புனர்பூசம் 4ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் வரை
குடும்பம்: இதுவரை லாப ஸ்தானமாகிய, ரிஷப ராசியில் சஞ்சரித்த குரு பகவான், சித்திரை 28-ஆம் (11-5-2025) தேதி விரய ஸ்தானத்திற்கு மாறுகிறார். அதே தருணத்தில், அஷ்டம (8) ஸ்தானத்தில் சனி – ராகு சேர்க்கையும் ஏற்படுகிறது! மார்கழி 6 (21-12-2025)-ஆம் தேதியன்றுதான் குரு பகவான், மிதுன ராசிக்கு மாறுகிறார்!! ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம். சிறு உடலுபாதையானாலும், மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெறுவது நல்லது. எத்தகைய தருணங்்களில், நம் வாழ்க்கையில் எந்தெந்த அம்சங்களில் நாம் எச்சரிக்கையுடன் இருந்துகொள்ள வேண்டும் என்பதை, நமக்கு முன்கூட்டியே எடுத்துக் காட்டி உதவும் காலக் கண்ணாடியாகவும், நண்பனாகவும் திகழ்கிறது, ஜோதிடக் கலை! வருமானத்தைவிட, ெசலவுகளே அதிகமாக இருக்கும். ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே, சிக்கனத்துடன், திட்டமிட்டு செலவு செய்வது பண நெருக்கடி ஏற்படாமலிருக்க உதவிகரமாக இருக்கும். குருபகவானின் நிலையினால், நெருங்கிய உறவினர்களிடையே ஒற்றுமைக் குறைவு ஏற்படும். ஒருவரையொருவர் விட்டுக் கொடுத்தும், சற்று அனுசரித்தும் நடந்துகொண்டால், குடும்ப அமைதி பாதிக்கப்படாமலிருப்பதற்கு உதவும். 8-ம் இடத்தில் ராகு – சனி பகவான் சேர்க்கை உள்ளதால், இரவு நேரங்களில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்ப்பது அவசியம். சூட்சும ஜோதிடக் கிரந்தங்களில், சனி – ராகு சேர்க்கையின்போது ஏற்படும் தோஷம் இரவில் 10.30 மணிக்கு மேல், அதிகாலை 4.30 வரை அதிக வீரியத்துடன் இருக்கும் என விவரிக்கப்பட்டுள்ளது. அதனால்தான், பெரும்பான்மையான பெரிய விபத்துகள், இத்தகைய இரவு நேரங்களில் நிகழ்கின்றன. கூடிய வரையில், அதிக உழைப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
உத்தியோகம்: ஜீவன காரகரான சனி பகவான், ராகுவுடன் சேர்ந்து ஆயுள் ஸ்தானமாகிய 8-ம் இடத்தில் இணைந்திருப்பது அன்றாடக் கடமைகளில் நீங்கள் கவனமாக இருக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. சித்திரை 28 (11-5-2025)-ஆம் தேதியிலிருந்து, சனி பகவானுக்கும், ராகுவிற்கும் குரு பகவானின் பார்வை கிடைப்பது, தோஷத்தைக் குறைக்கிறது. இருப்பினும், மேலதிகாரிகளுடனும், சக-ஊழியர்களுடனும் சற்று அனுசரித்து நடந்துகொள்வது அவசியம். மேலும், ஓர் முக்கியமான அம்சம் என்னவென்றால், சக-ஊழியர்களின் சொந்தப் பிரச்னைகளில் நீங்களா ஈடுபடுத்திக் கொள்ளமலிருப்பது, மிகவும் அவசியம் என்பதையும், இப்புத்தாண்டின் கிரக நிலைகள் வற்புறுத்்திக் கூறுகின்றன.
