உத்திராடம் 2ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் வரை
குடும்பம்: இத்தமிழ் புத்தாண்டின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால், மாசி 22 (மார்ச் 6-3- 2026) -ஆம் தேதியுடன் உங்களுக்கு ஏழரைச் சனிக்காலம் முடிவுக்கு வருகிறது! வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றைக் குறிக்கும் கும்ப ராசியில், சனி – ராகு சேர்க்கையும், ராசிக்கு 8-ம் இடமாகிய சிம்ம ராசியில் கேது அமர்ந்திருப்பதும், குடும்பத்தில் வருமானத்தைவிட, செலவுகளே அதிகமாக இருக்கும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. மேலும், சித்திரை 28-ம் (11-5-2025) தேதியன்று குரு பகவான், மீன ராசிக்கு மாறுவதும், அனுகூலமான மாறுதலல்ல!! நெருங்கிய உறவினர்களிடையே ஒற்றுமை குறையும். கணவர் – மனைவியரிடையே கருத்துவேற்றுமை உருவாகும். திருமண முயற்சிகளில், ஏமாற்றமே மிஞ்சும். ஜனனகால தசா, புக்திகள் அனுகூலமாக இல்லாவிடில், பூர்வீகச் சொத்து ஒன்றை இழக்க நேரிடும். நீதிமன்ற வழக்குகள் இருப்பின், இழுபறி நிலை நீடிக்கும். உடல் உபாதைகளுக்காக மருத்துவச் செலவுகள் தவிர்க்க இயலாதவை. சில தருணங்களில் பிறரது பண உதவியை நாட வேண்டி வரும். ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டு செலவு செய்தல் எதிர்காலத்திற்கு நன்மை செய்யும். வெளிநாடுகளில் பணியாற்றிவரும் பெண் அல்லது பிள்ளை – தாய்நாடு திரும்பவேண்டி வரும்.
உத்தியோகம்: ஏழரைச் சனியின் கடைசி பகுதியில் நீங்கள் தற்போது உள்ளீர்கள்! சனி பகவானின் வாக்கின்படி, ஏழரைச் சனியின் கடைசி பகுதியில் அதிக சிரமங்களை ஏற்படுத்தமாட்டார்! இருப்பினும், கூடிய வரையில், அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. மேலதிகாரிகளுடன் வாக்குவாதம் வேண்டாம். சக-ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்து, அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. வெளிநாடுகளில் வேலை வேண்டும் என்பதற்காக, இடைத் தரகர்களை நம்பாமலிருப்பது மிகவும் அவசியம். சித்திரை 13-ம் (26-5-2025) தேதியன்று ராகு, சனியுடன் சேர்வதால், பணிச் சுமை அதிகரிக்கும். இருப்பினும், அதற்காக அதிக ஊதிய உயர்வு மறுக்கப்படும். அதனால், அன்றாடப் பணிகளில் உற்சாகம் குறையும். மனதில் வெறுப்பும், வேறு வேலைக்குச் சென்றுவிடலாமா? என்ற எண்ணமும் மேலிடும். கூடியவரையில் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது மிகவும் அவசியம். மாசி 22-ம் (6-3-2026) தேதியுடன் உங்களுக்கு ஏழரைச் சனி முடிகிறது. ஆதலால், மாசி 23-ம் (7-3-2026)தேதியிலிருந்து, பணியாற்றும் இடத்தில், நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். பலருக்கு, வேறு நிறுவனத்தில் நல்ல வேலை கிடைக்கும்.
