புனர்பூசம் 4ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் வரை
14-04-2026 முதல் 13-04-2027 வரை
குடும்பம்: ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கும் நிலையில், பாக்கிய ஸ்தானத்தில் சனி, செவ்வாய் மற்றும் புதன் கூட்டணியும் ஏற்பட்டுள்ளது. ஜீவன ஸ்தானத்தில் சூரியனுடன், சுக்கிரனும் சேர்ந்திருக்கிறார். விரய ஸ்தானத்தில், குரு பகவான் நிலைகொண்டுள்ளார். வருமானம் திருப்திகரமாக இருந்தும், பணம் பல வகைகளிலும் விரயமாகும். பல தருணங்களில், புதிய கடன்களை ஏற்க நேரிடும். ஒவ்வொரு மாதத்திலும் பணப் பற்றாக்குறையுடன் போரிட வேண்டி வரும். வெளியூர்ப் பயணங்களில், பணத்தை இழக்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகும். கணவர் - மனைவியரிடையே பரஸ்பர அந்நியோன்யம் குறையும். வாக்குவாதத்தினால், குடும்ப அமைதி பாதிக்கப்படும். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் தடைப்படும். விவாக வயதில் பெண்கள் அல்லது பையன்கள் இருப்பின், வரன் அமைவதில் தடங்கல்கள் உருவாகும். சிலருக்கு, வேறு வீட்டிற்கு மாற வேண்டிய அவசியம் ஏற்படும். வருமானத்தைவிட, செலவுகளே அதிகமாக இருக்கும். அடிக்கடி பணப் பற்றாக்குறையினால், அவதிப்பட நேரிடும். கிரக நிலைகள் சாதகமாக இல்லாததால், இரவு நேரங்களில் வெளியே செல்லும்போது, சற்று எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என கிரக நிலைகள் எச்சரிக்கின்றன. ஏனெனில், சிறு விபத்துகளில் நீங்கள் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது. மருத்துவ செலவுகளைத் தவிர்க்க இயலாதவை. ராசிக்கு 8-ம் இடமாகிய கும்ப ராசியில், ராகுசேர்ந்திருப்பதால், குறிப்பாக, இரவு நேரங்களில் வாகனம் ஓட்டுவதையும் பிரயாணங்களையும், தவிர்த்தல் அவசியம். வெளியூர்களுக்குச் செல்லும்போது, பணம், பொருட்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். உடல் நலனிலும் ஒரு கண் இருக்கட்டும். சிறு உபாதையாக தோன்றினாலும், மருத்துவரிடம் சென்று சிகிச்சைபெறுவது மிகவும் அவசியம்.
உத்தியோகம்: கிரக நிலைகள் ஓரளவே சாதகமாக இருப்பதால், அன்றாடப் பொறுப்புகளில் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். உயரதிகாரிகளுடன் வாக்குவாதம் கூடாது. சக-ஊழியர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிடில் பிரச்னைகளில் நீங்கள் சிக்கிக் கொள்்ள நேரிடும். வேலை பார்க்குமிடத்தில், நீங்களுண்டு, உங்கள் பொறுப்புகள் உண்டு என்று நடந்து கொள்வது நல்லது.
தொழில், வியாபாரம்: சந்தை நிலவரத்தை தினமும் முன்கூட்டியே அறிந்து கொண்டு, அதற்கேற்ப உங்கள் சரக்குகளின் விலையை முன்கூட்டியே நிர்ணயித்துக் கொள்வது மிகவும் அவசியம். கீழ்மட்ட ஊழியர்களின் புதிய கோரிக்கைகள் கவலையை அளிக்கும். சகக் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையும். வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் சலுகைகளும் பாதிக்கப்படுவதற்குவியாபார அபிவிருத்தி சம்பந்தமாக வெளி மாநிலங்களுக்குச் சென்று வரவேண்டிய அவசியமும் ஏற்படக்கூடும். ஒரு சிலர் வெளிநாடு சென்று வரவேண்டிய சாத்தியக்கூறும் உள்ளது. புதிய முதலீடுகளை தற்போதைக்கு ஒத்திப் போடுவது எதிர்காலத்திற்கு நன்மை செய்யும்.
