(கிருத்திகை 2ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2ம் பாதம் வரை)
குடும்பம்: மார்கழி மாதம் 5-ம் தேதி (20-12-2025) வரையில், ஜென்ம ராசியில் குரு பகவான் சஞ்சரிப்பதால், குடும்பத்தில் சக்திக்கு மீறிய செலவினங்களும், நெருங்கிய உறவினர்களால் பிரச்னைகளும் கவலையை அளிக்கும். உத்தியோகம் காரணமாகவோ அல்லது பிரசவத்தை முன்னிட்டோ, கணவர் – மனைவி பிரிந்திருக்க நேரிடும். குடும்பத்தில் ஒற்றுமை குறையும். பல தருணங்களில், பணப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக, பிறர் உதவியை நாடவேண்டி வரும். திருமண முயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகும். ஆரோக்கியத்திலும் கவனமாக இருத்தல் நல்லது. சிறு விஷயங்களுக்குக்கூட, அதிகப் பிரயாசையும், அலைச்சலும் தேவைப்படும். வரவை விட, செலவுகள் அதிகமாக இருப்பதால், பிறர் உதவியை நாடவேண்டிவரும். கார்த்திகை மாதம் 11-ம் தேதி முதல், குடும்பச் சிரமங்கள் படிப்படியாகக் குறைய ஆரம்பிப்பதை அனுபவத்தில் பார்க்கலாம். குறிப்பாக, பண விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆேராக்கியமும் படிப்படியாக திருப்திகரமாக மாறும்.
உத்தியோகம்: ஜீவன ஸ்தானத்தில், சனி – ராகு கூட்டுச் சேர்க்கை ஏற்பட்டுள்ளதால், சக்திக்கு மீறிய பொறுப்புகளும், பணிச் சுமையும் மனதில் விரக்தியை ஏற்படுத்தும். மேலதிகாரிகளின் கண்டிப்பு, கவலையை அளிக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பது சற்று கடினமே! இத்தகைய தருணங்களில்தான், உணர்ச்சிவசப்படுவதையும், அவசர முடிவுகளையும் தவிர்க்க வேண்டும் என ஜோதிடக் கலை அறிவுரை கூறுகிறது. ஐப்பசி மாதம் முடியும் வரை, நீங்களுண்டு; உங்கள் பணிகள் உண்டு என்று இருத்தல் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிர்க்க உதவும். கார்த்திகை முதல் வாரத்திலிருந்து, சூழ்நிலையில் நல்ல மாற்றத்தைக் காணலாம். குரு பகவானின் சஞ்சார நிலையும், சுபப் பார்வையும் தக்க தருணத்தில் கைகொடுப்பதை இப்போது காணலாம். மேலதிகாரிகளின் ஆதரவும், நிர்வாகத்தினரின் பாராட்டுதல்களும் கிடைப்பது, மனதிற்கு உற்சாகத்தையளிக்கும். ஆேராக்கியத்திலும் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். இந்த முன்னேற்றம், பங்குனி மாதம் முடியும் வரையில் நீடிக்கும்.
தொழில், வியாபாரம்: கிரக நிலைகள் அனுகூலமாக இல்லாததால், புரட்டாசி முடியும் வரையில், வியாபாரத்தில் மந்த நிலையும் நியாயமற்ற போட்டிகளும் நிலவும். நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பும் தேவையான அளவிற்கு இல்லாததால், அடிக்கடி பணப் பிரச்னை ஏற்படும். சந்தை நிலவரமும், அனுகூலமாக இராது. ஐப்பசி மாதத்திலிருந்து, படிப்படியாக நல்ல முன்னேற்றத்தைக் காண முடியும். சனி – ராகுவின் கூட்டணியும், செவ்வாய், சுக்கிரனின் சஞ்சார நிலைகளும், விற்பனையில் நல்ல அபிவிருத்தியைப் பெற்றுத் தரும். உங்கள் பொருளாதாரத்தை சீர் செய்து கொள்ள அனுகூலமான காலகட்டம் இது! பங்குனி மாதம் முடியும் வரை, இந்நன்மைகள் நீடிக்கின்றன.
