விசாகம் 4ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை வரை
குடும்பம்: இந்த விசுவாவசு தமிழ் புத்தாண்டின் ஆரம்பத்திலேயே, அர்த்தாஷ்டக ராசியில் உள்ள சனியுடன், ராகுவும் சேருகிறார். ராசிக்கு, குரு பகவானின் பார்வையும் கிடைக்கிறது! மாசி 22-ஆம் (6-3-2026) தேதியன்று, சனி பகவான், ராகுவை விட்டு விலகி, மீன ராசிக்கு மாறிவிடுகிறார்! சென்ற இரண்டரை ஆண்டுகளாக, சனியினால் ஏற்பட்டுவந்த தோஷம் இப்போது விலகிவிடுகிறது. ராகு ஒருவரால் மட்்டுமே தோஷம் நீடிக்கிறது. ஆரோக்கியத்தில் நல்ல அபிவிருத்தியைக் காணலாம். மன நிம்மதியைப் பாதித்து வந்த பல குடும்பப் பிரச்னைகள் நல்லபடி தீரும். விவாக முயற்சிகளில் ஏற்பட்டுவந்த தடங்கல்கள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல அபிவிருத்தியைக் காணலாம். இத்தமிழ்ப் புத்தாண்டு முடியும் வரையில், குடும்பத்தில் மன நிறைவும், நிம்மதியும் நீடிக்கும்.
உத்தியோகம்: மாசி 21-ஆம்் (5-3-2026) தேதி வரையில், சனி பகவானின் அர்த்தாஷ்டக தோஷம் நீடிக்கிறது. அதன் பிறகு, சனி பகவான், மீன ராசிக்கு மாறிவிடுவதால், அலுவலகப் பிரச்னைகள் நல்லபடி தீரும். அதுவரை பொறுமை வேண்டும். மேலதிகாரிகளின் கண்டிப்பு கவலையை அளிக்கும் உங்களுக்கு நியாயமாக அளிக்கவேண்டிய ஊதிய உயர்வு, எவ்விதக் காரணமுமில்லாமல் மறுக்கப்படும். தசா, புக்திகள் அனுகூலமற்று இருப்பின், வேலையில் மாறுதல் ஏற்படக்கூடும். விசுவாவசு தமிழ் புத்தாண்டில், உணர்ச்சிவசப்படுவதையும், அவசர முடிவுகளையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
தொழில், வியாபாரம்: புரட்டாசி மாதம் முடியும் வரை, செய்-தொழிலில் நியாயமற்ற போட்டிகள் நீடிக்கும். சந்தை நிலவரம் சாதகமாக இராது. உங்கள் பொருட்களுக்கு, நல்ல விலை கிடைப்பது சற்று கடினமே! உங்கள் உற்பத்தியை அளவோடு நிறுத்திக் கொள்வது நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்க்க உதவும். ஐப்பசி மாதத்திலிருந்து உங்களுக்கு நல்லகாலம் பிறக்கிறது – கிரக சஞ்சார நிலைகளின்படி! அப்போது, புதிய முதலீடுகளில் ஈடுபடலாம். புதிய விற்பனை நிலையங்கள் திறப்பதற்கும் நல்ல வாய்ப்புள்ளது. நிதிநிறுவனங்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். பங்குனி – 2026 முடியும் வரை, கிரக நிைலகள் சாதகமாக அமைந்துள்ளன.
கலைத் துறையினர்: கலைத் துறையினருக்குக் கைகொடுத்து, உதவுவது சுக்கிரன், குரு மற்றும் புதன் ஆகிய கிரகங்களே! அவ்வப்போது, கோள்சார ரீதியில், சனி பகவானும், நன்மைகளைச் செய்வார். புரட்டாசி முடியும் வரையில், கிரக நிலைகள் அனுகூலமாக இல்லை! அதன் பிறகு, சாதகமாக மாறுகின்றனர். அளவோடு வாய்ப்புகள் கிடைக்கும். தமிழ் புத்தாண்டின் முதல் ஆறு மாதக் காலம், குறைந்த வருமானத்தில் செலவுகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும். எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் ஏமாற்றத்தையளிக்கும். அதன் பிறகு, வருடம் முடியும் வரையில், நல்ல வாய்ப்புகள் கைகொடுக்கும். உங்கள் பொருளாதாரத்தை இப்போது சீர்செய்துகொள்ள முடியும்.
