15-6-2026 முதல் 16-7-2026 வரை
(மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை)
குடும்பம்: ஜென்ம ராசியில் கேதுவும், களத்திர ஸ்தானத்தில் ராகுவும், அஷ்டம (8-ம் இடம்) ஸ்தானத்தில், சனி பகவானும், அமர்ந்திருப்பதால், கணவர் - மனைவி இருவர் உடல் ஆரோக்கியத்திலும் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். கூடியவரையில், வெளியில் அலைவதையும், வெளியூர்ப் பயணங்களையும் தவிர்த்தல் நல்லது. பண விஷயங்களில், கண்டிப்புடன் இருப்பது உங்கள் எதிர்காலத்திற்கு நன்மை செய்யும். இத்தகைய கிரக நிலைகளின்போது, கடன் கொடுப்பதையும், கடன் வாங்குவதையும் தவிர்த்தல் அவசியம்.தரக் குறைவான உணவகங்களில் உண்ணாமலிருப்பது, உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ள உதவும். திருமணம் சம்பந்தமான முயற்சிகளில், அவசர முடிவுகள் வேண்டாம். தவறான வரனை நிச்சயித்துவிட வாய்ப்புகள் இருப்பதை கிரக நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன.
உத்தியோகம்: அன்றாடப் பணிகளிலும், பொறுப்புகளிலும் அதிகக் கவனம் வேண்டும் என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. மேலதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம். சக ஊழியர்களுக்கு கடன் கொடுப்பதையும், அவர்களிடம் கடன் வாங்குவதையும் தவிர்த்தல் அவசியம். இல்லாவிடில், கசப்பான அனுபவத்தில் கொண்டுவிடக்கூடும். புதிய வேலைக்கு முயற்சித்துவரும் சிம்ம ராசி அன்பர்கள், இடைத் தரகர்களை நம்பிவிட வேண்டாம் என கிரக நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன.
தொழில், வியாபாரம்: வர்த்தகத் துறையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள கிரகங்கள் ஓரளவே அனுகூலமாக உள்ளதால், முன்-பணமில்லாமல், கடனுக்கு சரக்குகளை அனுப்புவதைத் தவிர்த்தல் வேண்டும். சந்தை நிலவரம் அடிக்கடி மாறுதல்களுக்கு உள்ளாகும் என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுவதால், பண விஷயங்களில் கண்டிப்பாக இருத்தல் அவசியம் என்பதை கிரக நிலைகள் வற்புறுத்துகின்றன. நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு குறையக்கூடும். ஆதலால்தான், முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டியதன் அவசியத்தை வற்புறுத்துகிறோம்!
கலைத் துறையினர்: சுக்கிரன் மட்டும்தான் உங்களுக்கு ஓரளவு சாதகமாக வலம் வருவதால், வாய்ப்புகள் குறையக்கூடும். கைப் பணத்தை எண்ணி, எண்ணிச் செலவு செய்திடல் வேண்டும். இல்லாவிடில் பணப் பற்றாக்குறையைச் சமாளிக்க வேண்டிவரும். எத்தருணங்களில், நாம் எந்தெந்த விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே நமக்கு எச்சரிக்கை செய்து, நம்மைக் காப்பதில் ஜோதிடத்திற்கு இணையான கலை வேறெதுவும் கிடையாது! "நிச்சயமாகக் கிடைக்கும்...!" -என உறுதியாக எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள், காரணமில்லாமல் கிடைக்காமல் போவதற்கு சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. ஆதலால்தான், முன்னெச்சரிக்கை வேண்டும் என்பதை வற்புறுத்துகிறோம்.
அரசியல் துறையினர்: அரசியல் துறைக்கு சம்பந்தப்பட்ட கிரகங்கள் அனைத்தும், சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், அரசியல் பிரமுகர்களுக்கு, அதிர்ஷ்டகரமான காலகட்டமிதுவே!மேல்மட்டத் தலைவர்களின் பரிபூரண ஆதரவு, உங்களுக்குத் துணை நிற்கும். கட்சித் தொண்டர்களின் ஆதரவும் உற்சாகத்தை அளிக்கும்.
மாணவ - மாணவியர்: கல்வித் துறையை தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள புதன் மட்டுமின்றி, இத்துறைக்கு சம்பந்தப்பட்ட இதர கிரகங்களும், சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும். கிரகிப்புத் திறனும், நினைவாற்றலும் அதிகரிக்கும்.ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் ஆகியோரின் வழிகாட்டுதல்களும், உதவியும் படிப்பில் உற்சாகத்தை ஏற்படுத்தும். பலருக்கு, கல்வி உதவித் தொகை ("ஸ்காலர்ஷிப்") கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. முயற்சிக்கவும். பலன் கிட்டும். தசா, புக்திகள் அனுகூலமாக இருப்பின், வெளிநாடு சென்று, விசேஷ உயர் கல்வி கற்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. கிரக நிலைகளின்படி, இது ஓர் அரிய சந்தர்ப்பம். நழுவ விட்டுவிடாதீர்கள்!
விவசாயத் துறையினர்: விவசாயத் துறையின் பெரும் பகுதியை, தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளது, பூமி காரகரான செவ்வாயாகும். வீரியம் நிறைந்த அந்தச் செவ்வாய், உங்களுக்குச் சாதகமாக, இம்மாதம் முழுவதும் சஞ்சரிப்பதால், நல்ல விளைச்சலும், வருமானமும் கிடைக்கும்.தண்ணீர் மற்றும் உரம், விதைகள் போன்ற அடிப்படை வசதிகளுக்குக் குறைவிராது. அரசாங்கக் கொள்கைகளும், உங்களுக்குச் சாதகமாக இருக்கும்.நிதி நிறுவனங்களின் உதவி, பிரச்னையின்றி கிடைக்கும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெற, கிரக நிலைகள் அனுகூலமாக உள்ளன.
பெண்மணிகள்: பெண்மணிகளின் நலன்களைப் பாதுகாப்பதில், சுக்கிரனுக்கு அதிக பங்குண்டு! அந்தச் சுக்கிரன், இப்போது பூரண சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், பெண்மணிகள் பல நன்மைகளை இம்மாதத்தில் எதிர்பார்க்கலாம். மணமான பெண்மணிகளுக்கு, இல்லற வாழ்க்கை இனிக்கும். மணமாலைக்குக் காத்துள்ள கன்னியருக்கு, நல்ல வரன் அமையும்.
வேலைக்கு முயற்சித்துவரும் வனிதையருக்கு, மனதிற்கு மகிழ்வையும், மன நிறைவையும் அளிக்கும் நிறுவனத்தில் நல்ல வேலை கிடைக்கும்
அறிவுரை: "முயற்சி திருவினையாக்கும்" என்பது மூத்தோர் அறிவுரையாகும். இதை நினைவில் கொண்டால், தவறாமல் வெற்றிகிட்டும்.
பரிகாரம்: சனிக்கிழமைதோறும் பசுவிற்கு உணவளித்தால் நல்ல பலன் கிட்டும். அனுபவத்தில் காணலாம்.
அனுகூல தினங்கள்
ஆனி : 3-5, 11-13, 18-21, 25-28, 32.
சந்திராஷ்டம தினங்கள்
ஆனி: 22 முதல் 24 பிற்பகல் வரை.


