விசாகம் 4ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை வரை
14-04-2026 முதல் 13-04-2027 வரை
குடும்பம்: பூர்வ புண்ணிய - புத்திர ஸ்தானத்தில், சனி பகவான் அமர்ந்துள்ள நிலையில், அஷ்டம ஸ்தானத்தில் (8-ம்) இடத்தில் குரு அமர்ந்திருப்பது, குடும்பச் சூழ்நிலையில் சிரமங்களை ஏற்படுத்தும் எனக் கூறுகிறது, ‘‘ஜோதிட சிந்தாமணி” -எனும் புராதன ஜோதிட நூல். இதனையே வராக மிஹிரரின் ‘‘பிருஹத் ஜாதக”மும் கூறியுள்ளது. வருமானம் திருப்திகரமாக இருப்பினும், பணம் பல வகைகளிலும் விரயமாகும். கணவர் - மனைவியரிடையே தேவையற்ற வாக்குவாதமும், ஒற்றுமைக் குறைவும் ஏற்படும். கர்ப்பிணிப் பெண்களுக்கு, பிரசவம் சிறிது கஷ்டமாக இருக்கும். குழந்தைகளின் கல்வியில் பின்னடைவு ஏற்படும். படிப்பு முடித்து, வேலைக்கு முயற்சித்துவரும் விருச்சிக ராசி அன்பர்களுக்கு, வேலை கிடைக்கும். ஆயினும், அதில் மனம் பூரண திருப்தியிராது! பணி நிமித்தம் காரணமாக, பலருக்கு இடமாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது.
உத்தியோகம்: மேலதிகாரிகள் உங்கள் பணிகளில் திருப்தியடைய மாட்டார்கள். ஏதேனும் குற்றங் குறைகளைக் கூறிக்கொண்டே இருப்பார்கள். ஒருசிலருக்கு, வீண் அபவாதமும், பழியும் ஏற்படக்கூடும். நீங்்கள் செய்யாத தவறுக்கு, உங்கள் மீது பொறுப்பு சுமத்தப்படும். தற்காலிகப் பணியாளர்களுக்கு, பணி நிரந்தரமாவதில் தடங்கல்கள் ஏற்படக்கூடும். சக-ஊழியர்கள் உங்களுடன் ஒத்துழைக்க மறுப்பார்கள். மேலதிகாரிகளும், உங்களுடன் நியாயமாக நடந்து கொள்ள மாட்டார்கள். உங்கள் விருப்பத்திற்கு மாறான இடமாற்றம் அல்லது இலாகா மாற்றம் ஏற்படும்.சிலருக்குக் குடும்பத்தை விட்டு, பிரிந்திருக்க நேரிடும்.
தொழில், வியாபாரம்: கிரக நிலைகள் அனுகூலமாக இல்லை! சந்தையில் கடினமான போட்டியை நீங்கள் சந்திக்க நேரிடும். லாபம் குறையும். நிதி நிறுவனங்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் குறையும். அதன் காரணமாக, அடிக்கடி நிதிப் பிரச்னை ஏற்படும். சகக் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையும். ஏற்றுமதி - இறக்குமதித் துறையினருக்கு, புதிய பிரச்னைகள் தலைவலியை ஏற்படுத்தும். சரக்குகளைக் காப்பாற்றுவது மிக மிகக் கடினமானதாக இருக்கும். உலக நிலைமையினால், வரவேண்டிய பாக்கிகள் தாமதப்படும். அதனால், பணப் பிரச்னை ஏற்படக்கூடும். புதிய விற்பனைக் கிளைகளைத் திறப்பது தாமதிக்கப்படும். பல தருணங்களில் வங்கிகளின் உதவி தேவைப்படும். சற்று கடுமையான காலகட்டத்தில் நீங்கள் இருப்பதால், கைப் பணத்தை எண்ணி, எண்ணிச் செலவழியுங்கள். இல்லாவிடில், பணப் பிரச்னையில் சிக்கிக் கொள்ள நேரிடும்.
