(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)
குடும்பம்: புரட்டாசி முடியும் வரையில், வருமானம் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். செலவுகளும், கட்டுக்கடங்கியே இருக்கும். குருபகவானின் சுப சஞ்சாரத்தின் பலனால், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும். இவற்றின் காரணமாக, சுபச் செலவுகள் அதிகமாக இருப்பினும், சமாளிப்பதில் பிரச்னை இராது. லாப ஸ்தானத்தில் ஆயுள்காரகரான சனி பகவான், ராகுவுடன் சேர்ந்திருப்பதால், ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். அலைச்சல்கள் குறையும். ஒருசிலருக்கு, வசதியான வீட்டிற்கு மாற்றமும் ஏற்படக்கூடும் என கிரக நிலைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. ஐப்பசி மாதம் முதல், படிப்படியாக குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்படும். கணவர் – மனைவியரிடையே ஒற்றுமை குறையும். வெளிநாடு ஒன்றில் பணியாற்றிவரும் பெண், பிள்ளை அல்லது மாப்பிள்ளையின் வேலையில் மாற்றம் உண்டாகும். விவாக முயற்சிகளில், தடங்கல்கள் ஏற்பட்டு, கவலையளிக்கும்.
உத்தியோகம்: உழைத்த, உழைப்பிற்குப் பாராட்டுதல்களும், அங்கீகாரமும் கிடைப்பது, பணிகளில் உற்சாகத்தை அதிகரிக்கும். சக-ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலகச் சூழ்நிலை மனதிற்கு அமைதியை அளிக்கும். தசா – புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், சிறு பதவியுயர்வு ஒன்றும் கிடைப்பதற்கு சாத்தியக்கூறு உள்ளது. ஐப்பசி மாதம் முதல், மேலதிகாரிகளின் போக்கில் மாற்றம் ஏற்படும். அதன் காரணமாக, எதிர்காலத்தைப் பற்றி அச்சம் மேலிடும். சிறு தவறும், பெரிய தவறுபோல் நிர்வாகத்தினரிடம் சித்தரிக்கப்படும்.
தொழில், வியாபாரம்: சந்தை நிலவரம் மிகவும் அனுகூலமாக உள்ளது. உங்கள் சரக்குகளுக்கு நல்ல விலை கிடைக்கும். நியாயமற்ற போட்டிகளைச் சந்தித்தாலும், சமாளித்துவிடுவீர்கள். உற்பத்தியைச் சற்று அதிகரித்துக் கொள்ளலாம். நிதி நிறுவனங்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். ஐப்பசி முதல், பல பிரச்னைகள் உருவாகும். பிற மாநிலங்களிலிருந்து, வந்து பணியாற்றும் தொழிலாளர்களினால் பிரச்னைகள் உருவாகும். அவர்களின் கோரிக்கைகளை ஏற்க இயலாத அளவிற்கு, நியாயமற்றவையாக இருக்கும். நிலைமைக்கு ஏற்ப, உற்பத்்தியைக் குறைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். சூழ்நிலைக்கு ஏற்ப, நிதானமாகவும், உணர்ச்சிவசப்படாமலும், நிலைமையைக் கையாள்வது, விவேகமாகும்.
கலைத் துறையினர்: புரட்டாசி மாதம் முடியும் வரை, வருமானம் போதிய அளவிற்கு இருக்கும். குடும்பச் செலவுகளைச்சமாளிப்பதுடன், ஓரளவு சேமிப்பிற்கும் சாத்தியக்கூறு உள்ளது. திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு, இந்தத் தமிழ்ப் புத்தாண்டு நம்பிகையூட்டும் வகையில் ஆரம்பிக்கிறது. வங்கிகளின் ஆதரவும், நிதியுதவிகளும், சலுகைகளும் அதிகம் பாடுபடாமல் கிடைக்கும். இப்போது, தயாரிக்கும் படங்கள் நல்ல வசூலைப் பெற்றுத் தரும். ஒருசிலருக்கு, வெளிநாடு சென்று, அங்கு நிகழும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பும் அதனால் வருமானம் உயர்வும் கிட்டும். ஐப்பசி மாதம் முதல், கிரக நிலைகள் மாறுவதால், வருடம் முடியும் வரையில், படிப்படியாக செலவுகள் அதிகரிக்கும். வாய்ப்புகளும் குறைவதால், பணப் பற்றாக்குறை ஏற்பட்டு, கவலையை அளிக்கும்.