கலைத் துறையினர்: சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால், கலைத் துறை அன்பர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். வருமானம் உயரும். செல்வாக்கு அதிகரிக்கும்.வெளிநாடுகளில் உள்ள பிரமுகர்களுடன் தொடர்பு ஏற்படும். சினிமாத் துறையினருக்கு, லாபகரமான காலகட்டமிது, பயன்படுத்திக்கொள்வது, உங்கள் திறமையில்தான் உள்ளது. நீங்கள் எடுக்கும் புதிய படங்கள் வெற்றிகரமாக பல வாரங்களாக ஓடும். உங்கள் பொருளாதார நிலையை சீர் செய்து கொள்ள வாய்ப்பு கிட்டும்.
அரசியல் துறையினர்: அரசியல் துறை பெரும்பாலும் சுக்கிரன் மற்றும் செவ்வாயின் ஆதிக்கத்தில்தான் உள்ளது. புதனுக்கும், இத்துறையில் பங்குண்டு. இம்மூவரும் சுபத்துவப் பாதையில் சஞ்சரிப்பதால், கட்சியில் ஆதரவு பெருகும். சூரியன் அனுகூலமாக இருப்பதால், உயர் பதவியிலுள்ள பிரமுகர் ஒருவரின் ஆதரவு துணை நிற்கும்.மக்களிடையே உங்கள் கருத்துக்களுக்கு முக்கியத்துவமும், நல்ல வரவேற்பும் கிட்டும்.
மாணவ - மாணவியர்: கல்வித் துறையை தனது அதிகாரத்தில் கொண்டுள்ள புதன், அனுகூலமாக சஞ்சரிப்பதால், பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும். நினைவாற்றலும், கிரகிப்புத் திறனும் கூடும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று, வெற்றி நடை போடுவீர்கள்! பலருக்கு, வெளிநாடு சென்று, விசேஷ உயர் கல்வி பெறுவதற்கும் வாய்ப்பு கிட்டும். சிலருக்கு, பண உதவி கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் குறிப்பிட்டுக்காட்டுகின்றன. இத்தகைய கிரக நிலைகள் அமைவது, அரிதினும் அரிது! சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிடாமல், பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் எதிர்காலத்தைச் சிறப்பாக மாற்றியமைக்கக்கூடிய கிரக நிலைகள் அமைந்துள்ளன இப்போது.
விவசாயத் துறையினர்: விவசாயத்துறை பெரும்பாலும், செவ்வாய் மற்றும் சூரியனின் கட்டுப்பாட்டில்தான், உள்ளன. இவ்விரு கிரகங்களும் உங்களுக்கு அனுகூலமாக இப்போது அமைந்திருப்பதால், விவசாயத்துறைக்கு அவசியமான தண்ணீர், வசதி, உரம், விதை மற்றும் கால் நடைகள் ஆகியவை குறைவின்றி கிடைக்கும் என கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. வங்கி மற்றும் இதர நிதி நிறுவனங்களும் ஆதரவுக் கரம் நீட்டும். பழைய கடன்கள் இருப்பின் அவற்றை அடைத்து, நிம்மதி பெறலாம்.
பெண்மணிகள்: பெண்மணிகளின் நலன்களுக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள சுக்கிரன், பூரண சுபபலம் பெற்று சஞ்சரிப்பதால், பல நன்மைகள் காத்துள்ளன உங்களுக்கு.
அறிவுரை: நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரவுள்ளன. நழுவ விட்டுவிடாமல், பயன்படுத்திக் கொள்ளவும்.
பரிகாரம்: செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று கிழமைகளிலும் அருகிலுள்ள திருக் கோயில் ஒன்றில் தீபத்தில் தவறாது பசு நெய் சேர்த்து வந்தால் போதும். பலன் கை மேல்!


