பூரட்டாதி 4ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி வரை
14-04-2026 முதல் 13-04-2027 வரை
குடும்பம்: ஜென்ம ராசியில், செவ்வாய் - சனி பகவானின் கூட்டுச் சேர்க்கை ஏற்பட்டுள்ள இத்தருணத்தில், அர்த்தாஷ்டக ராசியில் ராசி நாதனாகிய குரு பகவான் அமர்ந்திருக்கிறார்! விரய ஸ்தானத்தில் பலம் வாய்ந்த ராகு நிலைகொண்டுள்ளார்! வரவைவிடச் செலவுகளே அதிகமாக இருக்கும். குடும்பப் பிரச்னைகள், வைத்திய செலவுகள் மன நிம்மதியைப் பாதிக்கும். சிறிய விஷயத்திற்குக்கூட, அதிக அலைச்சல் இருக்கக்கூடும். திருமண முயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படும். கூடியவரையில், வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. குரு பகவானின் சஞ்சார நிலை, ஓரளவே நன்மை செய்யும்படியாக அமைந்துள்ளது. வைகாசி 12-ம் தேதி கடகத்திற்கு மாறும் குரு பகவான், ஐப்பசி 3-ம் தேதி சிம்மத்திற்கு மாறுகிறார்.
உத்தியோகம்: தற்போது பார்த்துவரும் வேலையில் அதிருப்தியே அதிகமாக இருக்கும். நிர்வாகத்தினர், உங்கள் உழைப்பினைக் கண்டுகொள்ள மாட்டார்கள்! தற்காலிகப் பணியாளர்களுக்கு, பணி நிரந்தரம் ஆவது மேலும் தாமதப்படும். ஊதிய உயர்வை எதிர்பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சும். வேலையில், வெறுப்பு ஏற்படும்.
தொழில், வியாபாரம்: சந்தையில், மந்த நிலை நீடிக்கிறது! உங்கள் சரக்குகளுக்கு, எதிர்பார்க்கும் அளவிற்கு தேவையிராது. நியாயமற்ற போட்டிகளும், உங்கள் விற்பனையை பாதிக்கும். எவ்வளவுதான் பாடுபட்டாலும், லாபம் மிக, மிக சொற்பமாகவே இருக்கும். அதன் காரணமாக, மனதில் சோர்வை ஏற்படுத்தும். அடிக்கடி பணப் பற்றாக்குறையையும் சமாளிக்க வேண்டி வரும். வெளி மாநிலங்களிலிருந்து வரவேண்டிய பாக்கிகள் மேலும் தாமதப்படும். மிகக் கடினமான நிதி நிலமையை நீங்கள் சமாளிக்க நேரிடும்.
கலைத் துறையினர்: சுக்கிரன், அவ்வப்போது கைகொடுத்து உதவினாலும், மற்ற கிரகங்கள் ஏதும் சாதகமாக இல்லை! பாடுபட்டு நடித்தும்கூட, அதற்கேற்ற வருமானம் கிடைப்பது மிகவும் கடினம். தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் ஆகியோரும் உங்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள். படப்பிடிப்பு முடிந்ததும், உங்களை மறந்துவிடுவார்கள். வரவேண்டிய பாக்கிகள் வெளியில் தங்கிவிடும். உங்கள் வசதிகளைக் குறைத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும். பல தருணங்களில் பணத் தட்டுப்பாடு கவலையை அளிக்கும். படத் தயாரிப்பாளர்களுக்கு படத்தை முடித்து, வெளிக்கொணர்வது மேலும் தாமதமாகும். சற்று சிரமமான காலகட்டத்தில் நீங்கள் இருப்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.கூடியவரையில், வசதிகளைக் குறைத்துக் கொள்ள முயற்சிப்பது நல்லது. ஆடம்பரச் செலவுகளையும் குறைத்துக் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்திலும் கவனமாக இருத்தல் நன்மை செய்யும்.
