(சித்திரை 3ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ம் பாதம் வரை)
14-04-2026 முதல் 13-04-2027 வரை
குடும்பம்: வருமானம் போதிய அளவிற்குத் தந்தருள்வார், பாக்கிய ஸ்தானத்தில் வலம் வரும் குரு பகவான்! திட்டமிட்டு செலவு செய்தால், சேமிப்பிற்கும் சாத்தியக்கூறு உள்ளது. குடும்பத்தில் ஒற்றுமையும், பரஸ்பர அன்பும் மேலோங்கும். திருமண முயற்சிகளில் சிறு தடங்கல்கள் ஏற்பட்டு, அதன் பிறகே வரன் நிச்சயமாகும். ஒருசிலருக்கு, வீடு மாற்றம் அல்லது ஊர் மாற்றம் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக உள்ளது. தீர்த்த - தல யாத்திரையும், பாடல் பெற்ற திருத்தல தரிசனமும் கிட்டும். மகான்கள், சித்த மகா புருஷர்களின் ஜீவ சமாதி தரிசன பாக்கியம் கிட்டும்.
உத்தியோகம்: உத்தியோகத் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள சனி பகவான், அனுகூல நிலையில் சஞ்சரிப்பதால், வேலை பார்க்கும் இடத்தில் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு, பணிகளில் உற்சாகத்தைத் தரும். தசா, புக்திகள் அனுகூலமாக இருப்பின், சிறு ஊதிய உயர்வு அல்லது பதவியுயர்வு கிட்டும். புதிய வேலைக்கு முயற்சித்துவரும் துலாம் ராசி அன்பர்களுக்கு, மனத்திற்குப் பிடித்த நிறுவனத்தில், நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு சென்று வேலை பார்க்க வேண்டுமென்ற ஆர்வமிருப்பின், தற்போது முயற்சிக்கலாம். வெற்றி கிட்டும். சொந்தத் தொழில் ஆரம்பிக்க ஆர்வமிருப்பின் இதுவே தக்க தருணமாகும்.
தொழில், வியாபாரம்: தொழிலை அபிவிருத்தி செய்வதற்கும், உற்பத்தியை அதிகரிப்பதற்கும் , புதிய விற்பனைக் கிளைகள் திறப்பதற்கும் ஏற்ற காலகட்டம் இதுவே. நிதி நிறுவனங்கள் தங்கள் ஒத்துழைப்பை நல்குவார்கள். சந்தையில், உங்கள் பொருட்களுக்கு நல்ல வரவேற்பும், லாபமும் கிடைக்கும். ஏற்றுமதி - இறக்குமதித் துறையினருக்கு, விசேஷ நன்மைகள் காத்துள்ளன! லாபம் பல மடங்கு அதிகரிக்கும். ஒருசிலருக்கு, வியாபாரம் சம்பந்தமாக வெளிநாடு சென்றுவரும் சாத்தியக்கூறும் உருவாகும். புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதற்கு கிரக நிலைகள் சுப பலம் பெற்றுத் திகழ்கின்றன. வெளிமாநிலங்களிலிருந்து வந்து, பணியாற்றும் தொழிலாளர்களினால் தொடர்ந்து ஏற்பட்டுவந்த பிரச்னைகள் சுமுகமாகத் தீரும்.
கலைத் துறையினர்: கலைத் துறையை தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள சுக்கிரன், இக்காலகட்டம் முழுவதும் அனுகூலமாக சஞ்சரிப்பதால், வாய்ப்புகளும், வருமானமும் அதிகரிக்கும். உங்கள் பொருளாதார நிலையை சரி செய்து கொள்ள ஏற்ற தருணம் இது. திரைப்படத் தயாரிப்பாளர்கள், தங்கள் புதிய படங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பும், உற்சாகமும் கிடைப்பதை, அனுபவத்தில் காண்பார்கள். சில படங்கள் வெளிநாடுகளிலிருந்தும்கூட நல்ல வரவேற்பைப் பெற்றுத் திகழும். வருமானமும் உயரும். நீங்கள் தயாரித்த படங்களில் சில விருது பெற்று, உலகப் புகழ்பெறும்.
