(உத்திராடம் 2ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் வரை)
குடும்பம்: விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டு ஆரம்பத்திலிருந்து சித்திரை 27-ம் (10-05-2025) தேதி வரை குரு பகவான் உங்களுக்கு உதவிகரமாக சுப பலம் பெற்று சஞ்சரிக்கின்றார். அமைதியான, மன நிறைவையும், மகிழ்ச்சியையும் அளிக்கும் குடும்பச் சூழ்நிலையை அளித்தருள்கிறார் குரு பகவான்! கணவர் – மனைவியரிடையே பரஸ்பர ஒற்றுமை நிலவும். ரிஷபம் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய, புத்திர ஸ்தானமாக அமைந்திருப்பதால், குழந்தைகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தீர்த்த, தல யாத்திரை ஒன்று சென்று வரும் யோகமும் உள்ளது. மனைவியின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதை அனுபவத்தில் பார்க்கலாம். திருமண முயற்சிகள் வெற்றிகரமாக அமையும். திருமணமான பெண்மணிகளுக்கு, கருத்தரிக்கும் யோகம் உள்ளதையும் குரு பகவானின் சஞ்சார நிலை குறிப்பிட்டுக்காட்டுகிறது. வெளியூர்ப் பயணங்கள் வெற்றிகரமாக இருக்கும். சித்திரை 28-ம் (11-5-2025) தேதியன்று, குரு, மிதுனத்திற்கு மாறிவிடுவதால், அதுவரை அவரால் ஏற்பட்டு வந்த நன்மைகள் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும். மிதுனம், உங்கள் ராசிக்கு ருண, ரோக, சத்ரு ஸ்தானமாக உள்ளதால், சித்திரை 28-ம் தேதியிலிருந்து தேவையற்ற செலவுகளும், உறவினர்கள், நண்பர்களுடன் பகையுணர்ச்சியும் உண்டாகும், சக்திக்கு மீறிய செலவுகளினால், புதிய கடன்களை ஏற்கவேண்டிவரும். கூடியவரையில் தவிர்ப்பது எதிர்காலத்திற்கு நன்மை செய்யும்.
உத்தியோகம்: ஏழரைச் சனியின் கடைசி பகுதி நடைபெறுவதாலும், சித்திரை 28-ம் (11-5-2025) தேதியன்று, குரு பகவான் மிதுனராசிக்கு மாறியவுடன், 9-ம் பார்வையாக, கும்ப ராசியிலுள்ள சனி பகவானையும், ராகுவையும், தங்கள் சுபப் பார்வையினால், பலப்படுத்துவதால், அலுவலகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதுவரை, எவ்விதக் காரணமுமில்லாமல், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சம்பள உயர்வு, பதவியுயர்வு ஆகியவற்றை இப்போது எதிர்பார்க்கலாம். புதிய வேலைக்கு முயற்சித்துவரும் அன்பர்களுக்கு, மனதிற்குத் திருப்தியளிக்கும் நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு சென்று, பணம் ஈட்டவேண்டும் என்ற விருப்பமிருப்பின், இப்போது முயற்சிக்கலாம்.
தொழில், வியாபாரம்: புரட்டாசி (22)-ம் 8-10-2025) தேதியிலிருந்து, குரு பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுவது, நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் குறிக்கிறது. எனினும், தமிழ்ப் புத்தாண்டு ஆரம்பத்திலிருந்து, புரட்டாசி 21-ம் (7-10-2025) வரை வியாபாரத்தில் பின்னடைவைச் சந்திக்க நேரிடும். சந்தையில் நியாயமற்ற போட்டிகள் அதிகரிக்கும். குறிப்பாக, அந்நிய நாடுகளில் நிலவும் நிச்சயமற்ற அரசியல் சூழ்நிலையினால், ஏற்றுமதித் துறையினருக்கு வரவேண்டிய பாக்கிகள் தடைபடும், அல்லது தாமதப்படும். அதன் காரணமாக, பண நெருக்கடி ஏற்படக்கூடும். திட்டமிட்டு செலவு செய்வது மிகவும் அவசியம்.
கலைத் துறையினர்: சித்திரை 27-ம் (11-05-2025) தேதி வரை நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதன் பிறகு, வருடம் முடியும் வரையில், வருமானம் சிறிது குறையும். நல்ல சந்தர்ப்பங்களுக்காக, பிரமுகர்களின் அலுவலகத்திற்கு அலையவேண்டிவரும். கூடிய வரையில், சிக்கனமாக செலவு செய்தல் நன்மை செய்யும். ஒரு சிலருக்கு, வெளிநாடு ஒன்றிற்குச் சென்று, கலை நிகழ்்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். இருப்பினும், எதிர்பார்க்கும் அளவிற்கு, அவற்றால் வருமானம் கிடைப்பது கடினம். மேலும், அதிக அலைச்சலினால், உடல் நலனும் பாதிக்கப்படக்கூடும்.