அரசியல் துறையினர்: விசுவாவசு தமிழ் புத்தாண்டு முதல் ஆறு மாதங்கள் உற்சாகமான காலகட்டமாகும். கட்சியில் ஆதரவு பெருகும். செல்வாக்கு உயரும். மறைமுக வருமானத்திற்குக் குறைவிராது. பொது மேடைப் பேச்சுகளில், உற்சாகம் மேலிடும். உங்கள் பேச்சுத் திறமை மற்ற அரசியல் கட்சியினரின் வயிற்றில் புளியைக் கரைக்கும்! இருப்பினும், ஐப்பசி மாதம் முதல், உங்கள் பேச்சில் நிதானத்தை இழக்காமலும், பிற அரசியல் கட்சித் தலைவர்களைத் தரக்குறைவாகப் பேசாமல், வார்த்தைகளை அளந்து பேசுவதும் அவசியம். அஜாக்கிரதையாக இருப்பின், வழக்குகளில் மீண்டும் சிக்கிக்கொள்ள சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன. பங்குனி மாதம் முடியும் வரையில், உயர்மட்டத் தலைவர்களுடன் கருத்துவேற்றுமை ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளது.
மாணவ – மாணவியர்: புரட்டாசி மாதம் முடியும் வரையில், கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக உள்ளன. பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும். நினைவாற்றல் அதிகரிக்கும். உயர் கல்விக்கு, உதவிகள் எளிதில் கிட்டும். ஆசிரியர்களின் ஆதரவு, கல்வியில் உற்சாகத்தை ஏற்படுத்தும். ஐப்பசி மாதத்திலிருந்து, படிப்பில் சிறிது நாட்டம் குறையும். “கூடா நட்பு” ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன. பாடங்களுக்கு சம்பந்தமில்லா விஷயங்களில் மனம் செல்லக்கூடும். தேர்வுகளில், விடையளிக்கும்போது, படித்தவை மறந்துபோகும். மனக்கூர்மை (concentration) குறையும்.
விவசாயத் துறையினர்: புத்தாண்டின் முதல் ஆறுமாதக் காலம், சிறந்த யோக பலன்களை அளித்தருள்வார்கள், தண்ணீர் வசதி, போதுமான அளவிற்கு இருக்கும். உழைப்பிற்கேற்ற விளைச்சல் கிடைக்கும். அரசாங்கத்தின் ஆதரவு, மனதிற்கு உற்சாகத்தை அளிக்கும். ஐப்பசி மாதம் முதல்,தேவைக்கு அதிகமான தண்ணீர் வரவு, அதிக மழை, பயிர்ச்சேதம் உண்டாகும். கால்நடைகளின் பராமரிப்பில் பணவிரயம் ஏற்படும். அண்டை நிலத்தவரோடுபகையுணர்ச்சி மேலிடும்.
பெண்மணிகள்: சித்திரை மாதம் முதல், புரட்டாசி வரை, கிரக நிலைகள் உங்களுக்கு உதவிகரமாக உள்ளன. விருப்பங்களனைத்தும் நிறைவேறும். உடல்நலன் திருப்திகரமாக இருக்கும். வேலைக்கு முயற்சிக்கும் வனிதையருக்கு, நல்ல வேலை கிடைக்கும். ஐப்பசி மாதத்திலிருந்து, கிரக நிலைகள் படிப்படியாக, மாறுவதால், பங்குனி முடியும் வரை குடும்பப் பிரச்னைகள் கவலையை அளிக்கும். கணவர் – மனைவியரிடையே ஒற்றுமைக் குறையும், ஆரோக்கியத்திலும், பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
அறிவுரை: ஐப்பசி மாதத்திலிருந்து, கிரக நிலைகள் சாதகமாக இல்லை. உடல் நலனில் கவனம் இருக்கட்டும். கைப்பணத்தை எண்ணி, எண்ணிச் செலவழியுங்கள். தேவையானாலொழிய வெளியில் அலைவதைத் தவிர்க்கவும்.
பரிகாரம்: தினமும் காலை, மாலை இருவேளைகளிலும், கந்தர் சஷ்டி கவசம் படித்துவந்தால் போதும்.