search-icon-img
featured-img

மிதுனம்

Published :

15-5-2026 முதல் 14-6-2026 வரை

(மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் வரை)

குடும்பம்: இம்மாதத்தில் கவலையளிப்பது, ஜென்ம ராசியில் வலம் வரும், குரு பகவான்தான்! ‘‘ஜென்ம குரு வனத்திலே..!” என்றொரு மூதுரையும் உண்டு!! அதாவது, ஸ்ரீ ராமபிரான் அவரது ஜாதகத்தில், குரு பகவான் ஜென்ம ராசியில் வலம் வந்தபோதுதான், தனது தேவி சீதையுடனும், தம்பி லட்சுமணனுடனும் கானகம் செல்ல நேர்ந்தது. அதாவது, பெரும்பான்மையான ஜாதகங்களில் குரு பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும்போது, குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க நேரிடும் என்பதே இதன் பொருள். ஆயினும், ஜனன ஜாதகத்தில், குரு பகவான் ஜென்ம ராசியில் வலம் வரும்போது, அத்தகைய துன்பத்தை அனுபவித்துதான் தீர வேண்டும் என்ற நியதி ஏதும் கிடையாது. பிற கிரகங்களின் சஞ்சார நிலைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டேதான் பலனைக் கூறல் வேண்டும் எனக் கூறுகிறது, ‘‘பிருஹத் ஸம்ஹிதை” என்ற மிகப் புராதனமான ஜோதிட நூல். இருப்பினும், குரு பகவானின் ஜென்ம ராசி சஞ்சாரக் காலம், குடும்பத்தில் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதே உண்மையாகும்! ஆதலால், பரிகாரம் செய்து கொள்வதும், அவசியமாகிறது. திருமண முயற்சிகளில், வரனைத் தீர்மானிப்பதில் தவறுகள் ஏற்படக்கூடும். அதாவது, எப்பொழுதெல்லாம், குரு பகவான், ஜென்ம ராசியில் சஞ்சரிக்கின்றாரோ அத்தகைய தருணங்களிலெல்லாம் நம் மனதில் குழப்பங்கள் ஏற்படக்கூடும் என்றே ‘‘பிருஹத் ஜாதகம்” கூறுகிறது. தற்போது, ஜென்ம ராசியில், குரு பகவான் வலம் வருவதால், எத்தகைய தீர்மானத்தையும் ஆழ்ந்து சிந்தித்து, எடுக்க வேண்டும் என்பதே இதன் கருத்தாகும்.

உத்தியோகம்: ஜென்ம ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கும் நிலையில், ஜீவன ஸ்தானத்தில், சனி பகவான் வலம் வருவதை நினைவில் கொள்ள வேண்டும். அலுவலகத்தில் பணிச் சுமை சக்திக்கு மீறியதாகவே இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு குறையக்கூடும். உங்களையும் அறியாமலேயே அன்றாடப் பணிகளில் தவறுகள் ஏற்படக்கூடும். நிறுவனத்தைப் பற்றியும், உயரதிகாரிகளைப் பற்றியும் சக ஊழியர்களுடன் விமர்சிக்கக்கூடாது. ‘‘நீங்களுண்டு... உங்கள் பணிகள் உண்டு” என்று தேவையற்ற விஷயங்களிலிருந்து, விலகியிருப்பது உங்கள் எதிர்காலத்திற்கு நலன் பயக்கும். அந்நிய நாடுகளில், வேலைக்கு முயற்சித்துவரும் அன்பர்கள், இடைத்தரகர்களை நம்பி ஏமாந்துவிடாதிருக்க வேண்டும்.

தொழில், வியாபாரம்: புதிய முதலீடுகளையும், முயற்சிகளையும் தற்போது தவிர்ப்பது அவசியமாகும் என கிரக நிலைகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. சகக் கூட்டாளிகளுடன் கருத்துவேற்றுமையும், போட்டி மனப்பான்மையும் ஏற்படக்கூடும். அதன் காரணமாக, மன அமைதி குறையும்.