அரசியல் துறையினர்: சித்திரை 27-ம் (10-5-2025) தேதி வரையில், குரு பகவான் உங்களுக்குச் சாதகமாக சஞ்சரிக்கிறார். கட்சியில் ஆதரவு பெருகும். சித்திரை 28-ம் (11-5-2025) தேதி முதல், இப்புத்தாண்டு முடியும் வரையில் குரு பகவானால் அதிக நன்மைகளை எதிர்பார்க்க முடியாது. வருடம் முடியும் வரையில், உங்கள் பேச்சிலும், பொது மேடைகளில் பேசும்போது, உணர்ச்சிவசப்படக்கூடாது. மேலும், நீங்கள் பேசப்போவதை முன்கூட்டியே தயார் செய்து, அதனைப் படித்துப் பார்த்து, அதற்குப் பின்பு மக்களிடையே பேசுவது மிகவும் அவசியம் என்பதை குரு பகவானின் சஞ்சார நிலை வற்புறுத்திக் காட்டுகிறது.
மாணவ – மாணவியர்: சித்திரை 28-ம் (11-5-2026) தேதி முதல், புரட்டாசி முடியும் வரையில், வித்யாகாரகர் உங்களுக்கு அனுகூலமாக இல்லை. குரு பகவானும், ஓரளவே சாதகமாக வலம் வருகிறார். ஐப்பசி மாதம் முதல் வாரத்திலிருந்து, தமிழ்ப் புத்தாண்டு முடியும் வரையில், பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். வெளிநாடு சென்று விசேஷ உயர் கல்வி பயில விருப்பமிருப்பின், அதற்கான பூர்வாங்க முயற்சிகளில் ஈடுபடலாம். வெற்றி கிட்டும். விசா கிடைக்கும். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், கல்வி உபகாரச் சம்பளம் (Scholarship) கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை புதன் மற்றும் குருவின் நிலைகள் உறுதி செய்கின்றன.
விவசாயத் துறையினர்: பூமி காரகரான செவ்வாய் மற்றும் விவசாயத் துறையுடன் தொடர்புள்ள மற்ற கிரகங்களும் அனுகூலமாக சஞ்சரிப்பதால், ஐப்பசி மாதம் 5-ம் தேதியிலிருந்து, விவசாயப் பணிகளில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும். பயிர்கள், செழித்து வளர்வதைக் கண்டு, மனம் பூரிக்கும்.) சந்தையில் உங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.
பெண்மணிகள்: புரட்டாசி 22-ம் (8-10-2025) தேதியிலிருந்து குரு பகவான், கடகத்தில் சஞ்சரிக்கிறார். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். கணவர் மற்றும் குழந்தைகள் ஆகியோரின் அன்பு நெஞ்சைக் குளிற வைக்கும். வேலைக்கு முயற்சித்துவரும், சகோதரிகளுக்கு, நல்ல செய்தி காத்துள்ளது.
அறிவுரை: வாக்கு, தனம், குடும்பம் – ஸ்தானத்தின் சனி – ராகு கூட்டுச் சேர்க்கை ஏற்பட்டுள்ள இத்தருணத்தில், குரு பகவானும், புரட்டாசி 21-ம் (7-10-2025) தேதி வரை ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், நெருங்கிய உறவினர்களுடன் சற்று அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. புரட்டாசி 22-ம் (8-10-2025) தேதியிலிருந்து குரு பகவான் சாதகமாக மாறிவிடுகிறார்.
பரிகாரம்: திட்டை, ஆலங்குடி திருத்தல தரிசனம் மிகச் சிறந்த பரிகாரமாகும். வியாழக்கிழமைகளில் உபவாசம் இருப்பதும், கைமேல் பலனளிக்கும். வீட்டின் பூஜையறையிலோ அல்லது அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிலோ மாலையில் மண் அகலில் நெய் தீபம் ஏற்றிவருதும் சக்திவாய்ந்த பரிகாரம் என “பரிகார ரத்தினம்” எனும் புராதன ஜோதிட நூல் கூறுகிறது. இயலாதவர்கள், “லிகித ஜெபம்”ஆகப் போற்றிக் கொண்டாடப்படும் ÿராம ஜெயம் எனும் தாரக மந்திரத்தை நோட்டு புத்தகத்தில் தினந்தோறும் 1008 முறைகள் எழுதிவந்தால் போதும்.