அரசியல் துறையினர்: விருச்சிக ராசியில், பிறந்துள்ள அன்பர்களுக்கு, கிரக நிலைகளின்படி, ஐப்பசி மாதம் முதல் வாரத்திலிருந்து, பல நன்மைகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். அதுவரை, மனதில் நிம்மதி இராது. உட்கட்சிப் பூசல்களில் தேவையில்லாமல், உங்கள் பெயர் அடிபடும். மேல்மட்டத் தலைவர்களும் உங்களைச் சந்தேகிப்பார்கள். புரட்டாசி மாதம் முடியும் வரையில், உங்கள் பேச்சுகளில் நிதானம் வேண்டும். உங்களைத் தங்கள் கட்சிக்கு இழுப்பதற்கு பிற கட்சியினர் முயற்சி செய்வார்கள். நீங்களே விலகியிருந்தாலும், உங்கள் கட்சித் தலைவர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை குறையும். மிகவும் ஜாக்கிரதையாக நீங்கள் நடந்துகொள்ளவேண்டிய தருணம் இது. ஐப்பசி மாதத்திலிருந்து தோஷம் விலகிவிடுவதால், அதன் பிறகு நீங்கள் நிம்மதியாக இருக்கலாம்.
மாணவ – மாணவியர்: விசுவாவசு தமிழ் புத்தாண்டில் ஆரம்பத்திலிருந்து, புரட்டாசி முடியும் வரை வித்யா காரகரான புதனும், கல்வித் துறைக்குத் தொடர்புள்ள, மற்ற கிரகங்களும் சுப பலம் பெற்று சஞ்சரிப்பதால், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களும், ஒத்துழைப்பும் பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தும். வெளிநாடு சென்று, விசேஷ உயர் கல்வி பெறுவதற்கு உதவிகள் கிட்டும். பலருக்கு, நேர்முகத் தேர்வில் நல்ல வேலை கிடைப்பதற்கு சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டுக் காட்டுகின்றன.
விவசாயத் துறையினர்: ஐப்பசி முடியும் வரை, கிரக நிலைகள் உங்களுக்குச் சாதகமாக நிலைகொண்டுள்ளனர். வயலைப் பார்த்தாலே இந்த உண்மையை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்! தண்ணீர் வசதி குறைவில்லாமல் கிடைக்கும். நவீன விவசாய வசதிகள் கிடைப்பதால், வயலில் உடல் உழைப்பு குறையும். கால்நடைகள் அபிவிருத்தியடையும். தசா, புக்திகள் அனுகூலமாக இருப்பின், புதிய விளைநிலம் வாங்கும் யோகமும் அமைந்துள்ளது. கார்த்திகை மாதம் முதல், அதிக வெயிலினால், உழைப்பு கடினமாகும்.
பெண்மணிகள்: சித்திரை 27-ஆம் (10-5-2025) தேதியன்று வரையில், குரு பகவான் சாதகமாக சஞ்சரிக்கிறார். பெண்மணிகளின் நன்மைகளுக்கு அதிகாரம் படைத்த சுக்கிரனும் சாதகமாக இருப்பதால், சித்திரை மாதம் கடைசி வாரம் வரையில், பல நன்மைகளை எதிர்பார்க்கலாம். கணவர் – மனைவியரிடையே அந்நியோன்யம் ஓங்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அதன் பிறகு, குடும்பத்தில் சிறு, சிறு பிரச்னைகள் ஏற்பட்டு, பின்பு, சமரசத்தில் முடியும். வேலை பார்க்கும் பெண்மணிகள் வைகாசி மாதத்திலிருந்து, வருடம் முடியும் வரையில், தங்கள் பணிகளில் கவனமாக இருத்தல் நலம் பயக்கும்.
அறிவுரை: முன்கோபத்தை அறவே விட்டுவிட்டு, அனைவருடனும் வளைந்து கொடுத்தும், உணர்ச்சிவசப்படுவதையும், அவசர முடிவுகளையும் கண்டிப்பாகத் தவிர்த்தும் இருக்கவேண்டும்.
பரிகாரம்: தினந்தோறும் ஏழை ஒருவருக்கு உணவளித்து வந்தாலும், காகத்திற்கு ஐந்து சாத உருண்டைகள் (எள், நெய், பருப்பு கலந்து) வைத்து வந்தால் போதும். சக்திவாய்ந்த பரிகாரம் இது.