கலைத் துறையினர்: போட்டியும், பொறாமையும் அதிகரிக்கும் என கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. அதற்கேற்றாற்போல், வருமானமும் வாய்ப்புகளும் பாதிக்கப்படும். பணப் பிரச்னை தலைதூக்கும். அதன் காரணமாக, குடும்பத்தில் மன அமைதி குறையும். புதிய வாய்ப்புகளுக்காக, அதிகமாக பாடுபட வேண்டியிருக்கும். உங்கள் மனவுறுதிக்கு சவாலாக அமைந்துள்ளது, இம்மாதம்!!

அரசியல் துறையினர்: அரசியல் துறைக்குச் சம்பந்தப்பட்ட கிரகங்கள் சுப பலம் பெற்றிருக்கவில்லை! உயர்மட்டத் தலைவர்கள் உங்களைப் புறக்கணிக்கக்கூடும். எந்நிலையிலும், மனவுறுதியை மட்டும் இழந்து விடாதீர்கள்!!

மாணவ - மாணவியர்: நவக்கிரகங்களில், கல்வித் துறையை தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள கிரகம், புதனாவார் எனக் கூறுகிறது, புராதன ஜோதிட நூல்கள். ஆதலால்தான், புதனுக்கு, ‘‘வித்யாகாரகர்” அதாவது, ‘‘கல்விக் கிரகம்” என கௌரவிக்கிறது, ஜோதிடக் கலை. அத்தகைய பெருமை வாய்ந்த புதன், இம்மாதம் முழுவதும் உங்களுக்கு ஆதரவாக வலம் வருவதால், படிப்பில் நல்ல முன்னேற்றமுண்டு. ஆசிரியர்களின் ஆதரவு, படிப்பில் உற்சாகத்தை உண்டுபண்ணும். நினைவாற்றல் மேம்படும். பிரத்யேக உயர் கல்வி பெற வௌிநாடு செல்ல ஆர்வமிருப்பின், இப்போது முயற்சிக்கலாம். தேவையான அனைத்து உதவிகளும் எளிதில் கிட்டும்.

விவசாயத் துறையினர்: விவசாயத் துறையைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள கிரகம் செவ்வாயாவார். ஆதலால்தான், அவருக்கு, ‘‘பூமி காரகர்” என்ற பெருமையும் உள்ளது. அவர் தற்போது, மிகவும் அனுகூலமாக சஞ்சரிப்பதால், பாடுபடும் அளவிற்கு விளைச்சலும், வருமானமும் கிடைக்கும். அளவோடு புதிய கால்நடைகள் வாங்கும் யோகம் உள்ளதையும் கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. சற்று ஜாக்கிரதையாகவும், கட்டுப்பாட்டுடனும் செலவு செய்தால், பழைய கடன்கள் அனைத்தையும் அடைத்து, நிம்மதி பெற சாத்தியக்கூறு உள்ளது.

பெண்மணிகள்: நவகிரகங்களில், பெண் மணிகளின் பெரும்பான்மையான நன்மை களைக் கட்டுப்படுத்துவது, சுக்கிரனும், செவ்வாயும்தான் எனக் கூறுகிறது, ‘‘காலப்பிரகாஸிகா” எனும் புகழ்பெற்ற ஜோதிட நூல். அவ்விருவரும், சுப பலத்துடன் சஞ்சரிப்பதால், பெண் மணிகளின் ஆவல் அனைத்தும் இம்மாதத்தில் நிறைவேறுவது திண்ணம். திருமண வயதில் உள்ள கன்னியருக்கு, மனத்திற்கு உற்சாகத்தையளிக்கும் வரன் அமையும்.

அறிவுரை: இம்மாதம் முழுவதும், முக்கிய கிரகங்கள் அனைத்தும் உங்களுக்கு அனுகூலமான நிலைகளில் சஞ்சரிப்பதால், உங்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும்.

பரிகாரம்: சனிக்கிழமைகள் தோறும், மாலையில், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் தீபத்தில் சிறிதளவு பசு நெய் அல்லது, நல்லெண்ணெய் சேர்த்து வந்தால் போதும். ஒவ்வொரு துளிக்கும் அளவற்ற பரிகார சக்தி உள்ளதை அனுபவத்தில் காண்பீர்கள்.

அனுகூல தினங்கள்

வைகாசி : 1, 2, 6-8, 14-16, 18-20, 24-26, 30, 31.

சந்திராஷ்டம தினங்கள்

வைகாசி : 21 காலை முதல், 23 காலை வரை.