பூரட்டாதி 4ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி வரை
குடும்பம்: ஏழரைச் சனியின் ஆரம்பப் பிடியில் உள்ள உங்களுக்கு, விசுவாவசு தமிழ் புத்தாண்டு நல்ல நிகழ்ச்சியுடன் ஆரம்பமாகிறது. ஜென்ம ராசியில் அமர்ந்து, உங்களை பல மாதங்களாக வருத்திவந்த ராகு, சித்திரை மாதம் 13-ஆம் (26-4-2025) தேதியன்று கும்ப ராசிக்குச் செல்வது, மிகவும் அனுகூலமான கிரக மாறுதலாகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல அபிவிருத்தி ஏற்படும். பல குடும்பப் பிரச்னைகள் நல்லபடி தீரும். கணவர் – மனைவியரிடையே அந்நியோன்யம் ஓங்கும். ராசிநாதன் திருதீய (3) ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும், அவரால் எவ்விதக் கெடுதலும் ஏற்படாது! ஏனெனில், அவர் உங்களுக்கு ராசிநாதனாவார். “தன் குழந்தைக்கு தீங்கிழைக்கும் தாய் இல்லை…!” என்பதை உதாரணமாகக் கூறுகிறது, “ஜோதிட ரத்னாகரம்” எனும் மிகப் புராதன ஜோதிடக் கிரந்தம். சித்திரை 28-ம் (11-5-2025) தேதியன்று உங்கள் ராசி நாதனாகிய குரு பகவான், மிதுன ராசிக்கு மாறுகிறார்! உங்கள் ராசிக்கு, நாதனாகத்திகழ்வதால், அவர் தீங்கு ஏற்படுத்த மாட்டார்.
உத்தியோகம்: மாசி 22-ஆம் (6-3-2026) தேதியன்று சனி பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு மாறுகிறார். அதுவரை, உத்தியோகத்தில், பணிச் சுமையும், அலைச்சலும் அதிகமாக இருப்பினும், மேலதிகாரிகளின் ஆதரவு பணிகளில் ஓரளவு திருப்தியை ஏற்படுத்தும். உங்கள் ராசி நாதன், விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டு முழுவதும் அனுகூலமாக இல்லை! ஆதலால், பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவற்றை எதிர்பார்ப்பதில் பயனில்லை! சிலருக்கு, விருப்பத்திற்கு எதிரான இடமாற்றம் ஏற்படக்கூடும். ஆயினும், வரும் ஒருவருடக் காலத்திற்கு உங்கள் பணிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
தொழில், வியாபாரம்: சித்திரை 13-ஆம்
(26-4-2025) அன்று ராகு, ஜென்ம ராசியை விட்டு, கும்ப ராசிக்கு மாறுவது, தக்க தருணத்தில் ஏற்படும் “வரப்பிரசாதம்” ஆகும். ஏற்கெனவே ஏழரைச் சனியின் பிடியிலுள்ள உங்களுக்கு, ராகு, ஜென்ம ராசியை விட்டு விலகுவது மிகவும் அனுகூலமான கிரக மாறுதலாகும். அதே தருணத்தில் ராசிக்கு, ருண, ரோக, சத்ரு ஸ்தானமாகிய சிம்மத்திற்கு கேது மாறுவதும் யோக பலன்களைக் குறிக்கிறது. தொழிலில் அலைச்சல் அதிகமாக இருப்பினும், அதைக்கேற்ற லாபத்தைப் பெற்றுத் தருவார்கள். கடினமான போட்டியையும் நீங்கள் சமாளித்துவிடுவீர்கள். கருத்து வேற்றுமையினால், சில கூட்டாளிகள் விலகிவிடக்கூடும்.
கலைத் துறையினர்: ஏழரைச் சனி நீடித்தாலும், ராகு – ஜென்ம ராசியை விட்டு விலகுவது நன்மை செய்யும். சுக்கிரன் சுபபலம் பெற்றுத் திகழ்வதால், விசுவாவசு தமிழ் புத்தாண்டு முடியும் வரையில், வாய்ப்புகளும், வருமானமும் திருப்திகரமாக இருக்கும், ஐப்பசி மாதம் வெளிநாடு சென்று, கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பும் கிட்டும். இப்புத்தாண்டில், அலைச்சல்கள் அதிகமாக இருப்பினும், உங்கள் பொருளாதாரத்தை சரி செய்துகொள்ள நல்ல வாய்ப்புகள் கிடைக்கவிருப்பதை கிரக நிலைகள் உறுதி செய்கின்றன.
அரசியல் துறையினர்: சித்திரை 13(26-4-2025) அன்று, ராகு ஜென்ம ராசியை விட்டு விலகுகிறார். அதே தருணத்தில், கேது சிம்மத்தில் பிரவேசிப்பதும் நன்மை செய்யும். இதுவரை ராகுவின் நிலையினால், உங்களைப் புறக்கணித்துவந்த மேலிடத் தலைவர்கள், இப்போது உங்கள் ஒத்துழைப்பை நாடி வருவார்கள். கட்சியில் செல்வாக்கு உயரும். புதிய பொறுப்புகள் உங்களிடம் ஒப்படைக்கப்படும்.
மாணவ – மாணவியர்: விசுவாவசு தமிழ் புத்தாண்டில் கிரக நிலைகள் உங்களுக்குச் சாதகமாக சஞ்சரிக்கின்றன. ஐப்பசி 7-ம் தேதி வரை (24-10-2025) படிப்பில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும். விளையாட்டுகள், பேச்சு, கட்டுரைப் போட்டிகளிலும் வெற்றிக் கனியை எளிதில் பிடித்துவிடுவீர்கள்! ஐப்பசி 8-ம் (25-10-2025) தேதியிலிருந்து, பங்குனி 23-ம் (6-4-2026) தேதி வரையில் படிப்பில் சிறிது பின்னடைவு ஏற்படக்கூடும். இக்காலகட்டத்தில், பிற நண்பர்களுடன் நெருங்கிப் பழகுவது, ஊர் சுற்றுவது ஆகியவற்றைத் தவிர்ப்பது அவசியம். உங்கள் கல்வி முன்னேற்றத்தை இது பாதிக்கும்.
விவசாயத் துறையினர்: விவசாயத் துறைக்கு அதிகாரம் படைத்த கிரகங்கள், ஐப்பசி முடியும் வரையில் சுப பலம் பெற்றுத் திகழ்வதால், விசுவாவசு தமிழ் புத்தாண்டில், நல்ல விளைச்சல் கிடைக்கும். உங்கள் விளைபொருட்களுக்கு, சந்தையில் நல்ல விலையும், லாபமும் கிட்டும். பழங்கள், மலர்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியும் அதிகரிக்கும்.
பெண்மணிகள்: சுக்கிரனும், செவ்வாயும், அனுகூலமாக சஞ்சரிப்பதால், விசுவாவசு தமிழ் புத்தாண்டில், பல நன்ைமகள் உங்களை மகிழ்விக்கவுள்ளன. மாசி 22-ம் (6-3-2026) தேதியன்று ஜென்மச் சனி ஆரம்பிப்பதால், ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம்.
அறிவுரை: தேவையற்ற அலைச்சலைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் இருக்கட்டும். தரக்குறைவான இடங்களில் உண்ண வேண்டாம். இரவு நேரத்தில் வாகனம் ஓட்ட வேண்டாம்
பரிகாரம்: திருநள்ளாறு தரிசனம் மிகவும் அவசியம். முடியாதவர்கள், சனிக்கிழமைகளில் மட்டும் ஒருபொழுது உணவருந்தி உபவாசமிருத்தல் வேண்டும்.