார், குரு பகவான். கால்நடைகளின் பராமரிப்பில், நல்ல அபிவிருத்தி ஏற்படும். பயிர்கள் செழித்து வளரும். சிலருக்கு நவீன விவசாய உபகரணங்கள் கிடைக்கும்.
பெண்மணிகள்: விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டு முடியும் வரையில், குரு பகவானின் சஞ்சார நிலை பெண்மணிகளுக்கு அதிக நன்மைகளை அளிக்க வாய்ப்பில்லை! மிதுன ராசிைய விட்டு, கடகத்திற்கு மாறும்போதும், பின்பு, வக்கிர கதியில் மிதுன ராசிக்குத் திரும்பும் போதும், அவர் உங்களுக்கு அனுகூலமாக இல்லை! குடும்பப் பிரச்னைகள் நீடிக்கின்றன. குடும்ப நிர்வாகத்தில் ஏற்பட்டுவந்த பணப் பற்றாக்குறையும், நீடிக்கிறது. மேஷ ராசிப் பெண்மணிகள், குரு பகவானின் கருணைக்காக பரிகாரம் செய்வது நல்ல பலனையளிக்கும். இதை எளிய, சக்திவாய்ந்த பரிகாரங்களைக் கீழே கூறியிருக்கின்றோம். இவற்றில் எவை உங்களுக்கு வசதியாக உள்ளதோ அவற்றை மட்டுமே செய்து வந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். அவையனைத்தும், மிகப் பழைமையான ஜோதிடக் கிரந்தங்களில் கூறப்பட்டுள்ளன.
அறிவுரை: திட்டமிட்டு செலவு செய்யுங்கள். கடன் வாங்குவதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். நெருங்கிய உறவினர்களுடன், சற்று அனுசரித்து நடந்து கொள்ளவும்.
பரிகாரம்: வியாழக் கிழமை மாலை நேரத்தில், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிலோ அல்லது, உங்கள் பூஜையறையிலோ வழக்கமாக ஏற்றிவரும் தீபத்துடன், மண் அகலில் பரிகார தீபமொன்று ஏற்றி வந்தால் அற்புத பலன் கிடைக்கும்.