(விசாகம் 4ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை வரை)
குடும்பம்: விருச்சிக ராசி அன்பர்களுக்கு, புரட்டாசி 21-ம் (7-10-2025) தேதி வரை குரு பகவான், மிதுன ராசியில் இருப்பது நன்மை தராது. நெருங்கிய உறவினர்களிடையே தேவையில்லாத வாக்குவாதம், ஒற்றுமையின்மை, திருமண முயற்சிகளில் ஏமாற்றம், சிறு, சிறு உடல்உபாதைகளினால், மருத்துவச் செலவுகள் ஆகியவை கவலையை அளிக்கும். சிறு விஷயங்களுக்குக்கூட அதிக அலைச்சல் தேவைப்படும். திருமண முயற்சிகளில், தவறான வரனை நிச்சயித்துவிடும் சாத்தியக்கூறு உண்டாகும். பிறரிடம் கைப் பணத்தை நம்பிக் கொடுத்து, இழந்துவிடும் வாய்ப்பும் உள்ளதை குரு பகவானின் சஞ்சார நிலை எடுத்துக்காட்டுகிறது. அடுத்துவரும் சுமார் 1 வருடக் காலத்திற்கு, பண விஷயங்களில் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கையில் பணம் இருப்பதைப் பிறரிடம் ெசால்லக் கூடாது. வௌியூர்ப் பயணங்களின்போது, பணத்தையும் விலை உயர்ந்த பொருட்களையும் சற்று பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
உத்தியோகம்: புரட்டாசி 22-ம் (8-10-2025) தேதியிலிருந்து, உங்கள் ராசிக்கு குரு பகவானின் சுபப் பார்வை கிடைக்கிறது. அஷ்டம ராசியில் ஏற்பட்டுள்ள சனி – ராகுவின் கூட்டுச் சேர்க்கையினால், வேலை பார்க்கும் இடத்தில் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து உங்களை நல்லபடி வெளிக்கொணர்ந்துவிடுவார், குரு! சிறு ஊதிய உயர்வை இனி எதிர்பார்க்கலாம். புதிய வேலைக்கு முயற்சித்துவரும், விருச்சிக ராசி அன்பர்களுக்கு, வெற்றி கிட்டும். உங்கள் ராசிக்கு குரு பகவான் வாக்கு, தனம், குடும்பம் மற்றும் பூர்வ புண்ணியம் ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார். ஆதலால், அவர் உங்களுக்கு யோகக் காரகர் ஆகிறார். புதிய வேலை மற்றும் தற்போதைய வேலையிலிருந்து மாற்றம், விருப்பமுள்ளவர்களுக்கு, விருப்பம் நிறைவேறும்.
தொழில், வியாபாரம்: அடுத்துவரும் ஒருவருடக் காலத்திற்கு, குரு பகவான் உங்களுக்கு அனுகூலமாக சஞ்சரிக்கிறார். சந்தை நிலவரம் சாதகமாக இருக்கும். போட்டிகளில் வென்று, விற்பனைகளில் வெற்றி பெற்று, நல்ல லாபம் கிடைக்கும். புதிய கிளைகள் திறப்பதற்கு ஏற்ற கால கட்டத்தில் நீங்கள் இப்போது இருக்கிறீர்கள்! கொடுப்பதில், நிதானமாகத்தான் கொடுப்பார், குரு பகவான்!! ஆனால், நிச்சமாகக் கொடுப்பார்! அர்த்தாஷ்டக ராசியில், ராகுவும், சனியும் அமர்ந்துள்ள நிலையில், குரு பகவானும் அஷ்டம ராசியான மிதுனத்தில் சஞ்சரிப்பது, நன்மை தராது. இருப்பினும், புரட்டாசி 22-ம் (08-10-2025) தேதி குரு பகவான் உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமாகிய கடக ராசிக்கு மாறும்போது, 5-ம் பார்வையாக, உங்கள் ராசியை பலப்படுத்துகிறார். அன்றிலிருந்து, குரு பகவானால் பல நன்மைகள் ஏற்படும். இவை, விசுவாவசு தமிழ்ப்புத்தாண்டு முடியும் வரை, நீடிக்கும்.)
கலைத் துறையினர்: புரட்டாசி 21-ம் (7-10-2025) தேதி வரை குரு பகவானிடம் எவ்வித நன்மையையும் எதிர்பார்ப்பதில் பயனில்லை! புரட்டாசி 22-ம் (8-10-2025) தேதி குரு, கடகத்திற்கு மாறியவுடன், படிப்படியாக பல நன்மைகளைச் செய்வார். “ஓடிப் போனவனுக்கு 9-ல் குரு….!” என்ற பழமொழியே உள்ளது!! அதே தருணத்தில், உங்கள் ஜென்ம ராசிக்கும் குரு பகவானின், சுபப் பார்வை கிடைப்பது, அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது. பல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். அதனால், வருமானம் உயரும். மக்களிடையே புகழ் அதிகரிக்கும். சிலருக்கு வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பும் கிட்டும்.
