உத்திரம் 2ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2ம் பாதம் வரை
குடும்பம்: சித்திரை 13-ம் தேதி (26-4-2025)யன்று ராகு, மீன ராசியை விட்டு, கும்ப ராசியிலுள்ள சனியுடன் சேர்ந்துகொள்கிறார். அதே நேரத்தில், மோட்ச காரகரான கேதுவும், கும்ப ராசிக்கு மாறுகிறார். இந்த கிரக மாறுதல், கன்னி ராசியினருக்கு மிகவும் அனுகூலமான கிரக நிைலயாகும். ராசிக்கு 6-ம் இடம் என்பது ருண (கடன்), ரோக (வியாதி), சத்ரு (எதிரி)ஆகியவற்றைக் குறிக்கும் இடமாகும். ராகு, சனியுடன், கும்ப ராசியில் இைணவது, கன்னி ராசியினருக்கு, சிறந்த யோக பலன்களை அளிக்கக்கூடிய நிலையாகும். அதேபோன்று, ஜென்ம ராசியைவிட்டு, கேது விலகியதும், கன்னி ராசியினருக்கு, மன நிம்மதியை அளிக்கக்கூடிய சஞ்சாரமாகும். நீண்ட காலமாக மன நிம்மதியைப் பாதித்துவந்த, கடனை அடைத்து, உங்கள் பொருளாதார நிலையை சீர்செய்துகொள்ள இனி வாய்ப்பினை உருவாக்கித் தருவார்கள், சனி பகவானும், ராகுவும்! சித்திரை 28-ம் (11-5-2025) தேதியன்று, குரு பகவான் மீன ராசிக்கு மாறி, தனது 9-வது சுபப் பார்வையினால், கும்ப ராசியிலுள்ள, சனியினாலும், ராகுவினாலும் ஏற்படும் நன்மைகளை அதிகரிக்கச் செய்கிறார். ஆரோக்கியம் நல்லபடியாகும். அறுவை சிகிச்சை இருப்பின், அதன் மூலம் பூரண குணம் கிடைக்கும். நெடுநாட்களாக மனத்தை அரித்துவந்த பழைய கடன்களை அடைத்து, நிம்மதி பெற வழிபிறக்கும். சொந்த வீடு பெற வேண்டும் என்ற உங்களது நெடுநாளைய ஆசை, இந்தத் தமிழ் புத்தாண்டில் நிறைவேறும். சப்தம ஸ்தானத்திற்கு, குரு பார்வை அமைந்திருப்பதால், கணவர் – மனைவி பரஸ்பர அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளிநாட்டில் வேலை பார்த்துவரும் பிள்ளை அல்லது பெண் அல்லது மாப்பிள்ளையின் எதிர்பாராத வரவு, குடும்பத்தில் மகிழ்ச்சியில் திளைக்க வைக்கும். திருமணமான பெண்கள் கருத்தரிப்பதற்கு உகந்த மாதம் இந்தச் சித்திரை!! மாசி மாதம் 22-ஆம் (6-3-2026) தேதியன்று சனி பகவான், கும்ப ராசியை விட்டு, மீனராசிக்கு மாறுகிறார். இம்மாறுதல் கன்னி ராசியினருக்கு, நன்மை தராது. மனைவியின் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். திருமண முயற்சிகளிலும் தடங்கல்கள் உருவாகும். சில தருணங்களில், தவறான வரனை நிச்சயித்துவிடும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. இந்நிலையில் கார்த்திகை 2-ம் (18-11-2025) தேதியன்று, குரு பகவானின் வக்கிர கதி ஆரம்பமாகி, மார்கழி 6-ம் (21-12-2025) தேதியன்று, குரு பகவான், மிதுன ராசிக்கு பிரவேசிக்கிறார். ஆயினும், வக்கிர, அதிச்சார கதிகளில், குரு பகவானுக்கு “பூர்வ ராசி பலன்” என ேஜாதிடக் கலையின் விதிகள் தெளிவாகவும், உறுதியாகவும் கூறியுள்ளன. ஆதலால், குரு பகவானின் இந்த ராசி மாறுதல், எவ்வித மாறுதலையும் ஏற்படுத்தாது (ஆதாரம்: “பிருஹத் ஜாதகம்”).
உத்தியோகம்: சனி பகவானுக்கு, “ஜீவன காரகர்” அதாவது, வாழ்க்கைக்கு அவசியமான, வருமானத்தை நிர்ணயிக்கும் உத்தியோகம், வியாபாரம், தொழில் ஆகியவற்றைத் தீர்மானிக்கும் கிரகமாவார் எனக் கூறுகின்றன “பூர்வ பாராசர்யம்” மற்றும் “பிருஹத் ஸம்ஹிதை” ஆகிய மிகப் பழைமையான ஜோதிடக் கிரந்தங்கள். மாசி 21-ஆம் தேதி (5-3-2026) வரை சனி மற்றும் ராகுவினால் நல்ல யோக பலன்கள் கிடைக்கும். மாசி 22-ஆம் (6-3-2026) தேதியன்று, சனி பகவான் சப்தம (7) ஸ்தானமாகிய மீனத்திற்கு மாறிவிடுவது, நன்மை தராது. அலுவலகத்தில் பின்னடைவு ஏற்படும். பொறுப்புகளில் தவறுகள் ஏற்படக்கூடும்.
