உத்திரம் 2ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2ம் பாதம் வரை
14-04-2026 முதல் 13-04-2027 வரை
குடும்பம்: வருமானம் போதிய அளவிற்கு இருப்பதால், வசதிக்குக் குறைவிராது. பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து நிம்மதி பெற ஏற்ற தருணமிதுவே! திருமண வயதில் பெண் அல்லது பிள்ளை இருப்பின், மனத்திற்கு மகிழ்ச்சியை அளிக்கும் வரன் அமையும். குடும்பத்தில், சுப நிகழ்ச்சிகளாகிய நிச்சயதார்த்தம், திருமணம், சீமந்தம் (வளைகாப்பு) பிள்ளைப் பேறு நிகழும். அதனால் வீட்டில் மகிழ்ச்சிக்குக் குறைவிராது!
படித்து, வேலைக்கு முயற்சித்துவரும் பெண் அல்லது பிள்ளைக்கு நல்ல நிறுவனத்திலிருந்து பணி நியமனம் உத்தரவு கிடைக்கும். வெளிநாட்டுப் பணிக்கு முயற்சித்துவரும் கன்னி ராசி அன்பர்களுக்கு நல்ல நிறுவனத்தில் பணி கிடைக்கும். அதன் காரணமாக, வெளிநாடு செல்ல வேண்டிய அவசியமும் ஏற்படும்.
உத்தியோகம்: படித்து, வேலைக்கு முயற்சித்துவரும் இளைஞர்கள், மகளிருக்கு, நல்ல செய்தி காத்துள்ளது. தற்காலிகப் பணிகளில் உள்ள அன்பர்களுக்கு, பணி நிரந்தரம் ஆகும். மேலதிகாரிகளின் ஆதரவும், சக-ஊழியர்களின் ஒத்துழைப்பும் அன்றாடப் பணிகளில் உற்சாகத்தையளிக்கும். அந்நிய நாடு ஒன்றிற்குச் சென்று, பணியாற்றி பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆவல் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வெற்றி கிட்டும். ஆயினும், குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க நேரிடும்.
தொழில், வியாபாரம்: சந்தையில் கடினப் போட்டியைச் சமாளிக்க நேரிடும். உழைப்பிற்கேற்ற லாபம் கிட்டும். புதிய கிளைகளைத் தொடங்கும் முயற்சிகளை சிறிது ஒத்திப்போடுவது நல்லது. நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு கிடைப்பது சற்று கடினம் என கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. வெளியூர்ப் பயணங்கள் ஓரளவே லாபகரமாக இருக்கும். ஏற்றுமதித் துறையினருக்கு கிரக நிலைகள் சாதகமாக இல்லை. அந்நிய நாடுகளில் உருவாகிவரும் அரசியல் மாறுதல்கள் உங்கள் லாபத்தையும் பாதிக்கும். சகக் கூட்டாளிகளுடன் கருத்துவேற்றுமையும் ஏற்படக்கூடும்.
கலைத் துறையினர்: ஓரளவே வாய்ப்புகள் கிடைக்கும் என கிரக நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன.கையிலுள்ள வசதியை அளவோடும், திட்டமிட்டும் செலவு செய்தல் அவசியம். எதிர்பார்த்திருந்த வெளிநாட்டு வாய்ப்புகள், கடைசி விநாடியில் கைநழுவிப் போகும். நடிகர்கள், நடிகைகள் மற்றும் சினிமாத் துறையை நம்பியிருக்கும் கலைஞர்களுக்கு, கைப் பணத்தை எண்ணிச் செலவிடுவது நல்லது. திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு, எதிர்பார்த்திருந்த வங்கி உதவிகள், கடைசி நேரத்தில் ஏமாற்றத்தை அளிக்கக்கூடும். ‘‘ஆசை வேறு! அதிர்ஷ்டம் வேறு” - திரைப்படத் துறையினருக்கு இது முற்றிலும் பொருந்தும்.
அரசியல் துறையினர்: அரசியல் துறைக்கு ஆதிக்கம் கொண்டுள்ள சுக்கிரனும், இதர கிரகங்களும் ஓரளவே உதவிகரமாக சஞ்சரிக்கின்றனர். அதிகமாக எதிர்பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சும்! கூடிய வரையில், பிற அரசியல் கட்சிகளை வெளிப்படையாகப் பகைத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் எதிர்காலத்திற்கு இது உதவும். ஒருசிலருக்கு, கட்சி மாற்றம் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
மாணவ - மாணவியர்: கல்வித் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள புதன், சுப பலம் பெற்று மாணவ - மாணவியருக்கு ஆதரவாக சஞ்சரிப்பதால், கல்வியில் மனம் தீவிரமாக ஈடுபடும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றுத் திகழ்வீர்கள் என கிரக நிலைகள் உறுதியளிக்கின்றன. உயர் கல்வி பயில விருப்பமிருப்பின், அதற்கான பூர்வாங்கத் திட்டங்களில் ஈடுபடலாம். தேவையான பண உதவியும், சிபாரிசுகளும் உங்களுக்கு எளிதில் கிட்டும்.
விவசாயத் துறையினர்: வயல் பணிகளுக்கு அவசியமான தண்ணீர், உரம் மற்றும் விதைகள் ஆகிய வசதிகள் தடையின்றிக் கிடைக்கும். குறிப்பிட்ட காலங்களில் மழை பொழியும். நவீன விவசாய வசதிகள் எளிதில் கிட்டும். அரசாங்கச் சலுகைகள், வயல் பணிகளில் உற்சாகத்தையளிக்கும். கால்நடைகள் சிறந்த அபிவிருத்தியை அடையும். அவற்றின் பராமரிப்பிற்கு அவசியமான பொருட்கள் நியாய விலையில் கிடைக்கும். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், புதிய விளைநிலம் வாங்கும் யோகம் உள்ளதையும் கிரக நிலைகள் குறிப்பிட்டுக்காட்டுகின்றன. ஒரு சிலருக்கு, புதியகால்நடைகள் வாங்கும் யோகமும் அமைந்துள்ளது. பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெற ஏற்ற தருணம் இதுவே!
பெண்மணிகள்: பெரும்பான்மையான கிரகங்கள் உங்களுக்குச் சாதகமாகவே வலம் வருவதால், இக்கால கட்டம் முழுவதும், நன்மைகளே அதிகளவில் இருக்கும் எனக் கூறுகிறது, ‘‘ஜோதிட பாரிஜாதம்” -எனும் புராதன ஜோதிட நூல். பயன்படுத்திக் கொள்வது, அவரவரது திறமையில்தான் உள்ளது!
அறிவுரை: ‘‘கிரக நிலைகளின்படி, நல்ல சந்தர்ப்பங்கள் உருவாகும்போது, நமது திறமையைப் பயன்படுத்தி, நன்மைகளை அடைந்து, இன்புற வேண்டும்” -எனக் கூறுகிறது, ‘‘பிருஹத் ஸம்ஹிதை” எனும் மிகப் புராதன ஜோதிடக் கிரந்தம்.
பரிகாரம்: சனிக்கிழமைதோறும், பசுவிற்கு உணவளிப்பது மிகச் சிறந்த சனிப் பரிகாரமாகும். இயலாவிடில், ஏழை ஒருவருக்கு உணவளித்தலும் அதே புண்ணிய பலனையளிக்கும்.


