மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை
குடும்பம்: களத்திர ஸ்தானமாகிய, கும்ப ராசியில், சனி – ராகு சேர்க்கை ஏற்பட்டுள்ள இத்தருணத்தில், ஜீவன ஸ்தானமாகிய ரிஷபத்தில் குரு அமர்ந்திருக்கும் தருணத்தில், விசுவாவசு புத்தாண்டு பிறக்கிறது. மனைவியின் ஆேராக்கியத்தில், ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை கிரக நிலைகள் வற்புறுத்துகின்றன. சில குடும்பங்களில், கணவர் – மனைவியரிடையே தேவையற்ற வாக்கு வாதமும், பிணக்கமும் ஏற்படக்கூடும். குறிப்பாக, கருவுற்றிருக்கும் பெண்மணிகள், அதிஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும். சிறு, சிறு விபத்துகள் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உள்ளது. திருமணம் போன்ற முயற்சிகளில் வரன் அமைவது கடினமாக இருக்கும். வேலை சம்பந்தமாக, கணவர் – மனைவி தற்காலிகமாக பிரிந்திருக்க நேரிடும். விவாக ரத்து சம்பந்தமான வழக்குகள், வாழ்க்கையில், விரக்தியை ஏற்படுத்தும்.
உத்தியோகம்: சித்திரை 28 (11-5-2025)-ஆம் தேதி மிதுன ராசிக்கு மாறும் குரு பகவான், தனது 9-ம் பார்வையினால், கும்ப ராசியில் அமர்ந்துள்ள சனியும் ராகுவையும் பார்வையிடுகிறார். “குரு பார்வை கோடி தோஷத்தைப் போக்கும்!” -என்பது ஆன்றோர் வாக்காகும். அலுவலகத்தில் வேலைச் சுமையும், பொறுப்புகளும் சக்திக்கு மீறியதாக இருப்பினும், அதற்கேற்ற ஊதியம் கிடைக்கும். தற்கால தசா – புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், சிறு பதவியுயர்விற்கும் வாய்ப்புள்ளதை கிரக நிலைகள் குறிப்பிட்டுக்காட்டுகின்றன. வெளிநாடு சென்று, பணியாற்ற வேண்டும் என்ற விருப்பமிருப்பின், அதற்கான முயற்சிகளில் இப்போது இறங்கலாம். வெற்றி கிடைப்பது உறுதி.
தொழில், வியாபாரம்: உங்கள் உற்பத்தியை அதிகரிப்பதற்கும், புதிய விற்பனை நிலையங்களைத் திறப்பதற்கும் ஏற்ற வருடம் இந்த விசுவாவசு புத்தாண்டு! ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாடுகளில் பிரசித்திப் பெற்ற வர்த்தக நிறுவனங்களிடமிருந்து, கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும். ஒருசிலர், வியாபாரம் சம்பந்தமாக, வெளிநாடு சென்று வரும் சாத்தியக்கூறும் உள்ளது. இத்தமிழ்ப் புத்தாண்டு முழுவதும் ஜீவன காரகராகிய செவ்வாயும், வர்த்தகத் துறைக்கு சம்பந்தப்பட்ட மற்ற கிரகங்களும், சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். பலர் பிரசித்திப் பெற்ற வர்த்தக நிறுவனங்களைச் சென்று, பார்த்துவர வாய்ப்புகளும் கிட்டும் என்பதையும் கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன.
கலைத் துறையினர்: விசுவாவசு புத்தாண்டு முழுவதும், கலைத்துறைக்கு அதிகாரம் கொண்டுள்ள அனைத்து கிரகங்களும் – குறிப்பாக, சுக்கிரன் – சுப பலம் பெற்று சஞ்சரிக்கின்றன. கலைத்துறை , புத்துணர்ச்சியும், புத்துயுரும் பெறும். திரைப்படத் துறையினருக்கு, தொடர்ந்து கவலையளித்துவந்த பின்னடைவு, படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும். புதிய தயாரிப்புகள் லாபகரமாக இருக்கும். சரித்திர நிகழ்ச்சிகளைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்படும் படங்கள் பிரபலமாகும். நல்ல வசூலையும், நல்லாதரவையும் பெற்றுத் தரும்.
