search-icon-img
featured-img

சிம்மம்

Published :

மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை

14-04-2026 முதல் 13-04-2027 வரை

குடும்பம்: இவ்வருடத்தின் மிக முக்கிய கிரக மாறுதல், சனி பகவான் அவரது ஆட்சி வீடான கும்ப ராசியை விட்டு, குரு பகவானின் ஆட்சி வீடான மீன ராசிக்கு மாறுவதேயாகும்! மீன ராசி, சனி பகவானுக்கு நட்பு வீடாகும்!! ஆயினும், கோள்சார விதிகளின்படி மீனம், சிம்ம ராசிக்கு அஷ்டம ஸ்தானமாகும்.‘‘அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி! ஓடிப்போனவனுக்கு 9-ல் குரு” - என்றொரு பழமொழியே உண்டு! ஜோதிடக் கலையின் துல்லிய விதிகளின்படி, ஜென்ம ராசிக்கு 8-ம் இடத்தில் சனி பகவான் சஞ்சரிக்கும்போது, பல பிரச்னைகளை ஏற்படுத்துவார். உடல் ஆரோக்கியத்திலும், கவனம் வேண்டும் என்பவை பொதுக் கருத்தாகும். இருப்பினும், எந்தக் கிரகமானாலும், குரு பகவானின் ராசியைத் தாண்டும்போதும், அவரது பார்வையில் உள்ளபோதும் அந்தக் கிரகத்தின் சஞ்சார தோஷம் நீங்கிவிடுகிறது எனக் கூறுகிறது, ‘‘ஜோதிட பாரிஜாதம்” எனும் புராதன ஜோதிட நூல். ஆதலால், சனி பகவானின் அஷ்டம ராசி சஞ்சார தோஷம் குறைந்துவிடுகிறது.சிறு விஷயங்களுக்கும்கூட அதிக அலைச்சலும், பணச் செலவும், உடல் ஆரோக்கியக் குறைவும் ஏற்படும். நெருங்கிய உறவினர்களிடையே தேவையற்ற வாக்குவாதமும், ஒற்றுமைக் குறைவும் ஏற்படும். குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்தில் பின்னடைவு ஏற்படக்கூடும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் நல்லது. திருமண வயதில் பெண் அல்லது பிள்ளை இருப்பின் வரனை நிச்சயம் செய்வதில் தவறுகள் ஏற்படலாம். அவசர முடிவுகளைத் தவிர்ப்பது அவசியம். என்றோ பட்ட கடன்கள் தொடருவதால், மன நிம்மதி குறையும்.

உத்தியோகம்: உத்தியோகத் துறையின் அனைத்து அம்சங்களும், ஜீவன காரகரான சனி பகவானின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது என, மிகப் புராதனமான ஜோதிட கிரந்தங்கள் விவரித்துள்ளன. ஆதலால்தான், சனி பகவானை ‘‘ஜீவன காரகர்” -எனக் கூறுகிறது, ஜோதிடக் கலை. உத்தியோகத்தில் ஏற்படும் ஏற்றத் - தாழ்வுகள், சனி பகவானின் சஞ்சார நிலைகளைப் பொறுத்தே நிகழும்! தகுதியற்றவர்கள் உயர் பதவிகளை அடைவதும், தகுதியுள்ளவர்கள், உத்தியோகத்தில் தடுமாறுவதும், ஜாதகத்தில், சனி பகவானின் சஞ்சார நிலையை அனுசரித்தே அமையும். சிம்ம ராசிக்கு, மீனம் அஷ்டம ஸ்தானமாகிய (8-ம்) இடமாகும். ராசிக்கு 8-ம் இடத்தில் சஞ்சரிக்கும் அனைத்து கிரகங்களும் சிரமங்களையே ஏற்படுத்துவார்கள் எனக் கூறுகிறது, ‘‘ஜோதிட சிந்தாமணி” - எனும் பண்டைய ஜோதிட நூல். சிறு, சிறு விஷயங்களுக்கும்கூட அதிகமாக அலையவேண்டி வரும். அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படும். முக்கிய குடும்ப விஷயங்களில், முடிவெடுக்க முடியாமல், குழப்பம் மேலிடும். வரவிற்கு மேல் செலவுகள் ஏற்படுவதால், பிறர்உதவியை நாடவேண்டிவரும்.

தொழில், வியாபாரம்: லாபகரமாக நடந்துகொண்டிருந்த வியாபாரத்தில், பின்னடைவு ஏற்படும். சந்தை நிலவரத்தில் நியாயமற்ற போட்டிகள், கவலையை ஏற்படுத்தும். நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு குறையும். சகக் கூட்டாளிகளிடையே கருத்துவேற்றுமை ஏற்பட்டு, வர்த்தக முன்னேற்றத்தைப் பாதிக்கச் செய்யும். வெளியூர்ப் பயணங்களில் ஏமாற்றமே மிஞ்சும்.

கலைத் துறையினர்: வாய்ப்புகள் குறையக்கூடும். அது வருமானத்தைப் பாதிக்கும். சில தருணங்களில், கடுமையான பணத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கும், அத்தருணங்களில் பிறர் உதவியை நாட வேண்டிய அவசியம் உருவாவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது.

அரசியல் துறையினர்: கட்சியில் செல்வாக்கு பாதிக்கப்படும். உயர்மட்டத் தலைவர்களுக்கு, உங்கள் மீது இருந்த நம்பிக்கை பாதிக்கப்படக்கூடும். மக்களிடையே புகழ் மங்கும். தேர்தலில் நின்றால், தோல்வியைத் தழுவ நேரிடும்.

மாணவ - மாணவியர்: கல்வித் துறையைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள கிரகம் புதனாவார்! அவர் அனுகூலமாக இல்லை!! பாடுபட்டுப் படித்தும், தேர்வில் எதிர்பார்க்கும் அளவிற்கு மதிப்பெண்களைப் பெற முடியாது. தேவையற்ற பல பிரச்னைகள் மனத்தைப் பாதிப்பதால், பாடங்களில் மனத்தைச் செலுத்துவது கடினமாக இருக்கும். வெளிநாடு சென்று உயர் கல்வி பயில விருப்பமிருப்பின், அது தடைபடும்.

விவசாயத் துறையினர்: பாடுபட்டு உழைக்கும் அளவிற்கு, விளைச்சல் கிடைப்பது சற்று கடினமே என கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. பல தருணங்களில், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடும். இதன் காரணமாக, பயிர்கள் பாதிக்கப்படும். பழைய கடன்கள் நீடிப்பதால், மன நிம்மதி பாதிக்கப்படும். கால்நடைகளும், நோய்வாய்ப்படுவதால், மருத்துவச் செலவுகள் உயரும். சிந்தித்து, செலவு செய்யாவிடில், புதிய கடன்களை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

பெண்மணிகள்: உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். குடும்பப் பிரச்னைகள் கவலையை அளிக்கும். நெருங்கிய உறவினர்களிடையே ஒற்றுமை குறையும். குடும்ப விஷயங்களில், பிறர் தலையீடு, கவலையை அளிக்கும். விவாகத்திற்குக் காத்துள்ள கன்னியருக்கு, வரன் அமைவதில் பிரச்னைகள் உண்டாகும்.

அறிவுரை: கூடியவரையில், தேவையற்ற உழைப்பையும், கவலைகளையும் குறைத்துக் கொள்ள முயற்சியுங்கள்.

பரிகாரம்: அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில், மாலையில் தீபத்தில் சிறிதளவு நெய் சேர்த்துவந்தால் போதும்.வியக்கத்தக்க பலன் கிட்டும்.