(கிருத்திகை 2ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2ம் பாதம் வரை)
குடும்பம்: சென்ற சுமார் ஒரு வருடக் காலமாக, ஜென்ம ராசியில் அமர்ந்து, அதன் விளைவாக, பல குடும்பப் பிரச்னைகளைச் சந்தித்து வந்த உங்களுக்கு, குரு பகவானின் ரிஷப ராசி கால சஞ்சாரம், தக்க தருணத்தில் கிடைத்த வரப் பிரசாதம் என்றே சொல்ல வேண்டும். “ஜென்ம குரு, வனத்திலே….!” என்றொரு மூதுரை உண்டு. ÿராமபிரான், 14 ஆண்டுகள் வனவாசத்தை ஏற்றுக் கொண்டபோது, குரு பகவான் அவரது ஜென்ம ராசியில் சஞ்சரித்ததால், இத்தகைய மூதுைர ஏற்பட்டது. வன வாசம் என்று ஓர்அனுபவம் இல்லாவிடினும், அதற்குச் சமமான சிரமங்களை ஏற்படுத்துவார் குரு என்பது பொருள்!! குடும்பத்தில், எவ்வளவுதான் வருமானம் வந்தாலும், “எங்கே போயிற்று? எப்படிப் போயிற்று…?” என்று வியக்கும் வண்ணம் கைப்பணம் கரையும். உத்தியோகம் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ, கணவர் அல்லது மனைவி குடும்பத்திலிருந்து தற்காலிகமாகப் பிரிந்திருக்க நேரிடும். பிரச்னையுடன் உறங்கச் சென்று, பிரச்னையுடன் கண்விழிக்கும் காலகட்டம் இது! வரவை விட, செலவுகளே அதிகமாக இருக்கும், கருத்துவேற்றுமையினால், கணவர் – மனைவியரிடையே அந்நியோன்யம் குறையும். நெருங்கிய உறவினருடன் பகையுணர்ச்சி மேலிடும். திருமண முயற்சிகளில் தடங்கல் உண்டாகும். வரனை நிர்ணயிப்பதில், தவறுகள் ஏற்படக்கூடும். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக நீதி மன்றம் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.
உத்தியோகம்: ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானையும், ராகுவையும் குரு பகவான் பார்ப்பது, ஜோதிட விதிகளின்படி, மிகவும் அனுகூலமான கிரக நிலையாகும். குருவின் சுபப் பார்வைக்கு, அளவற்ற சக்தி உள்ளது. பணிச்சுமை அதிகமாக இருப்பினும், நிர்வாகத்தினரின் பாராட்டுதல்கள், பணிகளில் உற்சாகத்தையளிக்கும். பலருக்கு, பதவியுயர்வும் ஊதிய உயர்வும் கிட்டும். தற்காலிகப் பணியாளர்கள், நிரந்தரம் செய்யப்படுவார்கள். வெளிநாடு சென்று, சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருப்பின், இப்போது முயற்சிக்கலாம். புரட்டாசி மாதம் 22-ந் தேதி (8-10-2025) அன்று குரு பகவான் கடக ராசிக்கு மாறுகிறார். மீண்டும் மார்கழி 6-ந் தேதி (21-12-2025) மிதுன ராசிக்குத் திரும்பிவிடுகிறார்! குரு பகவானின் சஞ்சார நிலை இவ்வருட முடிவில், குறுகிய காலத்தில், மாறுதல் ஏற்பட்டாலும், அவரது பலன்களில் எவ்வித மாறுதலும் ஏற்படாது. காரணம், “அதிச்சார வக்கிர கதி” களினால், அவை பாதிக்கப்படுவதில்லை! அதிச்சார – வக்கிர கதிகளில், குருவுக்கு “பூர்வ ராசி பலன்” எனக் கூறுகிறது, ஜோதிடக் கலை!
தொழில், வியாபாரம்: குரு பகவானின் இந்த மாறுதல், உங்களுக்குச் சிறந்த யோக பலன்களை அளிக்கக்கூடிய மாறுதலாகும். ரிஷப ராசிக்கு, மிதுனம் – வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றைக் குறிக்கும் இடங்களாகும். மிதுனத்தில் அமர்ந்துள்ள குரு பகவான், தனது 9-ம் பார்வையாக கும்ப ராசியில் இணைந்துள்ள சனி பகவானையும், ராகுவையும் பார்ப்பது, ராஜயோகத்தைக் குறிக்கிறது என, “பூர்வ பாராசர்யம்” என்னும் புராதன ஜோதிட நூல் விவரிக்கிறது. சந்தையில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய விற்பனை நிலையங்களைத் திறப்பதற்கு ஏற்ற தருணம் இது. கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள்.