கலைத் துறையினர்: கிரக நிலைகளின்படி, ஐப்பசி மாதம் முதல் வாரம் வரையில் சற்று சிரமமான காலகட்டத்தை நீங்கள் சமாளிக்கவேண்டிவரும் எனத் தெரிகிறது. தேவையான அளவிற்கு வருமானம் கிடைப்பது, சற்று கடினமே! எதிர்பார்த்திருந்த நல்ல வாய்ப்புகள் கைநழுவிப்போகும். பல தருணங்களில், கடன் வாங்கவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படக்கூடும். ஐப்பசி மாதம், 2-ம் வாரத்திலிருந்து, படிப்படியாக நிலைமை மாறும்,. வருமானமும் அதிகரிக்கும். கர்நாடக சங்கீதக் கலைஞர்களுக்கு, கார்த்திகை மாதம் முதல் வாரத்திலிருந்து, அதிர்ஷ்ட காலகட்டம் ஆரம்பமாகிறது என்பதை சுக்கிரனின் நிலை எடுத்துக்காட்டுகிறது. உங்கள் பொருளாதார நிலையை சீர் செய்துகொள்ள அரிய சந்தர்ப்பம் இது. மக்களிடையே செல்வாக்கு உயரும்.
அரசியல் துறையினர்: புதுவருட ஆரம்பத்தில், கிரக நிலைகள் ஓரளவே உங்களுக்குச் சாதகமாக அமைந்துள்ளன. தசா, புக்திகள் அனுகூலமாக இல்லாவிடில், கடும் பிரச்னைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். எத்தருணத்திலும் நிதானத்தை இழந்துவிட வேண்டாம்.
மாணவ – மாணவியர்: புரட்டாசி மாதம் 12- தேதி வரை வித்யாகாரக கிரகங்கள் சுப பலம் பெற்றுத் திகழ்வதால், படிப்பில் மனதை ஊன்றிச் செலுத்த முடியும். அறிவாற்றலும், நினைவுத் திறனும் கைகொடுக்கும். உயர் கல்விக்கு நிதியுதவி கிடைக்கும். வெளிநாடு சென்று, விசேஷ பயிற்சி பெறுவதற்கு, அனுகூலமான காலகட்டமிது. புரட்டாசி 13-ம் தேதியிலிருந்து, வருடம் முடியும் வரை, பாடங்களில் மனதைச் செலுத்த இயலாதபடி, சபலங்கள் ஏற்படக்கூடும். கூடியவரையில், “கூடா நட்பை” தவிர்ப்பது அவசியம். வெளிநாடு சென்று உயர் கல்வி படிக்க விருப்பமிருப்பின், விசா கிடைப்பதில் தடங்கல்கள் ஏற்படும்.
விவசாயத் துறையினர்: புரட்டாசி மாதம் முடியும்வரை, விவசாயத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வயல் பணிகளில் உழைப்பு கடினமாக இருப்பினும், விளைச்சலும், வருமானமும் மனதை குளிர வைக்கும். தண்ணீர், உரம் போன்ற அடிப்படை வசதிகள் தடையின்றிக் கிடைக்கும். கால்நடைகள் சிறந்த அபிவிருத்தியை அடையும். ஐப்பசி மாதம் முதல், பங்குனி மாதம் 15-ம் தேதி வரை கிரக நிலைகள் சாதகமாக இல்லை. அதிக மழையினால், பயிர்கள் சேதமடையக்கூடும். கால்நடைகளின் பராமரிப்பில் செலவுகள் அதிகரிக்கும். பழைய கடன்களும் கவலையை அளிக்கும்.
பெண்மணிகள்: சித்திரை 28-ம் தேதியிலிருந்து (11-5-2025) குரு பகவான் அனுகூலமாக மாறுவதுடன், 5, 7, 9-ம் இடங்களையும் தனது சுபப் பார்வையினால், பலப்படுத்துவதால், அளவற்ற நன்மைகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். ஜீவன ஸ்தானத்தில், சனி – ராகு கூட்டுச் சேர்க்கை ஏற்பட்டுள்ளதால், ேவலை பார்க்கும் பெண்மணிகளுக்கு, வேலைச் சுமையும், பொறுப்புகளும் அதிகரித்தாலும், பதவியுயர்வு, ஊதிய உயர்வு ஆகிய நன்மைகள் ஏற்படும்.
அறிவுரை: ஜீவன ஸ்தானத்திற்கு சனி மற்றும் ராகுவினால் தோஷம் ஏற்படுவதால், அவரவர் பணிகளில் கவனமாக இருத்தல் அவசியம்.
பரிகாரம்: திருநாகேசுவரம், நாகமங்களா சேத்திர தரிசனம் கைமேல் பலனளிக்கும்.