search-icon-img
featured-img

கும்பம்

Published :

15-5-2026 முதல் 14-6-2026 வரை

(அவிட்டம் 3ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3ம் பாதம் வரை)

குடும்பம்: ‘‘ஆறில் குரு உள்ள போது ஜீவ நதியும் வற்றும்...!” எனக் கூறுகிறது ‘‘காலப் பிரகாஸிகா” எனும் பிரசித்திப் பெற்ற பண்டைய ஜோதிட நூல்!! வருமானம் போதிய அளவிற்கு இருப்பினும், கைப் பணம் எங்கு போயிற்று...? எப்படிப் போயிற்று...?! என்று நீங்களே வியக்கும் வண்ணம் பணம் செலவழியும்!!கைப் பணத்தைத் திட்டமிட்டுச் சிக்கனமாகச் செலவு செய்தல் மிகவும் அவசியம் என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. பாரதத்தின் பிரசித்திப் பெற்ற மாமன்னன், நளச் சக்கரவர்த்தி நாடு இழந்து, மனைவி - மக்களைப் பிரிந்து, கானகத்தில் அலைந்து திரிந்தபோது அவரது ஜாதகத்தில், குரு பகவான், ராசிக்கு ஆறாம் இடத்தில், சஞ்சரித்ததை ஜோதிட நூல்கள் உதாரணமாக எடுத்துக்காட்டியுள்ளன.இத்தகைய கிரக நிலை ஏற்படும்போது, கடன் கொடுக்கவும் கூடாது. கடன் வாங்கவும் கூடாது எனக் கூறுகின்றன, புராதன ஜோதிடக் கிரந்தங்கள்.விவாக வயதில் பெண் அல்லது பிள்ைள இருப்பின், வரனை நிச்சயிப்பதில், கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். இத்தகைய கிரக நிலைகள் உருவாகும்போது, திருமண முயற்சிகளில் அதி-ஜாக்கிரதையாக இருக்கவேண்டியதன் அவசியத்தை புராதன ஜோதிட நூல்கள் வற்புறுத்திக் கூறியுள்ளன.ஒரு மனிதன் எத்தகைய சிறந்த அறிவாளியாக இருந்தாலும், கிரகங்களின் சக்திகளுக்கு உட்பட்டே வாழ்ந்தாக வேண்டும் என்பதை மாமன்னர் நளச்சக்கரவர்த்தியின் சரித்திரம் எடுத்துக்காட்டுகிறது.தற்போது, கிரக நிலைகள் ஓரளவே அனுகூலமாக மாறியிருப்பதால், முக்கிய முடிவுகள் அனைத்தையும் தீர சிந்தித்து, முடிவெடுப்பது மிகவும் அவசியம்.

உத்தியோகம்: அன்றாடப் பொறுப்புகளில் கவனமாக இருத்தல், மேலும் சிறிது காலத்திற்கு அவசியம் என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.மேலதிகாரிகளுடன், எக்காரணத்தைக் கொண்டும் வாக்குவாதம் கூடாது! தற்காலிகப் பணியாளர்கள், தங்கள் அன்றாடப் பொறுப்புகளில் கவனமாக இருத்தல் நல்லது. சிறு தவறும், பெரும் பிரச்னையில் கொண்டுவிடக்கூடும்.வெளிநாடுகளில் பணிபுரிய ஆர்வமுள்ள கும்ப ராசி அன்பர்கள், கூடியவரையில், இடைத்தரகர்களின் தொடர்பைத் தவிர்த்தல் நல்லது. இல்லாவிடில், பின்பு வருந்துவதால் பயனேதுமிராது.

தொழில், வியாபாரம்: சந்தை நிலவரத்தை முன்கூட்டியே தெரிந்து, அறிந்து அதற்கேற்றபடி உங்கள் சரக்குகளின் விலையை முன்கூட்டியே நிர்ணயிப்பது நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்க்க உதவும்.சகக் - கூட்டாளிகளின் ஒத்துழைப்பை எதிர்பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சும். முன்பணம் இல்லாமல் சரக்குகளை அனுப்புவதைக் கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும்.இல்லாவிடில், பிறகு வருந்த நேரிடும். குறிப்பாக, ஏற்றுமதி - இறக்குமதித் துறையினர், பண விஷயத்தில் கண்டிப்பாக இருத்தல் அவசியம்.புதிய விற்பனை நிலையங்கள் திறப்பதை சற்று ஒத்திப்போடுதல் உங்கள் எதிர்காலத்திற்கு நன்மை செய்யும்.