கலைத் துறையினர்: குரு பகவானின் மிதுன கால சஞ்சாரக் காலம், உங்களுக்குச் சிறந்த ேயாக காலம் என்றே கூறவேண்டும்! புது வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வருமானம் உயரும். மக்களிடையே புகழ் ஓங்கும். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பும், அதன் மூலம் நல்ல வருமானமும் கிடைப்பதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன. கர்நாடக சங்கீத வித்வான்கள், பரதநாட்டியக் கலைஞர்கள், ஆகியோர் புதிய வகுப்புகள் ஆரம்பிப்பதற்கு ஏற்ற தருணம் இது.
அரசியல் துறையினர்: மிதுன ராசியில் அமர்ந்து, பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்துள்ள சனி பகவான் மற்றும் ராகுவை, தன் சுபப் பார்வையினால் பலப்படுத்துவதால், மேல்மட்டத் தலைவர்கள் உங்கள் ஆதரவை நாடி வருவார்கள். கட்சியில் செல்வாக்கும், ஆதரவும் பெருகும். உங்கள் அரசியல் வாழ்க்கையில் பொன்னான தருணமிது என்பதை குரு பகவான் சுட்டிக்காட்டுகிறார்.
மாணவ – மாணவியர்: மிதுனம், கல்விக்கு அதிபதியான புதனின் ஆட்சிவீடாகும். அங்கு குரு அமர்ந்து, சுப பலத்துடன் திகழ்வதால், படிப்பில் ஆர்வம் மிகும். ஆசிரியர்களின் உதவி கிட்டும். உயர் கல்விக்கு நிதியுதவி தேடி வரும். உயர் கல்விக்கு உங்கள் விருப்பம் போல், இடம் கிடைக்கும். ஏற்கனவே, வெளிநாடுகளில் விசேஷ உயர் கல்வி பயின்றுவரும் மாணவ, மாணவியருக்கு, அவரவர்களின் “பிராஜெக்ட்”களை குறித்தி நேரத்தில் முடித்து, சமர்ப்பிக்க முடியும்.
விவசாயத் துறையினர்: குரு பகவானின் மிதுன ராசி சஞ்சார காலம், நல்ல விளைச்சலையும், வருமானத்தையும் பெற்றுத் தரக்கூடிய காலகட்டமாகும். வயலைப் பார்த்தாலே, உங்கள் மனம் குளிரும். அந்த அளவிற்கு பயிர்கள், செழித்து வளரும். பழைய கடன்களை அடைத்து, நிம்மதி பெற வழிவகுக்கும் ஆண்டு இது. சிலருக்கு, புதிய ஆடு – மாடுகள் வாங்கும் யோகமும் அமைந்துள்ளதை குரு பகவானின் சுபப் பார்வை எடுத்துக்காட்டுகிறது.
பெண்மணிகள்: பெண்மணிகளின் நலன்களுக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள கிரகங்கள் இரண்டு! ஒன்று குரு; மற்றொன்று, சுக்கிரன்!! இவர்களில் குரு பகவான் உங்களுக்கு ஆதரவாக இந்த ஆண்டு முழுவதும்்் சஞ்சரிப்பதால், மன நிம்மதியையும், மகிழ்ச்சியையும் அளிக்கக்கூடிய ஆண்டாகும், உங்களுக்கு! எண்ணங்கள் யாவும் நிறைவேறும். விவாகத்திற்குக் காத்துள்ள கன்னியருக்கு, நல்ல வரன் அமையும். வேலைக்கு முயற்சிக்கும் வனிதையருக்கு, நல்ல வேலை கிடைக்கும்.
அறிவுரை: குரு பகவான் கொடுப்பதை எதிர்காலத்திற்கென்று சிறிது சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.
பரிகாரம்: வியாழக்கிழமைகளில், உங்கள் வீட்டுப் பூஜை அறையில், மூன்று மண் அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றிவைத்து அவரை வணங்கிவந்தால் அளவற்ற நன்மைகள் கிடைக்கும்.