தொழில், வியாபாரம்: தமிழ் புத்தாண்டின் ஆரம்பம் முதல், மாசி முடியும் வரையில், மிகவும் அனுகூலமான காலகட்டமாகும். நிதிநிலைமை மிகவும் திருப்திகரமாக உள்ளது, உற்பத்தியை அதிகரித்துக் கொள்ளலாம். சந்தை நிலவரம் திருப்திகரமாக இருக்கும். உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். பொருளாதாரத்தை சீர்செய்துகொள்ள ஏற்ற காலமிது. ஆயினும், பங்குனி மாதம் முதல், தொழிலில் பின்னடைவு ஏற்படும், தொழிலாளர்களினாலும், பிரச்னைகளையும், பண விஷயங்களில் கண்டிப்பு வேண்டும்.
கலைத் துறையினர்: கிரக நிலைகளின்படி, விசுவாவசு புத்தாண்டு, கலைத் துறையினருக்கு சாதாரணமான மாதமாகும் என்றே கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. வருமானம் ஒரே சீராக இருக்கும். மாசி 22-ஆம் (6-3-2026) தேதியிலிருந்து வருமானம் சற்று குறையக்கூடும். சிக்கனமாக இருத்தல் நல்லது. எதிர்பார்த்திருந்த வெளிநாட்டு நிகழ்ச்சிகள் ஏமாற்றத்தை அளிக்கும்.
அரசியல் துறையினர்: தமிழ் புத்தாண்டு ஆரம்பத்திலிருந்து, புரட்டாசி 23-ம் (9-10-2025) தேதி வரையில், கிரக நிலைகள் மிகவும் ஆதரவாக நிலைகொண்டுள்ளதால், கட்சியில் ஆதரவு பெருகும். மக்களிடையே செல்வாக்கு உயரும். செல்வாக்கு மிகுந்த பிரமுகர் ஒருவர், உங்கள் உதவியை நாடி வருவார். அதன் பிறகு, தை 24-ஆம் (7-2-2026) தேதி முதல், பங்குனி முடியும் வரை கட்சியில் எதிர்ப்பு உருவாகும். இதுவரை உங்களுக்கு வெகு நெருக்கமாக இருந்துவந்த முக்கிய மேலிடத் தவைர் ஒருவர் கருத்துவேற்றுமையினால், உங்களுக்கு எதிராகச் செயல்படுவார். அதனால், பல பிரச்னைகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.
மாணவ – மாணவியர்: சித்திரை 17-ம் தேதி (30-4-2025) முதல், கார்த்திகை 20-ஆம் (6-12-2025) தேதி வரையில் கிரக நிலைகள் உங்களுக்குப் பக்கபலமாக வலம் வருகின்றனர். பாடங்களில் ஆர்வம் மேலிடும். படித்தவற்றை நினைவில் பற்றிக்கொண்டு, தேர்வுகளில் சிறப்பாக எழுதி, உயர்ந்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள். அதன் பிறகும், கல்வியில் சிறந்த முன்னேற்றம் காண்பீர்கள் என்பதை கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன. குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால், இந்தத் தமிழ் புத்தாண்டு முழுவதும் கிரக நிலைகள், உங்களுக்குச் சாதகமாகவே சஞ்சரிப்பதால், வியக்கத்தக்க முன்னேற்றம் பெற்று உங்கள் பெற்றோர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள்.
விவசாயத் துறையினர்: சித்திரை ஆரம்பம் முதல், கார்த்திகை 19-ம் (5-12-2025) தேதி வரையில், அனுகூலமான காலகட்டமாகும். உழைப்பிற்கேற்ற விளைச்சலும், வருமானமும் கிட்டும். கால்நடைகள் அபிவிருத்தியடையும். பழைய கடன்கள் அடைபட்டு, பொருளாதாரம் நல்ல நிலையை எட்டும். கார்த்திகை 20-ஆம் (6-12-2025) தேதி முதல் தை மாதம் 2-ஆம் (16-1-2026) வரையில், கிரக நிலைகள் அனுகூலமாக இல்லை. கால நிலையில் ஏற்படும் எதிர்பாரா மாற்றங்களினால், பயிர்கள் பாதிக்கப்படக்கூடும் என்பதை கிரக நிலைகள் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. இது உங்கள் விளைச்சலையும், பொருளாதாரத்தையும் பாதிக்கும். எச்சரிக்கை அவசியம்.
பெண்மணிகள்: புத்தாண்டின் ஆரம்பம் முதல், புரட்டாசி மாதம் முடியும் வரை கிரக நிலைகள் உங்களுக்கு ஆதரவாக சஞ்சரி்க்கின்றனர். ஐப்பசி மாதம் முதல், தை மாதம் 2-ஆம் தேதி வரை கிரகங்கள் அனுகூலமாக இல்லை. இக்காலகட்டத்தில் குடும்பப் பிரச்னைகள் கவலையளிக்கும். வேலைபார்க்கும் பெண்மணிகளுக்கு, மன நிம்மதி குறையும்.
அறிவுரை: குடும்பப் பிரச்னைகள் தலைதூக்கும்போது, ஒருவருக்கொருவர் சற்று விட்டுக் கொடுத்து நடந்துகொண்டால் போதும்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில், பகல் உணவு ஒருபோது மட்டும் உண்டு, இரவில் உபவாசமிருப்பது கைமேல் பலனளிக்கும். இயலாதவர்கள், பால் – பழம் மட்டும் சாப்பிடலாம்.