15-5-2026 முதல் 14-6-2026 வரை
(புனர்பூசம் 4ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் வரை)
குடும்பம்: பாக்கிய ஸ்தானத்தில் சனி பகவானும், ஜீவன ஸ்தானத்தில் சனிபகவானும், லாப ஸ்தானத்தில், சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் சேர்க்கையும் ஏற்பட்டுள்ளது, வருமான உயர்வை எடுத்துக்காட்டுகிறது. சேமிப்பிற்கு ஏற்ற மாதம் இதுவே! திட்டமிட்டு செலவு செய்தால், சேமிப்பிற்குச் சாத்தியக்கூறு உள்ளது. சுபச் செலவுகள் இருப்பினும், பணத் தட்டுப்பாடு ஏற்பட சாத்தியக்கூறு இல்லை. குடும்பத்தில், திருமண வயதில் பெண் அல்லது பிள்ளை இருப்பின், நல்ல வரன் அமையும். புதிய வேலைக்கு முயற்சித்துவரும் அன்பர்களுக்கு, நல்ல வேலை கிட்டும். கணவர், மனைவியரிடையே பரஸ்பர அந்நியோன்யம் ஓங்கும். அந்நிய நாட்டுப் பணிக்கு முயற்சிக்கும் கடக ராசி அன்பர்களுக்கு, வெற்றி கிட்டும். அதன் காரணமாக, குடும்பத்திலிருந்து பிரிந்திருக்க நேரிடும். சிறு, சிறு உடல் உபாதைகள் காரணமாக, மருத்துவரிடம் சென்று, எளிய சிகிச்சை மேற்கொள்ள நேரிடும்.
உத்தியோகம்: அஷ்டம ராசியில் ராகு சஞ்சரிப்பதாலும், பாக்கிய ஸ்தானத்தில் ஜீவன காரகரான சனி பகவானும் அமர்ந்திருப்பதாலும், அலுவலகப் பொறுப்புகள் சக்திக்கு மீறியதாகவே இருக்கும். பணிகளில், கவனம் வேண்டும். ஒருசிலருக்கு, இடமாற்றம் அல்லது இலாகா மாற்றம் ஏற்படக்கூடும். வெளிநாட்டுப் பணிக்கு முயற்சிக்கும் அன்பர்களுக்கு, இடைத் தரகர்களால் பண இழப்பு ஏற்படும். வெளிநாடுகளில் வேலைக்கு முயற்சித்துவரும் கடக ராசியினர் பிறரிடம் பணம் கொடுத்து ஏமாந்துவிடக்கூடாது.
தொழில், வியாபாரம்: சந்தை நிலவரம் இம்மாதம் முழுவதும் அனுகூலமாக இல்லை! உங்கள் சரக்குகளின் விலையை நிர்ணயிப்பதில், சந்தை நிலவரத்தைப் பற்றி முன்கூட்டியே அறிந்து, அதற்கேற்றபடி விலைகளை நிர்ணயிப்பது அவசியம். இல்லாவிடில், நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும் என கிரக நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன. புதிய முயற்சிகளில் தற்போதைக்கு இறங்காமலிருப்பது விவேகமாகும் என கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
கலைத் துறையினர்: வருமானத்திற்குள் உங்கள் செலவுகளைச் சமாளிப்பது நல்லது. ஏனெனில், புதிய வாய்ப்புகள் குறையக்கூடும். கிடைக்கும் வாய்ப்புகளிலும் வருமானம் மட்டும் சுமாராகவேதான் இருக்கும் என கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன. எதிர்பார்த்திருந்த வெளிநாட்டு வாய்ப்புகள் கைநழுவிப் போகும். திரைப்படத் தயாரிப்பாளர்கள், புதிய தயாரிப்புகளில் ஈடுபடாமலிருப்பது அவர்கள் எதிர்காலத்திற்கு நல்லது. ஏனெனில், கிரக நிலைகள் அனுகூலமாக இல்லை. நடிகை மற்றும் நடிகர்கள் கைப் பணத்திற்கு ஏற்றபடி சிக்கனமாக செலவு செய்தல் எதிர்காலத்திற்கு நல்லது. ஆடம்பரச் செலவு களைக் கண்டிப்பாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். பின்பு தங்களைத் தாங்களே நொந்து கொள்வதில் எவ்விதப் பயனுமில்லை!
அரசியல் துறையினர்: சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஆகிய இரு கிரகங்களும், சுப பலம் பெற்று சஞ்சரிக்கவில்லை! கட்சியின் எதிர்காலம் பற்றிய உங்கள் கணிப்புகள் அனைத்தும் தவறாகும். நீங்களே விலகியிருந்தாலும் கூட, உட்கட்சிப் பூசல்களில் உங்கள் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும். உயர்மட்டத் தலைவர்களின் ஆதரவை எதிர்பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சும்.
மாணவ - மாணவியர்: கல்வித் துறைக்கு ஆதிக்கம் பெற்றுள்ள கிரகங்கள் சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும். ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் தக்க தருணத்தில் கிடைக்கும். உயர் கல்விக்குச் செல்வந்தர்களின் பண உதவி கிடைக்கும் என்பதை கிரக நிலைகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.
விவசாயத் துறையினர்: விவசாயத் துறையை, தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள சூரியன் மற்றும் செவ்வாய், சனி ஆகிய மூவரும் ஓரளவு அனுகூலமாக சஞ்சரிப்பதால், உழைப்பிற்கேற்ற விளைச்சலும், பலனும், லாபமும் கிடைக்கும். இருப்பினும், வயல் பணிகள் சற்று கடினமானதாகவே இருக்கும். கால்நடைகளின் பராமரிப்பில், செலவுகள் அதிகரிக்கும். இயற்கையும் ஒத்துழைக்க மறுக்கும். விவசாயத்திற்குத் தேவையான இடுபொருட்களாகிய உரம், விதைகள், நாற்றுகள் கிடைப்பதில் எவ்விதத் தடங்கல்களும் ஏற்படாது. ஆயினும், தண்ணீர்ப் பற்றாக்குறை கவலையை அளிக்கும்.
பெண்மணிகள்: உடல் நலனில் கவனமாக இருத்தல் வேண்டும் என கிரக நிலைகள் உங்களுக்கு அறிவுறுத்துகின்றன. அதிக உழைப்பினாலும், அஜாக்கிரதையினாலும், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. ஆதலால், எச்சரிக்கையுடன் இருப்பதும், நிதானத்துடன் நடந்துகொள்வதும் அவசியம். சிறு, சிறு விபத்துகள் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளது.
அறிவுரை: செயல்களில் நிதானம் அவசியம். கூடியவரையில், கடும் வெயிலில் வெளிச் செல்வதைத் தவிர்க்கவும்.
பரிகாரம்: சனிக்கிழமைதோறும், மாலையில் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் தீபத்தில் சிறிதளவு எள் எண்ணெய் சேர்த்துவந்தால் போதும்.
அனுகூல தினங்கள்
வைகாசி : 3-6, 11-13, 17-21, 26-28.
சந்திராஷ்டம தினங்கள்
வைகாசி : 23 காலை முதல், 25 இரவு வரை.