கலைத் துறையினர்: வாய்ப்பும், வருமானமும் குறையும் என கிரக நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன. ஆதலால், கைப் பணத்தைச் சிக்கனமாகச் செலவு செய்வது அவசியமாகும். எந்நிலையிலும், கடன் வாங்குவதைத் தவிர்த்தல் அவசியம். ஏனெனில், இத்தகைய கிரக நிலைகள் அமையும்போது, வாங்கும் கடன், எளிதில் அடைபடாது! அதற்கு மாறாக, அது விருத்தியடையும் எனக் கூறுகிறது, ‘‘உத்திரகாலாம்ருதம்” - எனும் அரிய ஜோதிட நூல்.
அரசியல் துறையினர்: பேச்சிலும், ெசயலிலும், பத்திரிகைகளுக்கு அளிக்கும் பேட்டிகளிலும் நிதானமாக இருத்தல் மிக, மிக முக்கியம். இல்லாவிடில், புதிய பிரச்னைகளில் சிக்கிக் கொள்ள நேரிடும் எனக் கூறுகிறது, ‘‘ஜோதிட ரத்னாகரம்” -எனும் பிரசித்திப் பெற்ற ஜோதிட கிரந்தம்.இதனையே, விவரித்துள்ளன, ‘‘காலப்ரகாஸிகா” மற்றும் ‘‘அர்த்த சாஸ்திரம்” எனும் ஜோதிட நூல்களும்!
மாணவ - மாணவியர்: புதனை, ‘‘வித்யா காரகர்” - அதாவது, ‘‘கல்வித் துறைக்கு அதிபதியான க்ிரகம்” எனக் கூறுகிறது, ஜோதிடக் கலை! அந்த புதன், சுபத்துவப் பாதையில் வலம் வருவதால், மாணவ - மாணவியருக்கு படிப்பில் மனம் தீவிரமாக ஈடுபடும். கிரகிப்புத் திறனும், நினைவாற்றலும் அதிகரிக்கும். உயர் கல்விக்கு பண உதவியும் சிபாரிசுக் கடிதங்களும் எளிதில் கிடைக்கும். வெளிநாடு சென்று, உயர் கல்வி பயில ஆர்வமிருப்பின், அது இனிதே நிறைவேறும்.
விவசாயத் துறையினர்: செவ்வாய் மற்றும் சூரியன் ஆகிய இரு கிரகங்களும் விவசாயத் துறையிடம் நேரிடையான தொடர்பு கொண்டுள்ளவைகளாகும்! இவ்விரு கிரகங்களும் அனுகூலமாக சஞ்சரிப்பதை விளைச்சல் கண்கூடாக எடுத்துக்காட்டுகிறது. பயிர்கள் செழித்து வளர்ந்திருப்பதைக் காண்பீர்கள். தண்ணீர் வசதி குறைவின்றிக் கிடைக்கும். அரசாங்கச் சலுகைகள், உற்சாகத்தை அதிகரிக்கச் செய்யும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி பெறலாம். கால் நடைகள் சிறந்த அபிவிருத்தியை அடையும்.
பெண்மணிகள்: பெண்மணிகளின் நலன்களுக்குப் பொறுப்பேற்றுள்ள சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் உங்களுக்கு ஆதரவாக வலம் வருவதால், மகிழ்ச்சியையும், மன நிறைவையும் அளிக்கும் கால கட்டமிது! திருமணமான பெண்மணிகள் கருத்தரிக்க சுக்கிரன், குரு மற்றும் சூரியன் ஆகிய மூவரும் சுப பலம் பெற்றுத் திகழ்கின்றனர்.
அறிவுரை: கைப்் பணத்தைச் சிக்கனமாக செலவு செய்யுங்கள்.
பரிகாரம்: வெள்ளிக் கிழமைகளில், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் மாலையில் நெய் தீபம் ஏற்றிவந்தால் போதும். இயலாதவர்கள் உங்்கள் வீட்டுப் பூஜையறையில் இதே பரிகாரத்தை செய்யலாம்.


