(சித்திரை 3ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ம் பாதம் வரை)
குடும்பம்: நம்மிடமிருந்து, தற்போது விடைபெறும், குரோதி தமிழ் ஆண்டு, துலாம் ராசி அன்பர்களுக்கு, சோதனையான ஆண்டாகும் என்பதை கிரக நிலைகள் சுட்டிக்காட்டுகின்றன. அத்துன்பங்களிலிருந்து விடுபட்டு, நிம்மதியான ஆண்டாகும் இந்த விசுவாவசு புத்தாண்டு என்பதை கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன. குறிப்பாக, ஆேராக்கியத்தில் நல்ல அபிவிருத்தி ஏற்படும். மன நிம்மதியைப் பாதித்து வந்த பல குடும்பப் பிரச்னைகள் நல்லபடி தீரும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றைத் தீர்த்து, நிம்மதி பெற வழிபிறக்கும். திருமண முயற்சிகளில் தொடர்ந்து ஏற்பட்டுவந்த தடங்கல்கள் விலகி வரன் அமையும். இந்தாண்டில் கருத்தரிக்கும் பெண்மணிகளுக்கு சுகப் பிரசவம் காத்துள்ளது. இப்புத்தாண்டில் ஓர் சூட்சுமம் மறைந்திருப்பதையும் குரு – சுக்கிரனின் சஞ்சார நிலைகள் வெளிப்படுத்துகின்றன. அதாவது, இந்த விசுவாவசு புத்தாண்டில், பிறக்கும் குழந்தைகளில் பெரும்பாலும் ஆண்குழந்தைகளாகவே இருக்கும் என்பதே அந்த ரகசியமாகும் (ஆதாரம் : “பூர்வ பாராசர்யம்” எனும் மிகப் புராதன ஜோதிடக் கிரந்தம்). பலருக்கு, சொந்த வீடு அமையும்.
உத்தியோகம்: விசுவாவசு புத்தாண்டில், பணியாற்றும் இடத்தில் நல்ல மாறுதல்களைக் காணலாம். மேலதிகாரிகள் நியாயமாக நடந்துகொள்வார்கள். பல இளைஞர்களுக்கும், பெண்மணிகளுக்கும் நல்ல வேலை கிடைக்கும். அதனால், பல குடும்பங்களில் பணக் கஷ்டம் தீர்ந்து, மகிழ்ச்சி நிலவும். வெளிநாடு சென்று, பணியாற்ற விருப்பமிருப்பின், அந்த ஆசை எளிதில் நிறைவேற்றிவைப்பார்கள், சனி பகவானும், சுக்கிரனும்! இந்த நன்மைகள் இப்புத்தாண்டு முழுவதும் நீடிக்கும்.
தொழில், வியாபாரம்: குரோதிப் புத்தாண்டில், ஏற்பட்ட நஷ்டங்களை, விசுவாவசுப் புத்தாண்டு சரிசெய்துவிடும் என கிரக நிலைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சந்தை நிலவரம் உதவிகரமாக இருக்கும், இப்புத்தாண்டு முழுவதும்! அமெரிக்க நாட்டின் புதிய இறக்குமதி வரிகள், உங்கள் ஏற்றுமதியைப் பாதிக்காது என கிரக நிலைகள் உறுதிசெய்கின்றன. அளவோடு புதிய முயற்சிகளிலும், விஸ்தரிப்புத் திட்டங்களிலும் முதலீடு செய்யலாம்.
கலைத் துறையினர்: சித்திரை மாதம் முதல், ஐப்பசி 2-ம் தேதி வரை வருமானம் சுமாராகத்தான் இருக்கும் என கலைத் துறைக்குப் பொறுப்பேற்றுள்ள கிரகங்களின் சஞ்சார நிலைகள் குறிப்பிட்டுக்காட்டுகின்றன. ஐப்பசி 3-ம் தேதியிலிருந்து, வருமானம் படிப்படியாக உயரும். சிலருக்கு, வெளிநாடுகளுக்குச் சென்று, அங்கு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பும், அவற்றின் மூலம் வருமானம் உயர்வும் கிட்டும். ஆண்டின் முதல் பகுதியான ஆறு மாதக் காலம் சிக்கனமாக இருத்தல் அவசியம் என்பதையும் கிரக நிலைகள் குறிப்பிட்டுக்்காட்டுகின்றன. நாம் எப்பொழுதெல்லாம், நம் வாழ்க்கையின் எந்தெந்த விஷயங்களில் முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை எடுத்துக்காட்டி, நமக்கு உதவுகிறது, “ஜோதிடம்” எனும் ஒப்புயர்வற்ற வானியல் கலை!