தொழில், வியாபாரம்: தமிழ் புத்தாண்டின் ஆரம்பத்திலிருந்து, ஐப்பசி முடியும் வரை, கிரகங்கள் சாதகமாக இல்லை. உற்பத்திக்கு அவசியமான, மூலப்பொருட்களின் விலை பலமடங்கு அதிகரிப்பதால், கடினமான நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க வேண்டிவரும். சந்தை நிலவரத்தை முன்கூட்டியே விசாரித்து, நிலைமைக்குத் தக்கவாறு, உற்பத்தியைக் கூட்டியோ அல்லது குறைத்தோ வைத்துக் கொள்வது, நஷ்டமேற்படாமலிருக்க உதவும். சனி பகவான் மாசி 22-ம் (6-3-2026) தேதியிலிருந்து மீனம் ராசிக்கு மாறுகிறார். இந்த கிரக மாறுதல், உங்களுக்கு பல நன்மைகளை வழங்கவுள்ளது.
கலைத் துறையினர்: கலைத் துறையை, தங்கள் ஆதிக்கத்தில் வைத்துள்ள கிரகங்கள், புரட்டாசி மாதம் 25-ம் (11-10-2025) தேதி வரை சாதகமாக சஞ்சரிக்கின்றனர். அதன் பிறகு, பங்குனி முடியும் வரையில், அனுகூலமாக இல்லை. நல்ல வாய்ப்புகள் கிடைத்து, வருமானத்தையும் அதிகரிக்கும். மக்களிடையே பிரபலமாவீர்கள். சிலருக்கு, வெளிநாடு சென்று, பல நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் சாத்தியக்கூறு உள்ளதையும் கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. இது உங்கள் பொருளாதாரத்தைப் பெருமளவில் அதிகரிக்கும். ரசிகர்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும்.
அரசியல் துறையினர்: அரசியல் துறைக்கு அதிகாரம் படைத்த கிரகங்கள் அனைத்தும், இப்புத்தாண்டில் உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கின்றனர். கட்சியில் ஆதரவு பெருகும். சிலருக்கு, கட்சி மாற்றம் நிச்சயம்!!
மாணவ – மாணவியர்: “வித்யா” துறையை தங்கள் ஆதிக்கத்தில் கொண்டுள்ள அனைத்து கிரகங்களும், இப்புத்தாண்டு முழுவதும் உங்களுக்குச் சாதகமாக சஞ்சரிக்கின்றனர். உயர் கல்விக்கு எளிதில் இடம் கிடைக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றுத் திகழ்வீர்கள். உயர் கல்விக்கு உங்கள் விருப்பம்போல், நீங்கள் இஷ்டப்பட்ட நிறுவனத்தில் இடம் கிடைக்கும். பலருக்கு, வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்கும். அதற்கு அவசியமான, விசாவும், நிதியுதவியும் கிடைக்கும் – எளிதில்!
விவசாயத் துறையினர்: விசுவாவசு தமிழ் புத்தாண்டு, சித்திரை மாதம் முதல் ஐப்பசி 21-ம் தேதி முதல் அனைத்து கிரங்களும் உங்களுக்குச் சாதகமாக சஞ்சரிப்பதால், தக்க தருணத்தில், அளவோடு மழை பெய்யும். கால் நடைகளின் பராமரிப்பு எவ்விதப் பிரச்னையுமின்றி நீடிக்கும். பழைய கடன்கள் பெருமளவில் குறையும்.
பெண்மணிகள்: குரு மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கின்றனர். சித்திரை 28-ம் (11-5-2025) தேதி முதல், புரட்டாசி 21-ம் (7-10-2025) குரு பகவான், உங்களுக்குச் சாதகமாக சஞ்சரிக்கின்றார்! அதன் பிறகு, அவர் அனுகூலமாக இல்லை! சித்திரை 1-ம் தேதி முதல் புரட்டாசி முதல் வாரம் வரை உங்களுக்கு பல நன்மைகள் ஏற்படும்.
அறிவுரை: திட்டமிட்டு செலவு செய்யுங்கள்.
பரிகாரம்: வியாழன் மற்றும்் சனிக்கிழமைகளில், ஏழைப் பெண் ஒருவருக்கு, புத்தாடை கொடுப்பது, மிகச் சிறந்்த பரிகாரமாகும் என, “பரிகார ரத்னம்” எனும் வானியல் ஜோதிட நூல் கூறுகிறது.