அரசியல் துறையினர்: கட்சியில் சிலர் உங்களுக்கு எதிராக நடந்துகொள்வார்கள். சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய தருணம் இது! இன்று எடுக்கும் முடிவுகள், உங்கள் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயம் ெசய்யும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவைகள் ஆகும். மக்களிடையே செல்வாக்கு மிகுந்த கட்சித் தலைவர் ஒருவரைச் சந்திக்க நேரிடும். அதற்குள் உங்கள் முடிவென்ன? -என்பது பற்றி தீர்மானித்துக் கொள்வது அவசியம்!
மாணவ - மாணவியர்: அரசியலில் ஆர்வத்துடன் ஈடுபடுவதால், பாடங்களில் கவனக் குறைவு ஏற்படும். இது உங்களுக்கே தெரியும்! ‘‘அரசியலா...? அல்லது எதிர்காலமா...?” -என்பது பற்றி நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இன்றைய முடிவே உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்க உள்ளது. ஆதலால், தீர ஆராய்ந்து, சிந்தித்து முடிவெடுப்பது உங்கள் எதிர்கால நலனிற்கு உகந்ததாகும். படிக்க வேண்டிய வயதில், வேறு விஷயங்களில் மனத்தைச் செலுத்தக் கூடாது! இன்றைய கல்வியே எதிர்காலத்தில் உங்களை உயர்த்தும் என்பதை மறந்துவிடாதீர்கள்!!
விவசாயத் துறையினர்: விவசாயத்துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள செவ்வாய் மற்றும் சூரியன் ஆகிய கிரகங்கள் சுப பலம் பெற்று வலம் வருவதால், வயல் பணிகளில் மனம் தீவிரமாக ஈடுபடும்.உங்கள் விளைபொருட்களுக்குச் சந்தையில் நல்ல விலை கிட்டும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, உங்கள் பொருளாதார நிலையை சீர் செய்து கொள்ள ஏற்ற தருணமிது.தசா, புக்திகள் அனுகூலமாக இருப்பின், சிறு அளவில் புதிய விளை நிலம் வாங்்கும் யோகமும் உள்ளது. புதிய கால்நடைகள் சேரும் வாய்ப்பும் உங்களுக்கு உள்ளது.முயன்றால் சிறிதளவு சேமிப்பிற்கும் சாத்தியக்கூறு உள்ளது.
பெண்மணிகள்: கிரக நிலைகள் உங்களுக்கு ஆதரவாக அமைந்திருப்பதால், குடும்பச் சூழ்நிலை, மன நிறைவைத் தரும். வருமானம் போதுமளவிற்கு இருக்கும். உடல் ஆரோக்கியம் திருப்தி தரும். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் மகிழ்ச்சியைத் தரும். திருமணத்திற்குக் காத்துள்ள கன்னியருக்கு நல்ல வரன் அமையும்.வேலைக்கு முயற்சித்துவரும் வனிதையருக்கு, நல்ல நிறுவனத்தில் மனத்திற்கு உகந்த வேலை கிடைக்கும்.
அறிவுரை: பல அரிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் இந்தக் காலக்கட்டத்தில்! நழுவ விட்டுவிடாதீர்கள்!! வாய்ப்புகள் கிடைப்பது அரிதினும் அரிது! பயன்படுத்திக் கொள்வது உங்கள் திறமையில்தான் உள்ளது.
பரிகாரம்: சனிக்கிழமை தோறும், திருக்கோயில் ஒன்றில், மாலையில் தீபத்தில் சிறிதளவு எள் எண்ணெய் அல்லது பசு நெய் சேர்த்துவந்தால் அதிசயத்தக்க நற்பலன்கள் கிடைக்கும். இதனை அனுபவத்தில் காண்பீர்கள். நமக்குத் தேவை நம்பிக்கையுடன் கூடிய பக்தி ஒன்றே!