கலைத் துறையினர்: கைப் பணத்தை எண்ணி, எண்ணிச் செலவிட வேண்டியதன் அவசியத்தை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. ஏனெனில், வாய்ப்புகளும் வருமானமும் அளவோடுதான் இருக்கும் இம்மாதத்தில் என கிரக நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன. இருக்கும்போது வாரி இறைத்துவிட்டுப் பின்பு வருந்த வேண்டாமல்லவா....?!

அரசியல் துறையினர்: அரசியல் துறைக்கு நேரிடையான பாதிப்பை அளிக்கக்கூடியவர் சுக்கிரனாவார்!அவர் இம்மாதம் முழுவதும், ஓரளவே உங்களுக்கு ஆதரவாக வலம் வருகிறார். உயர்மட்டத் தலைவர்களுடன், பழகுவதில் அளவோடும், கவனமாகவும் இருத்தல் நல்லது. இல்லாவிடில், தேவையற்ற பிரச்னைகளில் சிக்கிக் கொள்ள நேரிடும். என கிரக நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன.!

மாணவ - மாணவியர்: ‘‘வித்யா காரகரான” புதன், ஓரளவு அனுகூலமாக சஞ்சரிப்பதால், பாடங்களில் மனம் ஆர்வத்துடன் ஈடுபடும். நினைவாற்றலும், கிரகிப்புத் திறனும் அதிகரிக்கும். வெளிநாடு சென்று, விசேஷ உயர் கல்வி பெற ஆர்வமிருப்பின், முயற்சிக்கலாம். வெற்றி கிட்டும்.

விவசாயத் துறையினர்: விவசாயத் துறையின் வெற்றிக்கு மூல காரணம், செவ்வாய் மற்றும் சூரியன் இரு கிரகங்களின் சஞ்சார நிலையே ஆகும். இவ்விரு கிரகங்களும் உங்களுக்குப் பரிபூரண சாதகமாக சஞ்சரிப்பதால், நல்ல விளைச்சல் கிடைக்கும்.அடிப்படை வசதிகளான, தண்ணீர், உரம், விதைகள், நாற்றுகள் மற்றும் கால்நடைகள் தங்குதடையின்றிக் கிடைக்கும். சற்று எச்சரிக்கையுடன் செலவு செய்தால், பழைய கடன்களிலிருந்தும் விடுபடலாம்.

பெண்மணிகள்: பெண்மணிகளின் நலன்களுக்குப் பொறுப்பேற்றுள்ள சுக்கிரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் பெண்மணிகளுக்கு ஆதரவாக வலம் வருகின்றனர். குரு பகவானும் ஓரளவிற்கு உதவிக்கரம் நீட்டுகிறார். ஆதலால், பெண்மணிகளுக்கு பல நன்மைகள் இம்மாதம் காத்துள்ளன. இதனை அனுபவத்தில் பார்க்கலாம்.

அறிவுரை: ‘‘காற்றுள்ளபோது, தூற்றிக்கொள்...!” என்பது ஆன்றோர் வாக்கு!! இம்மாதத்தில் நிகழும் கிரக நிலைகளினால், பல நன்மைகள் உங்களுக்கு ஏற்படவுள்ளன. பயன்படுத்திக் கொள்வது உங்கள் திறனில்தான் உள்ளது.

பரிகாரம்: வியாழக்கிழமைகள் தோறும் ஏழை ஒருவருக்கு, அன்னமளித்தால் மகத்தான புண்ணிய பலன்களைப் பெறலாம்.

அனுகூல தினங்கள்

வைகாசி : 1, 4-6, 12-14, 17-20, 24, 25, 28-30.

சந்திராஷ்டம தினங்கள்

வைகாசி : 9 காலை முதல், 11 பிற்பகல் வரை.