அரசியல் துறையினர்: புரட்டாசி 24 (10-10-2025)-லிருந்து ஐப்பசி 16 (2-11-2025) வரை கிரக நிலைகள் உங்களுக்குச் சாதகமாக இல்லை. அதற்குப் பிறகு, படிப்படியாக நன்மைகள் ஏற்படும். தசா, புக்திகள் அனுகூலமாக இல்லாவிடில், தற்போதுள்ள அரசியல் கட்சியிலிருந்து வெளியேறவேண்டியிருக்கும். கட்சியில் எதிர்ப்புகளும், மறைமுகச் சூழ்ச்சிகளும் உருவாகும். என்றோ செய்த தவறுகள், இப்போது வெளிவரும். ஒருசிலருக்கு, வழக்குகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். உணர்ச்சிவசப்படாமல், நிலைமையைச் சமாளிப்பது நல்லது.
மாணவ – மாணவியர்: புரட்டாசி 16 (2-10-2025) வரை கல்வி முன்னேற்றத்தில் எவ்விதத் தடங்கல்களும் இராது. பாடங்களில் ஆர்வத்துடன் மனம் ஈடுபடும். நினைவாற்றல், கிரகிப்புத் திறன் ஆகியவை அதிகரிக்கும். புரட்டாசி 17 (3-10-2025)-லிருந்து, படிப்பில் கவனக் குறைவு ஏற்படக்கூடும். ஆரோக்கியத்திலும், பின்னடைவு ஏற்படக்கூடும். தை மாதம் 7-ம் தேதியுடன் தோஷம் நீங்கிவிடுவதால், மீண்டும் பாடங்களில் ஆர்வம் மேலிடும். அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிற்குச் சென்று, தரிசித்துவிட்டு வந்தால், தோஷம் நீங்கும்.
விவசாயத் துறையினர்: சித்திரைமுதல் வாரத்திலிருந்து, ஆவணி முடியும் வரை, அதிக வெயிலினாலும், பணப் பற்றாக்குறையினாலும், வயல் பணிகளில் பின்னடைவு ஏற்படும். புரட்டாசி (2025)முதல், புத்தாண்டு முடியும் வரை, பூமி காரகரான செவ்வாய் உள்ளிட்ட அனைத்து கிரகங்களும் சுபபலம் பெற்று மாறுவதால், மீண்டும் விவசாயப் பணிகளில் உற்சாகம் மேலிடும் நல்ல விளைச்சலும், வருமானமும் கிடைக்கும். ஐப்பசி மாதம் முதல், கார்த்திகை முடியும் வரையில், அதிக மழையினால் பயிர்கள் சிறிது பாதிக்கப்படக்கூடும். இருப்பினும், சமாளித்துவிடுவீர்கள் கால்நடைகளின் பராமரிப்பில், செலவுகள் அதிகரிக்கும். பழைய கடன்கள் கவலையை அளிக்கும். மார்கழி முதல் கிரக நிலைகள் அனுகூலமாக மாறுவதால், பங்குனி முடியும் வரை, விளைச்சலும் வருமானமும் திருப்திகரமாக இருக்கும். ஐப்பசி மாதம் முதல், கார்த்திகை முடியும் வரை, வயல் பணிகளில் பயிர்கள்மீது கவனமாக இருத்தல் அவசியம். அதிக தண்ணீர்வரத்தினால், பயிர்கள் சேதமடையக்கூடும்.
அறிவுரை: முன்னெச்சரிக்கை-நடவடிக்கைகள் தக்க தருணத்தில் எடுப்பது பயிர்கள் சேதமாவதைத் தடுப்பதற்கு உதவும்.
பரிகாரம்: பூமிகாரகரான, செவ்வாயின் பரிகாரத் திருத்தலம், வைதீஸ்வரன் கோயில். செவ்வாய்க்கிழமைகளில், நெய் தீபம் ஏற்றிவைத்து, தரிசித்துவிட்டு வந்தால், தேவைக்கு அதிக மழை பெய்வதைத் தடுக்கலாம். ஆண்டாள் பாசுரமாகிய, “ஆழி மழைக் கண்ணா….!” என்ற திருப்பாவை பாசுரத்தைச் சொல்லி வந்தாலும், பலன் கிட்டும். எளிய தமிழில்தான் இது உள்ளது. ஒரு சமயம், கோவை மாவட்டத்தில் தொடர்ந்து பல மாதங்களாக மழை பொய்த்ததால், மொண்டிப்பாளையம் ÿவெங்கடேச பெருமாள் கோயிலில் இத்தமிழ்ப் பாசுரத்தை பக்தி சிரத்தையுடன் தொடர்ச்சியாகச் சில மணிநேரம் சொல்லிவந்ததால், உடனடியாக மழை “கொட்டோ கொட்டென்று ” கடும் மழை கொட்டியதே சான்று! அந்த அதிசயத்தை செய்தியாக கண்ணாடி பிரேம் செய்து திருக்கோயிலில் அனைவரும் காணும் வண்ணம் வைத்திருக்கின்றார்கள்.