அரசியல் துறையினர்: அரசியல் துறையைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள, சுக்கிரன் - செவ்வாய் ஆகிய இரு கிரங்களும் சுப பலம் பெற்று வலம் வருவதால், சிக்கல்கள் நிறைந்த தருணங்களில், சரியான முடிவெடுக்கும் சக்தியைப் பெறுவீர்கள்! உங்கள் முடிவுகள் மிகச் சரியானவையாக அமையப்பெறும். இதனை அனுபவத்தில் பார்க்கலாம். இந்திய அரசியலில் தனி முத்திரை பதித்துள்ள பிரபல அரசியல் தலைவரின் நட்பு கிடைக்கும். அதன் காரணமாக, அரசியல் முன்னேற்றமும், ஏற்படும். உங்கள் அரசியல் வாழ்க்கையில் இது ஒரு திருப்புமுனையாகவும் அமையக்கூடும். பல அரிய சந்தர்ப்பங்்களை இது உருவாக்கித் தரும்!
மாணவ - மாணவியர்: கல்வித் துறைக்கு அதிகாரம் கொண்டுள்ள புதனும் மற்ற கிரகங்களும் சுப பலம் பெற்றுத் திகழ்வதால், பாடங்களில் மனம் ஆர்வத்துடன் ஈடுபடும். நினைவாற்றல் அதிகரிக்கும். ஆசிரியை மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் உதவும். சிலருக்கு, கல்வி உதவித் தொகை கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. வெளிநாடு சென்று, விசேஷ உயர் கல்வி பயில ஆர்வமிருப்பின், இத்தருணத்தில் முயற்சிக்கலாம். எளிதில் உதவிகள் கிட்டும். விடுதிகளில் தங்கிப் படிப்பதற்கு பண உதவி எளிதில் கிட்டும். நல்ல உள்ளம் கொண்டவர்களின் தொடர்பும், நட்பும் கிடைக்கும்.
விவசாயத் துறையினர்: விவசாயத் துறை பெரும்பாலும் சூரியன் மற்றும் செவ்வாய் ஆகிய இரு வீரியம் நிறைந்த கிரகங்களின் ஆதிக்கத்தில் இருப்பதாக ‘‘பிருஹத் ஜாதகம்” - என்னும் புராதன ஜோதிடக் கிரந்தம் அறுதியிட்டுக் கூறுகிறது. பிரசித்தி பெற்ற மாமன்னர், விக்கிரமாதித்தியரின் அவை ஜோதிடரான, வராஹமிகிரர் இயற்றிய, நூல் இந்தப் பிரஹத் ஜாதகம். பிற்காலத்தில் எழுதப்பட்ட பல ஜோதிடக் கிரந்தங்களுக்கு இதுவே ஆதார நூலாகும்.
பெண்மணிகள்: துலாம் ராசியின் பிரதான கிரகம் சுக்கிரனாவார்! அந்தச் சுக்கிரன், சிறந்த சுப பலம் பெற்று வலம் வருவதால், பெண்மணிகளுக்கு உகந்த காலகட்டமிதுவேயாகும். திருமண வயதிலுள்ள கன்னியருக்கு நல்ல வரன் அமையும். கருத்தரித்துள்ள பெண்மணிகளுக்கு சுகப் பிரசவம் உண்டாகும். வேலைக்கு முயற்சித்துவரும் வனிதையருக்கு, நல்ல வேலை காத்துள்ளது. நிரந்தர நோயினால் அவதியுறும் பெண்மணிகளுக்கு நல்ல நிவாரணம் ஏற்படும்.
அறிவுரை: இந்த வருடம் முழுவதும், பிரதான கிரகங்கள் உங்்களுக்கு ஆதரவாக சஞ்சரிப்பதால், உங்கள் எண்ணங்கள் - ஆசைகள் அனைத்தும் ஈடேறும்.
பரிகாரம்: தினமும் காலை - மாலை இருவேளைகளிலும், உங்கள் குல தெய்வத்தைப் பூஜித்து வரவும்.