அரசியல் துறையினர்: விசுவாவசு தமிழ் புத்தாண்டின் சித்திரை மாதம் முதல், புரட்டாசி முடியும் வரை அரசியல் துறையினருக்கு, “அஸ்தமன காலம்” எனக் கூறுகிறது, ஜோதிடக் கலை! ஐப்பசி மாதத்திலிருந்து, மீண்டும் கட்சிப் பணிகள் தீவிரமாகும். தொண்டர்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். நீங்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டிய காலகட்டம் இது என்பதை கிரக நிலைகள் எடுத்துக் காட்டுகின்றன. ஏனெனில், உங்களைத் தங்கள் கட்சிக்கு இழுப்பதற்கு, செல்வாக்கு மிகுந்த அரசியல் கட்சி ஒன்று, தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இப்போது நீங்கள் எடுக்கும் முடிவுதான், உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கவுள்ளது. எதையும், தீர ஆராய்ந்து பார்த்து, முடிவெடுப்பது அவசியம் என்பதை சுக்கிரன் மற்றும், சனி பகவானின் சஞ்சார நிலைகள் எச்சரிக்கை செய்கின்றன.
மாணவ – மாணவியர்: விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டு ஆரம்பத்திலிருந்து, புரட்டாசி முடியும் வரையில் கல்வித் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள கிரகங்கள் சுப பலம் பெற்றுள்ளதால், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பாடங்களில் மனம் ஆர்வத்துடன் ஈடுபடும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று மகிழ்வீர்கள். ஐப்பசி மாதத்திலிருந்து, பங்குனி முடியும் வரை, படிப்பில் சிறிது கவனக் குறைவு ஏற்பட சாத்தியக்கூறு உள்ளது. பிற மாணவ – மாணவியருடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்தல் அவசியம். விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவமணிகள், கட்டுப்பாடான பழக்க – வழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரங்களில் படிப்பது, ஓய்வெடுப்பது, உறங்குவது, விளையாடுவது என்பதில் கவனமாக இருந்தால் போதும்.
விவசாயத் துறையினர்: புரட்டாசி முடியும் வரையில், விவசாயத் துறையுடன் தொடர்புள்ள அனைத்து கிரகங்களும், சுப பலம் பெற்றுத் திகழ்வதால், நல்ல விளைச்சலும், வருமானமும் கிடைக்கும். கால்நடைகள் அபிவிருத்தியடையும். நவீன விவசாய உபகரணப் பொருட்கள் கிடைப்பது, வயல் பணிகளுக்கு உதவிகரமாக அமையும். பழைய கடன்கள் தொடர்ந்து தொல்ைல தரும். தண்ணீர்ப் பற்றாக்குறை அறவே இராது! ஐப்பசி மாதம் முதல், பங்குனி மாதம் முடியும் வரையில், எதிர்பாராத சில பிரச்னைகளை நீங்கள் சந்திக்க வேண்டிவரும். அதிக தண்ணீர்வரத்தினால், பயிர்கள் சேதமடையக்கூடும்.
பெண்மணிகள்: பெண்மணிகளின் மன நிம்மதியைப் பாதித்துவந்த பல குடும்பப் பிரச்னைகள் இப்புத்தாண்டில் நல்லபடி தீர்ந்து, மன அமைதி ஏற்படும். மணமாலைக்குக் காத்துள்ள கன்னியருக்கு, தடங்கல்கள் விலகி, நல்ல வரன் அமையும். வேலையில்லாத நங்கையருக்கு, இப்புத்தாண்டில் நல்ல வேலை கிடைக்கும். சுக்கிரன் உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிப்பது, பெண்மணிகளுக்கு பல நன்மைகளைப் பெற்றுத் தரக்கூடிய கிரக சஞ்சார நிலையாகும்.
அறிவுரை: ஐப்பசி மாதத்திலிருந்து, திட்டமிட்டு செலவு செய்வது, நல்லது. இக்காலகட்டத்தில், தேவையற்ற அலைச்சல்களையும் தவிர்க்கவும்.
பரிகாரம்: உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில், சனிக்கிழமைதோறும், மாலை நேரத்தில், ஒருமண் அகலில் எள் எண்ணெய் தீபம் ஏற்றி வந்தால் போதும். ஒவ்வொரு துளி எண்ணெயின் பரிகார சக்தியும் அளவற்றது.