அரசியல் துறையினர்: சித்திரை 27-ம் (10-5-2025) தேதி வரை குரு பகவான் அனுகூலமாக உள்ளார். சித்திரை 28-ம் (11-5-2025) தேதியன்று, அவர் மிதுன ராசிக்கு மாறியதும் அவரால் நன்மை எதுவும் எதிர்பார்க்க இயலாது. ஏனெனில், மிதுனம் உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமாகும்! புரட்டாசி 22-ம் (8-10-2025) தேதியன்று குரு பகவான், கடகத்திற்கு மாறுகிறார். கடகம், விருச்சிக ராசிக்கு பாக்கிய ஸ்தானமாகும். ஆதலால், புரட்டாசி 22-ம் தேதியிலிருந்து விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டு முடியும் வரை, குரு பகவானால் பல நன்மைகள் ஏற்படும். குடும்பச் சூழ்நிலையில், மிக நல்ல முன்னேற்றம் காணலாம்.
மாணவ – மாணவியர்: சித்திரை 28-ம் (11-5-2025) தேதி முதல், புரட்டாசி 21-ம் (7-10-2025) தேதி வரை பாடங்களில் கவனம் குறையும். இக்காலகட்டத்தில், பிற மாணவ – மாணவியருடன் நெருங்கிப் பழகாமலிருப்பது, உங்கள் எதிர்காலத்திற்கு நல்லது. ஏனெனில், உங்கள் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படக்கூடும் என்பதை கிரக நிலைகள் சுட்டிக்காட்டுகின்றன. எப்போதெல்லாம், நாம் எந்தெந்த விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென்பதை முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் சக்திவாய்ந்தது ஜோதிடக் கலை!!
விவசாயத் துறையினர்: விசுவாவசு வருட ஆரம்பத்திலிருந்து, சித்திரை 27-ம் (10-5-2025) வரையில், நல்ல விளைச்சலும், வருமானமும் கிடைக்கும். அடிப்படை வசதிகளுக்குக் குறைவிராது. அளவோடு மழை பெய்யும். விதை, உரம், கால்நடைகள் ஆகிய விவசாய வசதிகள் குறைவின்றிக் கிடைக்கும். சித்திரை 28-ம் (11-5-2025) தேதியிலிருந்து, வயல் பணிகளில் சோர்வும், அசதியும் ஏற்படும். ஆடு-மாடுகளின் பராமரிப்பில் பணம் விரயமாகும். அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்ப்பதில், பயனில்லை! சில தருணங்களில், புதிய கடன்களை ஏற்கவேண்டிய சூழ்நிலையை அஷ்டம ஸ்தானத்தில் உலவும், குரு பகவான் ஏற்படுத்துவார். புரட்டாசி 22-ம் (8-10-2025) தேதி குரு பகவான் உங்கள் ராசிக்கு, பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுவதால், வயல் பணிகளில், உற்சாகம் மேலிடும். எதிர்பார்க்கும் அளவைவிட, சற்று அதிகமாகவே விளைச்சல் கிடைக்கும்.
பெண்மணிகள்: சித்திரை 27-ம் (10-5-2025) தேதிவரை குரு பகவான் சப்தம ஸ்தானமாகிய ரிஷப ராசியில் சஞ்சரிப்பது, அனுகூலமான கிரக சஞ்சாரமாகும். திருமணமான பெண்மணிகளுக்கு, கணவரின் அன்பு, நெஞ்சை நெகிழ வைக்கும். நெருங்கிய உறவினர்களுடன், பரஸ்பர அன்பு மேலிடும். வேலையில்லாத பெண்மணிகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். விவாக ரத்து போன்ற பிரச்னைகளில் சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு, சமரசத்தின் மூலம் நிம்மதியும், மன நிறைவும் உண்டாகும்.
அறிவுரை: புத்தாண்டின் முதல் இரண்டு வாரங்கள் உடல் ஆேராக்கியத்தில் கவனமாக இருத்தல் நல்லது. ரயில் பயணங்களின்போது, எச்சரிக்கை அவசியம்.
பரிகாரம்: வியாழக்கிழமைகளில், ஏழைப் பெண் ஒருவருக்கு, புத்தாடைகள் கொடுப்பது மிகச் சிறந்த பரிகாரமாகும்.