search-icon-img
featured-img

கும்பம்

Published :

அவிட்டம் 3ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3ம் பாதம் வரை

14-04-2026 முதல் 13-04-2027 வரை

குடும்பம்: ஜென்ம ராசியில் ராகுவும், தன ஸ்தானத்தில் சனி - செவ்வாய் கூட்டுச் சேர்க்கையும் ஏற்பட்டுள்ளது! வரவை விட, செலவுகளே அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்திலும் கவனமாக இருத்தல் நல்லது. உஷ்ண சம்பந்தமான சரும உபாதைகள் உடலை வருத்தக்கூடும். வெளியூர்ப் பயணங்களினால், அலைச்சல் சக்திக்கு மீறியதாக இருக்கும். சில தருணங்களில், புதிய கடன்களை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகும். மருத்துவச் செலவுகளைத் தவிர்க்க இயலாது. திருமண முயற்சிகளில், தடங்கல்கள் ஏற்பட்டு அதன் பின்பு வரன் அமையும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு பகவான் அமர்ந்திருப்பதால், தீர்த்த - திருத்தல யாத்திரை யோகம் அமைந்துள்ளது.

தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், கங்கா ஸ்நான பாக்கியமும் கிட்டும். மகான்களின் தரிசனமும், ஆசிகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.

உத்தியோகம்: ஜீவன காரகரான சனி பகவான் தனஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், வேலைப் பளு அதிகமாக இருப்பினும், பலருக்கு சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், சிறு பதவியுயர்வு ஒன்றும் கிடைக்கக்கூடும். சிலருக்கு, இடமாற்றமும், ஊர் மாற்றமும் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.

தொழில், வியாபாரம்: சந்தையில், போட்டிகள் அனைத்தையும் முறியடித்து, லாபம் காண்பீர்கள்!உங்்கள் சரக்குகளுக்கு, நல்ல தேவை ஏற்படும். நிதி நிறுவனங்களின் ஆதரவு துணை நிற்கும். புதிய கிளைகள் திறப்பதற்கு கிரக நிலைகள் சாதகமாக உள்ளன. ஒருசிலருக்கு, வெளிநாடு சென்று - வரும் சாத்தியக்கூறு உள்ளதையும் கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. பிரபல வெளிநாட்டு வர்த்தக நிறுவனமொன்றுடன் விற்பனை

ஒப்பந்தம் கையெழுத்தாகும்.சகக் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு உற்சாகத்தையளிக்கும்.

கலைத் துறையினர்: கலைத் துறையைத் தங்கள் பிடியில் கொண்டுள்ள கிரகங்கள் அனைத்தும், சுப பலம் பெற்று வலம் வருவதால், கலைத் துறை அன்பர்களுக்கு, வாய்ப்புகள் தேடி வரும். வருமானம் உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். புதிய படங்கள் மகத்தான வெற்றியைப் பெற்றுத் தரும். லாபமும் எதிர்பார்ப்பை விட சற்று அதிகமாகவே இருக்கும் என கிரக நிலைகள் உறுதியளிக்கின்றன. திரைப்பட நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு வருமானம் உயரும். மக்களிடையே பிரபலமாவீர்கள்.

அரசியல் துறையினர்: சுக்கிரன் இக்கால கட்டம் முழுவதும், சுப பலம் பெற்றுத் திகழ்வதால், கட்சியில் செல்வாக்கும், ஆதரவும் அதிகரிக்கும். உயரதிகாரத்திலுள்ள ஒரு பிரமுகரின் நட்பு, உற்சாகத்தையளிக்கும். ஒரு சிலருக்கு, கட்சி மாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது. எத்தகைய முடிவானாலும், சற்று சிந்தித்து முடிவெடுப்பது உங்கள் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும். அவசர முடிவு, எதிர்காலத்தில் ஏமாற்றத்தில் கொண்டுவிடக்கூடும் என, சனி மற்றும் ராகுவின் நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன. இவ்விரு கிரகங்களும், குழப்பத்தை ஏற்படுத்துவதில் தன்னிகரற்றவைகளாகும்!

மாணவ - மாணவியர்: புதன் ஓரளவே சாதகமாக சஞ்சரிக்கிறார், இக்கால கட்டம் முழுவதுமாக! சனி பகவானும், சரியில்லை. பாடங்களில் மனம் ஈடுபடுவது சற்று கடினமே! தேவையற்ற தவறான எண்ணங்கள் மன நிம்மதியைப் பாதிக்கும். ஒருசிலருக்கு, கூடா நட்பு ஏற்படக்கூடும். அது உங்கள் கல்வி முன்னேற்றத்தை வெகுவாகப் பாதிக்கும். விடுதிகளில் தங்கிப் படித்துவரும் மாணவ - மாணவியர் உல்லாசப் பயணங்களைத் தவிர்ப்பது மிகவும் அவசியம். உடல் ஆரோக்கியத்திலும் கவனமாக இருத்தல், எதிர்காலத்திற்கு நன்மை செய்யும். வெளிநாடு சென்று உயர் கல்வி பெற விருப்பமிருப்பின், சலுகைகள் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படும்.

விவசாயத் துறையினர்: சூரியன் மற்றும் செவ்வாய் ஆகிய இரு கிரகங்களும் விவசாயத் துறையின் மீது ஆதிக்கம் கொண்டுள்ளனர். இவ்விரு கிரகங்களும் ஓரளவே அனுகூலமாக இருப்பதால், விவசாய வசதிகள் போதிய அளவிற்குக் கிடைக்கும். ஆயினும், வயல் பணிகள் சற்று கடுமையாகவே இருக்கும். விஷ ஜந்துக்களால் பாதிப்பு ஏற்படக்கூடும் என கிரக நிலைகள் எச்சரிக்கை செய்வதால், இரவு நேரங்களில் வயல் பணிகளை மேற்கொள்ளாமலிருப்பது அவசியம். பழைய கடன்கள் நீடிப்பதால், மன அமைதி பாதிக்கப்படக்கூடும்.

பெண்மணிகள்: சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஆகிய இரு கிரகங்களும், பெண்மணிகளின் நலன்களில் முக்கிய ஆதிக்கம் செலுத்துபவை! இவ்விரு கிரகங்களும், ஓரளவே அனுகூலமாக உள்ளன. குறிப்பாக, வயல் பணிகளின்போது தனியே செல்வதைத் தவிர்ப்பது அவசியம்.

அறிவுரை: உடல் நலனில் கவனமாக இருங்கள். குறிப்பாக, விஷ ஜந்துக்களால் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும்.

பரிகாரம்: செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில், காகத்திற்கு அல்லது பசுவிற்கு ஐந்து சாத உருண்டைகள் கொடுப்பது அளவற்ற, சக்திவாய்ந்த பரிகாரமாகும்.