18-8-2026 முதல் 17-9-2026 வரை
(சித்திரை 3ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ம் பாதம் வரை)
குடும்பம்: பூர்வ புண்ணிய, புத்திர ஸ்தானத்தில், ராகு நிலைகொண்டுள்ள நிலையில், ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில், வக்கிர கதியில் சனி சஞ்சரிக்கிறார், பாக்கிய ஸ்தானத்தில், செவ்வாயும், ஜீவன ஸ்தானத்தில் குரு - புதன் சேர்க்கை ஏற்பட்டுள்ளது.லாப ஸ்தானத்தில் சூரியன் - கேதுவுடன் இணைந்து சஞ்சரிக்கின்றார். வருமானம் திருப்திகரமாக உள்ளது.திட்்டமிட்டுச் செலவு செய்தால், சிறிதளவு சேமிப்பிற்கும் வாய்ப்புள்ளது. குடும்பத்தில், சுபநிகழ்ச்சிகளும், சுபச்செலவுகளாகிய, நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு, மகப்பேறு போன்ற சுபநிகழ்ச்சிகள் ஏற்படும். அதனால் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கும் குறைவிராது. சனி பகவான், வக்கிர கதியில் மீன ராசியில் சஞ்சரிப்பதால், கணவர் - மனைவியரிடையே சிறு, சிறு வாக்குவாதங்கள் ஏற்படும். இதனையே வள்ளுவப் பெருந்தகையும், கணவர் - மனைவியருக்கிடையே உண்டாகும் ஊடலை நாம் அருந்தும் உணவின் உப்பின் அளவைக் கொண்டு ஒப்பீடு செய்து, நமக்கு அறிவுறுத்துகிறார்,"உப்பு அமைந்தற்றால் புலவி, அது சிறிது மிக்கற்றால், நீளவிடல்"அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்பதையே வள்ளுவர் இங்கு சுட்டிக்காட்டுகிறார். ஆகவே, வாக்குவாதம் இருப்பினும், கணவர் - மனைவியரிடையே ஒற்றுமை நிலவும்.
உத்தியோகம்: ஜீவன ஸ்தானத்தில் குருபகவான் - புதனுடன் இணைந்து சஞ்சரிப்பதால், மேலதிகாரிகளுடன் கருத்துவேற்றுமை ஏற்படக்கூடும். பணிச் சுமை அதிகமாக இருக்கும். சக-ஊழியர்களுடன் சற்று அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. சக-ஊழியர்களுடன் மேலதிகாரிகளைப் பற்றியோ அல்லது அலுவலகத்தைப் பற்றியோ விவாதிக்க வேண்டாம். இது பிரச்னைகளை அதிகரிக்கா வண்ணம் உங்களைக் காத்தருளும்.சிலருக்கு, இடமாற்றமும் ஏற்படக்கூடும். இதனை ஒத்துக்கொள்வது உங்கள் எதிர்கால நலனிற்கு அதிக நன்மையை அளிக்கும். அனைவருடனும் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள்.
தொழில், வியாபாரம்: சந்தையில் உழைப்பு கடினமாக இருக்கும். இருப்பினும், வியாபாரத்தில் லாபம் மகிழ்ச்சியை அளிக்கும். போட்டிகள் அதிகமாக இருக்கும். உங்கள் சரக்குகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். அதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.
கலைத் துறையினர்: கலைத் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள சுக்கிரன் உங்களுக்கு அனுகூலமாக சஞ்சரிப்பதால், புதிய வாய்ப்புகள் உற்சாகத்தை அளிக்கும். வருமானம் உயரும்.மக்களிடையே நல்ல வரவேற்பும், செல்வாக்கும் மனத்திற்கு உற்சாகத்தையளிக்கும்.தசா, புக்திகள் அனுகூலமாக இருப்பின் வெளிநாடு சென்று, அங்கு கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பும் உண்டாகும். அதன் மூலம் வருமானம் மட்டுமல்லாது பிராபல்யமும் வருங்கால புதிய படத்திற்கான ஒப்பந்தங்களும் உண்டாக வழிவகை செய்யும்.
