(கிருத்திகை 2ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2ம் பாதம் வரை)
14-04-2026 முதல் 13-04-2027 வரை
குடும்பம்: தன ஸ்தானத்தில் குரு பகவான் வக்கிர கதியில் வலம் வருவதால், எதிர்பாராத செலவுகளில் பணம் விரயமாகும். பல தருணங்களில் பிறரிடம் பண உதவி நாட வேண்டிய அவசியம் ஏற்படக்கூடும். கூடிய வரையில், தவிர்ப்பது எதிர்காலத்திற்கு உதவும். உடல் ஆரோக்கியத்திலும் கவனமாக இருத்தல் அவசியம் என்பதை கிரக நிலைகள் வற்புறுத்துகின்றன. வெளியூர்ப் பயணங்களின்போது, கைப் பணத்தின் மீது கவனம் இருக்கட்டும். களவு போக வாய்ப்புள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. குரு பகவான் வக்கிர கதியில் சஞ்சரிப்பதால், திருமண முயற்சிகளில் சிறு, சிறு பிரச்னைகள் ஏற்பட்டு, அதன் பின்பே வரன் அமையும். கணவர் - மனைவியரிடையே பரஸ்பர வாக்குவாதம் ஏற்பட்டு, அந்நியோன்யம் குறையக்கூடும். நெருங்கிய உறவினர்களிடையே ஒற்றுமை குறையும். விட்டுக் கொடுப்பார் கெட்டுப்போவதில்லை என்பதற்கேற்ப, நீங்கள் சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால், சகஜநிலை திரும்பும்.
உத்தியோகம்: சக-ஊழியர்கள், மேலதிகாரிகள் ஆகியோருடன் பழகும்போது சற்று எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்பதை கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன. சில தருணங்களில், உங்கள் பேச்சுகளே உங்களுக்கு பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும். சகஊழியர்களுடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்தல் அவசியம். யாரையும் நம்பி, அலுவலக விஷயங்களைப் பற்றி விவாதிக்க வேண்டாம். ஒருசிலருக்கு இடமாற்றம் அல்லது பதவி மாற்றம் ஏற்படக்கூடும். ஒப்புக்கொள்வது, உங்கள் எதிர்கால நலனிற்கு உகந்தது. புதிய வேலைக்கு முயற்சித்துவரும் ரிஷப ராசி அன்பர்கள், பிறரால் ஏமாற்றப்படக்கூடும். எச்சரிக்கை அவசியம்.
தொழில், வியாபாரம்: சந்தை நிலவரம் அனுகூலமாக இல்லை! அஜாக்கிரதையாக இருப்பின், நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். சகக் கூட்டாளிகளில் சிலர் விலகிச் சென்றுவிடுவார்கள். வங்கி மற்றும் இதர நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு குறையக்கூடும். அதன் காரணமாக, அடிக்கடி பணப் பிரச்னை ஏற்படக்கூடும்.வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பும் குறையக்கூடும். புதிய முதலீடுகளில் ஈடுபடவேண்டாம்.ஏற்றுமதித் துறையினர், கடனுக்கு பொருட்களை அனுப்புவதைத் தவிர்த்தல் மிக, மிக அவசியம்.
கலைத் துறையினர்: எதிர்பார்த்திருந்த பல லாபகரமான வாய்ப்புகள், ஏமாற்றத்தை ஏற்படுத்தும். கிடைக்கும் சொற்ப வாய்ப்புகளிலும் வருமானம் குறைவாகவே இருக்கும். பரதநாட்டியப் பள்ளிகளில் மாணவ - மாணவியரின் சேர்க்கை குறையும். கைப் பணத்தை எண்ணிச் செலவழிப்பது அவசியம். திரைப்படத் தயாரிப்பாளர்கள், பணப்பிரச்னைகளில் சிக்கிக் கொள்ள நேரிடும். அதனால், படங்கள் பாதியில் நின்றுபோகும். நடிகர் மற்றும் நடிகைகளுக்கு வாய்ப்புகள் குறையும். பலர் வருமானக் குறைவினால் சிரமப்படுவார்கள்.
அரசியல் துறையினர்: உட்கட்சிப் பூசல்களினால், மன அமைதி பாதிக்கப்படக்கூடும். மேல்மட்டத் தலைவர்களின் ஆதரவும் குறையக்கூடும். மக்களிடையே செல்வாக்கு குறையும். பிற அரசியல் கட்சிகளிடமிருந்து, அழைப்பு வரும். எத்தகைய முடிவானாலும், ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுப்பது உங்கள் எதிர்காலத்திற்கு நன்மை தரும்.
மாணவ - மாணவியர்: கல்வித் துறையைத் தங்கள் ஆதிக்கத்தில் கொண்டுள்ள புதனும், மற்ற கிரகங்களும் சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், கல்வி முன்னேற்றம் தடங்கலின்றி நீடிக்கிறது. ஆசிரியர் - ஆசிரியைகள் ஆகியோரின் உதவி எளிதில் கிட்டும். பலருக்கு, கல்வி உதவித் தொகை கிடைக்கும். உயர் கல்விக்கு வெளிநாடு செல்ல ஆர்வமிருப்பின், தற்போது முயற்சிக்கலாம். வெற்றி கிட்டும்.
விவசாயத் துறையினர்: விவசாயத் துறையை தங்களது அதிகாரத்தில் கொண்டுள்ள சூரியனும், செவ்வாயும் சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், நல்ல விளைச்சல் மகிழ்ச்சியைத் தரும். உரம், தண்ணீர், விதைகள் தங்கு தடையின்றி கிடைக்கும். அரசாங்கச் சலுகைகள் கிடைப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. சந்தையில் உங்கள் விளைச்சல்களுக்கு நல்ல விலை கிடைக்கும். கால்நடைகள் அபிவிருத்தியடையும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெறலாம். தசா, புக்திகள் அனுகூலமாக இருப்பின், புதிய விளைநிலம் மற்றும் கால்நடைகள் வாங்கும் யோகமும் கிட்டும்.
பெண்மணிகள்: அமைதியையும், மன நிறைவையும் அளிக்கும்படி அமைந்துள்ளன, கிரக நிலைகள்! குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். திருமணத்திற்கு காத்துள்ள கன்னியருக்கு, மனத்திற்கு இசைந்த வரன் அமையும். வேலைக்கு முயற்சித்துவரும் வனிதையருக்கு, மனத்திற்குப் பிடித்த நிறுவனத்தில், நல்ல ஊதியத்தில் வேலை கிடைக்கும். மழலைப் பாக்கியத்திற்கு ஏங்கி நிற்கும் பெண்மணிகளுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பும் சிறப்பாக உள்ளது. ஏற்கனவே கருவுற்றிருக்கும் பெண்மணிகளுக்கு சுகப் பிரசவம் ஏற்படும்.
அறிவுரை: பெண்மணிகள் வீட்டில் நடக்கும்போதும், வெளியில் செல்லும்போதும், நிதானமாக நடந்து செல்வது அவசியம். ஏனெனில், சில தருணங்களில் கீழே விழுந்து அடிபடுவதற்கு சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
பரிகாரம்: சனி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் மாலைவேளையில், தீபத்தில் எள் எண்ணெய் சேர்த்து வருவது மிகச் சிறந்த பரிகார பலனை அளிக்கும். அவ்விரு கிழமைகளிலும், பசுவிற்கு உணவளிப்பதும் உடனுக்குடன் பலனளிக்கும் பரிகாரங்களாகும்.


