search-icon-img
featured-img

கன்னி

Published :

15-5-2026 முதல் 14-6-2026 வரை

(உத்திரம் 2ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2ம் பாதம் வரை)

குடும்பம்: சுக ஸ்தானத்திற்கு குரு பகவானின் சுபப் பார்வை கிடைப்பது, இம்மாதத்தின் விசேஷ சுப பலனாகும்! குழந்தைகள் விசேஷ நன்மைகளைப் பெறுவார்கள். குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சியை அளிக்கும். மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் தொடர்ந்து ஏற்பட்டுவந்த வீண் செலவுகள், இனி இராது! திருமண முயற்சிகளில் தொடர்ந்து ஏற்பட்டுவந்த தடங்கல்கள் நீங்கி நல்ல வரன் அமையும். குடும்பத்தில், நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு, குழந்தை பிறப்பு போன்ற சுப நிகழ்ச்சிகள் நிகழும். ஒருசிலருக்கு, வீடு மாற்றம் ஏற்படுவதற்கும் செவ்வாயின் சஞ்சார நிலை உதவிகரமாக அமைந்துள்ளது. பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெற உதவிகரமாக சஞ்சரிக்கிறார், செவ்வாய் பகவான்!!

உத்தியோகம்: உத்தியோகக் காரகரான சனி பகவான் மற்றும் சூரியன், சுக்கிரன் ஆகியோர் சாதகமாக வலம் வருவது, கவலைகள் இல்லாத காலகட்டத்தை எடுத்துக் காட்டு கிறது. சக-ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள். அலுவலகச் சூழ்நிலை மன நிம்மதியையும், மன நிறைவையும் அளிக்கும். புதிய வேலைக்கு முயற்சித்துவரும் கன்னி ராசி அன்பர்களுக்கு, மனத்திற்குப் பிடித்த நிறுவனத்தில் நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு சென்று, வேலை பார்க்க வேண்டு மென்ற ஆர்வமிருப்பின், இப்போது முயற்சிக்கலாம். ெவற்றி கிட்டும்.

தொழில், வியாபாரம்: சந்தை நிலவரம் தொடர்ந்து சாதகமாக உள்ளதை கிரக நிலைகள் நிரூபிக்கின்றன. உங்கள் சரக்குகளுக்கு நல்ல வரவேற்பும், லாபமும் கிடைக்கும். நிதி நிறுவனங்களின் ஆதரவும், உதவியும் எளிதில் கிட்டும். சக-ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபார அபிவிருத்தி சம்பந்தமாக, வெளியூர்களுக்குச் சென்றுவரும் சாத்தியக்கூறும் உள்ளது. புதிய விற்பனைக் கிளைகள் திறப்பதற்கு ஏற்ற தருணம் இதுவே! இதை நழுவ விட்டுவிடாதீர்கள். இத்தகைய அரிய சந்தர்ப் பங்களை நமக்கு முன்கூட்டியே எடுத்துக்காட்டு வதில் ஜோதிடத்திற்கு இணையான கலை வேறெதுவும் கிடையாது.

கலைத் துறையினர்: கலைத் துறைக்கு அதிகாரம் படைத்த சுக்கிரன், அனுகூலமாக சஞ்சரிப்பதால், நல்ல வாய்ப்புகள், அதிக முயற்சியின்றி, எளிதில் உங்களைத் தேடி வரும். வருமானமும், செல்வாக்கும், புகழும் அதிகரிக்கும். புதிய கலை நிகழ்ச்சிகளுக்காக வெளியூர்களுக்குச் சென்று வரும் சாத்தியக்கூறும் உள்ளது. உங்கள் பொருளாதார நிலையை சரிசெய்து கொள்ள ஏற்ற தருணம் இதுவே! படத் தயாரிப்பாளர்கள், புதிய தயாரிப்புகளில் துணிந்து முதலீடு செய்யலாம். எதிர்பார்ப்பதைவிட, நல்ல லாபமும், புகழும் கிட்டும். சில படங்கள் வெளிநாட்டு திரையரங்குகளில் பிரபலமாகும். அதன் மூலம் வருமானம் உயரும். உங்கள் நிதி நிலைமையை சரிசெய்து கொள்ள அரிய தருணம் இது. பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெற வழிவகுக்கும்.

அரசியல் துறையினர்: அரசியல் துறையின் பெரும் பகுதியை, சுக்கிரன், தனது அதிகாரத்தில் வைத்துக் கொண்டுள்ளதாக, புராதன ஜோதிட நூல்களாகிய ‘‘பிருஹத் ஸம்ஹிதை” மற்றும் ‘‘பூர்வ பாராசர்யம்” அரிதியிட்டுக் கூறுகின்றன. அத்தகைய சக்திவாய்ந்த சுக்கிரன், சுப பலம் பெற்று, வலம் வருவதால், அரசியல் துறையினருக்கு மக்களிடையே செல்வாக்கு உயரும். செல்வாக்கு மிகுந்த அரசியல் தலைவர் ஒருவரின் நட்பும் லாபகரமாக இருக்கும். முக்கிய விஷயங்களில் உங்கள் கருத்துகளையும் கவனத்தில் எடுத்துக்கொள்வார்கள்.

மாணவ - மாணவியர்: வித்யாகாரகரான புதனும், இத்துறைக்குச் சம்பந்தப்பட்ட மற்ற கிரகங்களும், அனுகூலமாக நிலைகொண்டுள்ளதால், பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் வழிகாட்டுதல்களும் உதவும், வெளிநாடுகளுக்குச் சென்று உயர் கல்வி பயில்வதற்கு பண உதவி எளிதில் கிட்டும்.

விவசாயத் துறையினர்: விவசாயத் துறை, சூரியன் மற்றும் செவ்வாய் ஆகிய இரு கிரகங்களின் பிரதான சக்தியில்தான் இயங்குகின்றது. இவ்விரு கிரகங்கள் மட்டுமின்றி, இத்துறைக்குச் சம்பந்தப்பட்ட மற்ற கிரகங்களும் சுப பலத்துடன் சஞ்சரிப்பதால், காலத்தில் நல்ல மழை பெய்யும்.கால் நடைகள் சிறந்த அபிவிருத்தியடையும். விவசாய வசதிகள் எளிதில் கிட்டும். வயலைப் பார்த்தாலே மனம் குளிரும். நல்ல விளைச்சலும், வருமானமும் கிட்டும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி பெறலாம்.

பெண்மணிகள்: பெண்மணிகளுக்கு மனநிறைவை அளிக்கும்படி, முக்கிய கிரகங்கள் சுப பலம் பெற்று சஞ்சரிக்கின்றன. எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக உள்ளது. விவாகமான பெண்களுக்குக் குடும்பச் சூழ்நிலை மன நிம்மதியை அளிக்கும். திருமண வயதிலுள்ள பெண்மணிகளுக்கு மனத்திற்கு உகந்த வரன் அமையும்.

அறிவுரை: ‘‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்...!” என்பது மூத்தோர் வாக்காகும். இம்மாதம் உங்களுக்கு நல்கும் நல்வாய்ப்பு களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பரிகாரம்: வியாழக்கிழமைகள்தோறும், ஓர் ஏழைக்கு அன்னமிடுங்கள். நல்ல பலன் உங்களைத் தேடி வரும்.

அனுகூல தினங்கள்

வைகாசி : 3-6, 10-13, 17-20, 24-27, 31.

சந்திராஷ்டம தினங்கள்

வைகாசி : 1, 2 இரவு வரை மீண்டும் 28 முதல், 30 காலை வரை.