அரசியல் துறையினர்: அரசியல் துறையைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள கிரகம் சுக்கிரனாவார். அந்தச் சுக்கிரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால், மக்களிடையே நல்ல செல்வாக்கு அதிகரிக்கும்.மேல்மட்டத் தலைவர்களின் அதரவு மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அளிக்கும். ஒரு சிலர் அரசியல் சம்பந்தமான விவாதத்திற்காக புது தில்லி சென்று வரும் நிலையையும் கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.மக்களிடையே செல்வாக்கு உயரும். ஒரு சிலருக்கு, கட்சிகளிடமிருந்து அழைப்பு வரும் அது மிகப்பெரும் "உபசரிப்பாக" இருக்கும். வாய்ப்பைத் தவறவிட்டு விடாமல், யோசித்து முடிவெடுப்பது உங்கள் அரசியல் எதிர்காலத்திற்கு நலன் பயக்கும்.
மாணவ - மாணவியர்: "உச்ச குருவுடன்", புதன் சேர்ந்திருப்பதால், மாணவ - மாணவியருக்கு அதிர்ஷ்டகரமான மாதம் இது.உயர்கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளிநாடு சென்று, விசேஷ உயர் கல்வி பயில விருப்பமுள்ள மாணவர்களுக்கு, அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் இறங்கலாம். வெற்றி உங்கள் பக்கம்தான்! காரணம், அதற்கான உதவிகள் உங்களைத் தேடி வரும். நிதியுதவிகளும் எளிதில் கிட்டும்.
விவசாயத் துறையினர்: விவசாயத் துறையைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது, செவ்வாய் மற்றும் சூரியனாவர். செவ்வாய் அனுகூலமாக சஞ்சரிப்பதால், நல்ல விளைச்சலும், விவசாயத்திற்கு அவசியமான இடு பொருட்களாகிய தண்ணீர், உரம், விதைகள், நாற்றுகள் ஆகியவை தங்கு தடையின்றிக் கிடைக்கும். காலா காலத்தில் மழை (அதிகளவில் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல்) பெய்து முழுபலனையும் கொடுக்கும். நவீன விவசாய வசதிகள் கிட்டும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெறலாம் இந்த மாதத்தில்!
பெண்மணிகள்: பெண்மணிகளின் நலன்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ளவர், சுக்கிரனாவார். அந்தச் சுக்கிரன், அனுகூலமாக சஞ்சரிப்பதால், பெண்களுக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கும் மாதம் இதுவே! திருமணத்திற்குக் காத்திருக்கும் பெண்மணிகளுக்கு நல்ல வரன் அமையும். புதிய வேலைக்கு முயற்சிக்கும் வனிதையருக்கு, நல்ல நிறுவனத்தில், மனத்திற்குப் பிடித்தமான இடத்தில் பணி உத்தரவு கிடைக்கும்.பொருளாதாரநிலையில் நல்ல முன்னேற்றத்தையளிக்கக்கூடிய மாதமாகும் இம்மாதம்.
அறிவுரை: கிரகநிலைகளின்படி, இம்மாதம் முழுவதும் பல அரிய வாய்ப்புகளை உங்களுக்கு உள்ளது, பயன்படுத்திக் கொள்வது உங்கள் திறனில் மட்டுமே உள்ளது.
பரிகாரம்: ராகுவிற்கும் சனி பகவானுக்கும் பரிகாரம் செய்வது பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிர்க்க உதவிடும். எளிய, சக்தி வாய்ந்த பரிகாரம், அருகிலுள்ள ஆலயம் ஒன்றில் எள் எண்ணெய் தீபம் ஏற்றி வருவதாகும்.
அனுகூல தினங்கள்
ஆவணி : 1, 5-7, 11-16, 20-23, 28, 29.
சந்திராஷ்டம தினங்கள்
ஆவணி : 17 காலை முதல் 19 காலை வரை.


