18-8-2026 முதல் 17-9-2026 வரை
(பூரட்டாதி 4ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி வரை)
குடும்பம்: ஜென்ம ராசியில் சனி பகவான் வக்கிர கதியில் சஞ்சரிக்கும் தருணத்தில், அர்த்தாஷ்டகத்தில்,(நான்காம் இடத்தில்)உஷ்ணகிரகமாகிய செவ்வாயும் சஞ்சரிக்கிறார். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம்.குறிப்பாக, வெளியூர்ப் பயணங்களின்போது, அதுவும் இரவு நேரப் பயணத்தின்போது, உங்கள் உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். கணவர் - மனைவியரிடையே சிறு, சிறு கருத்துவேற்றுமைகள் உண்டாகக்கூடும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தும், பரஸ்பர அன்பைப் பகிர்ந்து கொண்டும் இருந்தால், பிரச்னையின் அளவு கடுக்காய் அளவிற்கு குறைந்துபோகும். உடல் நலனில் கவனமாக இருத்தல் அவசியம் என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. வருமானம் ஓரளவு திருப்திகரமாகவே இருக்கும். கூடியவரையில், வெளியில் அலைவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். நெருங்கிய உறவினருடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம். இது எதிர்காலத்தில் நிகழவிருக்கும் பிரச்னைகளைத் தவிர்க்க உதவும்.
உத்தியோகம்: ஜென்மராசியில் வக்கிரகதியில் ஜீவனகாரகரான சனி பகவான் வீற்றிருப்பதால், பணிச்சுமை அதிகமாக இருக்கும். மேலதிகாரிகளின் சீற்றத்திற்கு ஆளாக நேரிடலாம்.அலுவலக சக ஊழியர்களுடன் அனுசரித்து நடந்து கொள்வது அவசியம். கூடியவரையில், மேலதிகாரிகளுடன் வாக்குவாதம் வேண்டாம். இரவுநேரப் பணிகளின்போது மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் அவசியம். உங்கள் நியாயமான கோரிக்கைகள், உரிமைகள் மறுக்கப்பட வாய்ப்புள்ளது. அத்தகைய தருணங்களில் உணர்்ச்சிவசப்படாமல், வளைந்து கொடுத்தால் எதிர்காலத்திற்கு நலன் பயக்கும்.
தொழில், வியாபாரம்: சந்தையில் நியாயமற்ற போட்டிகளை நீங்கள் சந்திக்கின்றீர்கள். உங்கள் பொருட்களுக்கு எதிர்பார்க்கும் அளவிற்கு விலையும், லாபமும் கிடைக்காது. அத்தகைய தருணங்களில், நிதானத்துடன் சந்தை நிலவரத்தை ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்க வேண்டும்.தற்போதைய நிலையில், புதிய முதலீடுகளையும், புதிய கிளைகளைத் திறப்பதிலும் சற்று ஒத்திப்போடுவது உங்கள் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஒத்துழைக்க மறுக்கும். ஆகையால் நிதிநிர்வாகத்தில் கவனமாக இருக்கும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
கலைத்துறையினர்: கலைத்துறை அன்பர்களுக்கு, வாய்ப்புகள் குறையும், அதனால் வருமானமும் குறையும். எதிர்பார்த்திருந்த வெளிநாட்டுக் கலை நிகழ்ச்சிகள் கைநழுவிப் போகும். சிக்கனமாக இருக்கப் பழகிக் கொள்ளுங்கள். கைப் பணத்தை எண்ணி, எண்ணிச் செலவிடுங்கள். இல்லாவிடில் உங்களுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்படக்கூடும்.
அரசியல் துறையினர்: அரசியல் துறையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள கிரகம் சுக்கிரனாகும். அந்தச் சுக்கிரன் ஓரளவே சுப பலம் பெற்றிருப்பதால், கூடியவரையில் உங்கள் சொந்தக் கருத்துகளை மின் அஞ்சல், ஊடகங்கள் மூலமோ வெளியிடாமலிருப்பது உங்கள் எதிர்காலத்திற்கு நன்மை உண்டாவதோடு, அநாவசிய பிரச்னைகளை நீங்கள் சந்திக்கவேண்டியிராது. உயர்மட்டத் தலைவர்களுடன் கருத்து வேற்றுமை உண்டாகக்கூடும்.
மாணவ - மாணவியர்: மாணவ, மாணவியருக்கு வித்யாகாரகரான புதன் மிகவும் அனுகூலமாக சஞ்சரிப்பதால், பாடங்களில் மனம் படியும். ஆயினும், சனியும், ராகுவும் அனுகூலமாக இல்லை. ஆகையால், சக மாணவர்களுடன் நெருங்கிப் பழகாமலிருப்பது நல்லது. காரணம், அது உங்கள் நற்பெயருக்குக் களங்கம் உண்டாக்கலாம்.
விவசாயத் துறையினர்: விவசாயத் துறையை தனது அதிகாரத்தில் கொண்டுள்ள கிரகம் செவ்வாய் ஆகும். இந்தக் கிரகம் உங்களுக்கு அனுகூலமாக சஞ்சரிப்பதால், நல்ல விளைச்சல், லாபம் உங்களுக்குக் கிடைக்கும் கால்நடைகள் அபிவிருத்தியடையும், விவசாய உபகரணங்கள் உங்களுக்கு தாராளமாகக் கிடைக்கும்.நிதிநிறுவனங்கள் துணை நிற்கும். உங்கள் விளைபொருட்களுக்கு, ஏற்றுமதித்துறையும் உங்களுக்குக் கைகொடுக்கும்.
பெண்மணிகள்: பெண்மணிகளின் நலன்களைப் பாதுகாக்கும் சுக்கிரனும், இதர கிரகங்களும், சுபபலம் பெற்று சஞ்சரிப்பதால், பெண்மணிகளுக்கு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கக்கூடிய மாதமாகும். வேலைக்குச் சென்றுவரும் பெண்மணிகளுக்கு, பதவியுயர்வு, மற்றும் ஊதியஉயர்வு ஆகியவை காத்திருக்கின்றன என்பதை கிரக நிலைகள் உணர்த்துகின்றன. மணமாலைக்குக் காத்திருக்கும் கன்னியருக்கு நல்ல வரன் அமையும். குடும்பப் பெண்களுக்கு மணவாழ்க்கை இனிக்கும். பல பெண்களுக்கு மகப்பேறு அமையும்.
அறிவுரை: பல அரிய சந்தர்ப்பங்கள் உங்களைத் தேடிவரும். நழுவவிடாமல் கைப்பற்றிக் கொள்ளுங்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தயக்கமின்றி, எடுப்பது உங்கள் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும்.
பரிகாரம்: தினமும் காகத்திற்கு நெய், பருப்பு, சிறிது எள் கலந்த ஐந்து சாத உருண்டைகள் வைத்துவருவது மகத்தான புண்ணிய பலன்களைப் பெற்றுத்தரும்.
2. தினமும் ஒரு சர்க்கமாவது ஸ்ரீமத் சுந்தரகாண்டம் பாராயணம் செய்துவாருங்கள். இதனை "சர்வ தோஷப் பரிகார ரத்தினம்" எனப் போற்றிக் கொண்டாடப்படுகிறது.
அனுகூல தினங்கள்
ஆவணி : 3-5, 10-12, 15-17, 23-27, 31.
சந்திராஷ்டம தினங்கள்
ஆவணி : 1, 2. மீண்டும் 28 முதல் 30 பிற்பகல் வரை.