தொழில், வியாபாரம்: வர்த்தகத் துறையுடன் நெருங்கிய தொடர்புகொண்டவை சனியும், ராகுவும்! தற்போதுள்ள கிரக நிலைகள் சாதகமாக இல்லை!! இந்த கிரக நிலை, மாசி 21 (மார்ச் 5-3-2026)ஆம் தேதி வரை நீடிக்கிறது. அதன் பிறகு, கிரக நிலைகள் படிப்படியாக அனுகூல நிலைக்கு மாறுகின்றன. ஆதலால், இந்த தமிழ் புத்தாண்டில் பண விஷயங்களில் கண்டிப்புடன் இருக்கவேண்டியதை வற்புறுத்துகின்றன. முன்பணமின்றி சரக்குகளை அனுப்பினால், அவற்றிற்கான பணம் வருவதில், பிரச்னைகளை ஏற்படுத்தும். Cash and carry என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம் என்பதை கிரக நிலைகள் சுட்டிக்காட்டுகின்றன,
கலைத் துறையினர்: செப்டம்பர் மாதம் முடியும் வரை, சற்று சிரமமான காலகட்டம் என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. கூடியவரையில், கையிலுள்ளதை வைத்துச் சமாளிக்க வேண்டிய தருணமிது என்பதையும், சுக்கிரன் – சனி பகவான் ஆகியோரின் சஞ்சார நிலைகள் குறிப்பிடுகின்றன. குறிப்பாக, திரைப்படத் துறையினருக்கு, சற்று தாராளமாகவே செலவழிப்பது, பழக்கத்தில் வந்துவிட்டது. இதை ஏன் கூறுகிறோம் என்றால், இப்புத்தாண்டின் முதல் ஆறு மாதக் காலம் உங்களுக்கு கிரக நிலைகள் அனுகூலமாக இல்லை. அதிலும் குறிப்பாக, பண விஷயங்களில், நீங்கள் அதிஜாக்கிரதையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை, கிரகங்கள் உங்கள் நன்மைக்காகவே எச்சரிக்கை செய்கின்றன.
அரசியல் துறையினர்: புரட்டாசி மாதம் முடியும் வரையில், உங்களுக்கு கிரக நிலைகள் அனுகூலமாக இல்லை! மேல்மட்டத் தலைவர்கள் வரவிருக்கும் தேர்தலில், எவ்விதமாவது வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வத்தில், உங்களைக்் கட்சியிலிருந்தே விலக்கிவிடலாம் என்ற எண்ணத்தில் இருப்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. அரசியலில் வெற்றிக்கே முதலிடம்! “நன்றி” என்ற சொல்லிற்கே அரசியலில் இடமில்லை!! இந்த உண்மையை நீங்கள் எந்த அளவிற்கு உணர்ந்து கொள்கிறீர்களோ, அந்த அளவிற்கே அரசியலில் வெற்றியடைய முடியும். இதை அரசியல் வித்தகரான சாணக்கியர் தனது அர்த்த சாஸ்திரத்தில் கூறியுள்ளார்.
மாணவ – மாணவியர்: இப்புத்தாண்டு முழுவதிலும் புதன், ஓரளவு உங்களுக்கு அனுகூலமாக சஞ்சரிப்பதால், கல்வியில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பாடங்களில் மனம் எவ்வித சபலமுமில்லாமல் ஈடுபடும். கூடிய வரையில் சக-மாணவர்களுடன் நெருங்கிப் பழகாமலிருப்பது, உங்கள் எதிர்காலத்திற்கு நன்மை செய்யும் என்பதை சனி – ராகு சேர்க்கை உறுதிசெய்கிறது.
விவசாயத் துறையினர்: பூமிகாரகரான செவ்வாய் மட்டுமின்றி, மற்ற கிரகங்களும், இவ்வாண்டு முழுவதும், உங்களுக்குச் சாதகமாக வலம் வருவதால், உழைப்பிற்கேற்ற விளைச்சலும் வருமானமும் கிட்டும். அஷ்டமத்தில் ராகு – சனி சேர்க்கையினால், வயல் பணிகள் கடுமையாக இருக்கும்.
பெண்மணிகள்: பெண்களின் நலனிற்குப் பொறுப்பேற்றுள்ள இரண்டு கிரகங்களாகிய குரு – சுக்கிரன் இருவரில் சுக்கிரன் மட்டும் இவ்வாண்டு முழுவதும் அனுகூலமாக சஞ்சரிக்கிறார்.
அறிவுரை: ஆயுள் ஸ்தானமாகிய 8-ம் இடத்தில் ராகு . சனி கூட்டுச் சேர்க்கை ஏற்பட்டுள்ளதால், ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் அவசியம். வெளியூர்ப் பயணங்களின்போது, உடைமைகளை ஜாக்கிரதையாக வைத்துக்கொள்ளுங்கள். வெயிலில் தேவையில்லாமல் அலைவதையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.
பரிகாரம்: திருநாகேசுவரம், திருக்கொள்ளிக்காடு, திருநள்ளாறு, திருப்பாம்பு புரம், நாகமாங்களா (கர்நாடகம்) இவற்றில் ஒரு திருத்தலத்தையாவது, குடும்பத்துடன் சென்று தரிசிப்பது சாலச் சிறந்தது.